முஸ்லிம்களின் அடிப்படைத் தேவைகள், அரசியல் உரிமைகளை மதிக்கின்ற சமூகமாக தமிழ் சமூகம் மாற வேண்டும்

0
136

தமிழ் – முஸ்லிம் மக்கள் இந்த மண்ணிலே நிம்மதியோடு அரசியல் தீர்வு பெற்று வாழ வேண்டுமாக இருந்தால் முஸ்லிம்களின் அடிப்படைத் தேவைகள், அரசியல் உரிமைகளை மதிக்கின்ற சமூகமாக தமிழ் சமூகம் மாற வேண்டும் என இராஜாங்க அமைச்சர் ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

தமிழ் – முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்வதன் ஊடாக வட கிழக்கு இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். மாறாக முஸ்லிம்களின் உணர்வுகளையும், உரிமைகளையும் ஒழித்து விட்டு அம்மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது. இந்த விடயத்தில் தமிழ் தலைமைகள் மிகத்தெளிவாக இருக்க வேண்டும்.

வடகிழக்கு பிரச்சினைக்கு தீர்வு காணப்படுவதாக இருந்தால் முஸ்லிம்களை தமிழ் மக்கள் கௌரவிக்க வேண்டும். முஸ்லிம்களின் உரிமைகளையும் பெற்றுக்கொடுப்பதற்கும், தேவைகளையும் நிவர்த்தி செய்வதற்கும் தமிழ் தலைமைகள் முன்வர வேண்டும்.

மாறாக தமிழ் தலைமைகள் தமது அரசியல் சுயலாபங்களுக்காக தமிழ் பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம், கோஷங்கள், விமர்சனங்களை முன்வைக்கின்றபோது ஒரு போதும் வடகிழக்குப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது.

தமிழ் – முஸ்லிம் மக்கள் இந்த மண்ணிலே நிம்மதியோடு அரசியல் தீர்வு பெற்று வாழ வேண்டுமாக இருந்தால் முஸ்லிம்களின் அடிப்படைத் தேவைகள், அரசியல் உரிமைகளை மதிக்கின்ற சமூகமாக தமிழ் சமூகம் மாற வேண்டும் என்றார்.