காணி அபகரிக்கப்படுவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும்.

0
420

நாம் காணி அதிகாரத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கையில் மறுபக்கத்தல் எமது காணி அபகரிக்கப்படுவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும்! – ஞா.சிறிநேசன் எம்.பி

நாங்கள் வருடக்கணக்கில் இங்கிருந்து காணி அதிகாரத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றோம், காணி அதிகாரத்​தை பேசிக்கொண்டிருக்கும்போது எமது வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல காணிகள் வனலாகா, வன ஜீவராசிகள் திணைக்களங்களாலும், மகாவலியாலும் மற்றும் அரச காணி, புனித தலங்களுக்கான நிலம் என்ற அடிப்படையிலும் இப்போது மறைமுகமாக விழுங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பிலுள்ள தமது அலுவலகத்தில் திங்கட்கிழமை (16ஆம் திகதி திங்கள்) நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் நான் அறிந்தவரைக்கும் கிழக்கு மாகாணத்தில் ஆணையாளராக இருக்கின்ற ஒருவர் வாகரையில் 500 ஏக்கர் காணியை படையினருக்கு வழங்க வேண்டும் என்று அவர் ஒரு கடிதம் அனுப்பியிருப்பதாக அறிய முடிகின்றது. இதேபோன்று ரணவிரு படையினருக்காக 25 ஏக்கர் காணியை வாகரை பிரதேசத்தில் வழங்க வேண்டும் எனும் செய்தியை அத்துடன் மட்டக்களப்பு புணானை கிழக்கு பிரதேசத்தில் உள்ளடக்கியதாக ஒரு பௌத்த நிலையத்தை நிறுவவேண்டும் எனும் செயற்பாடும் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக அறியக்கிடைக்கின்றது.

என்னவெனில், நல்லிணக்கம் ஏற்படவேண்டுமாக இருந்தால் நல்லிணக்கத்திற்கு எதிரான முரண்பாடான செயற்பாடுகளை செய்யக் கூடாது. ஆனால் இன்று நல்லிணக்கம் என்று சொல்லிக்கொண்டு மட்டக்களப்பில் மட்டுமல்ல அம்பாறை, திருகோணமலை வடக்கு கிழக்கு பிரதேசங்களில் காணிகள் ஏதோஒரு விதத்தில் பலவிதமாக அடையாளப்படுத்தப்படுகின்றது.

இதில் ஒன்று அரச காணி என்று சொல்லுகின்றார்கள், மகாவலி காணி என்று சொல்லுகின்றார்கள், எல்.ஆர்.சீ நிலம் என்று கூறுகின்றார்கள் இதைவிட வன பரிபாலன திணைக்களத்தின் காணி என்று சொலிகின்றார்கள், வன ஜீவராசிகளுக்குரிய நிலம் என்று சொல்கின்றார்கள் அதுமட்டுமல்ல புனித நிலம் என்றுகூட பல நிலங்கள் பிரகடனப்படுத்தப்பட்டு வருகின்றது.

எனவே இந்தப் பிரகடனத்தின் மூலமாக எதிர்காலத்தில் மக்களுக்கு குடியேறி வாழ்வதற்கு நிலம் இல்லாமல் போகக் கூடிய சூழ்நிலை இருக்கின்றது.

எனவே நாங்கவைருடக்கணக்கில் இங்கிருந்து காணி அதிகாரத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றோம் ஆனால் எமது பிரதேச காணிகள் மறைமுகமான பல வழிகளாலும் அபகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

இந்த விடயங்கள் உண்மையில் எமக்கு வேதனைக்குரிய விடயம், இது நல்லிணக்கத்தை ஏற்படுத்தாத விடயம். நாங்கள் இப்போது படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட, பிடிக்கப்பட்ட காணிகளை விடுவிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டிருக்கின்ற அதே வேளையில் புதிய புதிய காணிகளெல்லாம் பிடிபட்டு படையினர் வசம் செல்லுமாக இருந்தால் இங்கு நிரந்தரமானதொரு நல்லிணக்கம் இல்லாத சூழ்நிலை உருவாகும்.

அண்மையில் நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கூட நாங்கள் ஒரு தீர்மானத்தை ஏற்படுத்தியிருந்தோம், மட்டக்களப்பு மாவட்டத்தில் கொக்கட்டிச்சோலையில் ஆசிரியர் மத்திய நிலையம் ஒன்று படையினரின் முகாமாக உள்ளது, வவுணதீவு பிரதேசத்தில் பிரதேச சபைக்குரிய கட்டடம் பொலிஸ் நிலையமாக உள்ளது, குருக்கள்மடத்தில் பாடசாலைக்கு சொந்தமான காணி படையினர் வசம் உள்ளது, அதேபோன்று தாண்டியடியில் மயானக் காணி இப்போது விசேட அதிரடிப்படையினர் வசம் சென்று முகாமாக உள்ளது, வாகரை பிரதேசத்தில் கூட இப்படியான நிலை அதிகம் உள்ளது.

மக்கள் யுத்தகாலத்தில் பாதுகாப்பு என்றபோர்வையில் அதிகமான நெருக்குவாரங்களை சந்தித்திருந்தார்கள், இப்போது யுத்தம் முடிந்த பின்னரும் அதே நெருக்குவாரத்துக்குள் இருக்கின்றார்கள் என்றால் நல்லாட்சி என்பதற்கும் யுத்தகால சூழ்நிலை என்பதற்கும் அர்த்தமில்லமல் போய்விடும். எனவே படையினர் தமது கைக்குள் வைத்திருக்கின்ற காணிகளை விடுவிக்க வேண்டும்.

காணிகளை அநாவசியமாக அபகரிப்பதும் ஒருவகையில் ஜனநாயகரீதியான ஒரு உரிமை மீறலாகத்தான் பார்க்கப்படும், ஏனென்றால் இந்தக் காணிகள் எமது மக்களின் எதிர்கால அபிவிருத்திக்கு தேவையான ஒரு பொருளாதார காரணியாக இருக்கின்றது.

இன்று வாகரை பிரதேசத்தை போய் பார்த்தால் கடற்கரையை அண்டிய கஜிவத்த என்ற இடத்தில் ஒரு நீண்ட காணி கடற்படைக்கு சொந்தமாக்கப்பட்டிருக்கின்றது, அந்த இடத்தில் இருக்கும் கடற் பிரதேசங்கள் கூட அவர்களது கட்டுப்பாட்டுக்குள் செல்லப்போகின்றது, இப்போது இதனால் மீனவர்களுக்கு வாழ்வாதாரப் பிரச்சனை எழப்போகின்றது.

எனவே இப்படி காணிகளையும் வளங்களையும் மையமாக வைத்துக்கொண்டு பாதுகாப்பு என்ற பெயரில் நகர்த்தப்படும் ஒவ்வொரு செயற்பாடும் தமிழ் மக்களுக்கு இந்த நல்லாட்சிமீது சந்தேகத்தை எற்படுத்தியுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும், இதற்காக பாராளுமன்றத்தில் மாத்திரமல்ல அமைச்சரவை மற்றும் ஜனாதிபதி மட்டத்தில் பேசவேண்டும் முக்கியமாக இவ் விடயங்களை ஊடகங்கள் உள்ளபடி உண்மையாக வெளிக்கொண்டுவரவேண்டும் அத்தோடு நாங்கள் காணி விடயங்கள் தொடர்பில் கிழக்கு மாகாண காணி ஆணையாளரின் செயற்பாடுகளை தொடர்ந்தும் அவதானித்து வருகின்றோம். எனத் தெரிவித்தார்.