வவுனியா வளாகத்தைச் சேர்ந்த சுமார் 25 மாணவர்கள் வலுக்கட்டாயமாக மொட்டையடிக்கச் செய்யப்பட்டுள்ளனர்

0
1277
யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தைச் சேர்ந்த சுமார் 25 மாணவர்கள் வலுக்கட்டாயமாக மொட்டையடிக்கச் செய்யப்பட்டுள்ளனர் என்ற செய்தி இப்போது பரவத் தொடங்கி கடுமையான விமர்சனத்துக்குள்ளாகி விட்டது.
 
புதிதாக பல்கலைக்கழகத்தில் இணைந்து கொண்ட இந்த மாணவர்களே சிரேஷ்ட மாணவர்களின் வலுக்கட்டாயம் காரணமாக இவ்வாறு மொட்டையடித்துள்ளதாக தெரிய வருகிறது.
 
‘தங்களது கட்டளையை மீறும் பட்சத்தில் கனிஷ்ட மாணவிகள் முன்னிலையில்  அரை நிர்வாணமாக நிறுத்தி துன்புறுத்தப்படுவீர்கள்’ என்று சிரேஷ்ட மாணவர்கள் அச்சுறுத்தியதனையடுத்து 25 கனிஷ்ட மாணவர்களும் தங்களது தலைகளை மொட்டடையடித்துள்ளனர்.
 
குறித்த 25 மாணவர்களும் வுனியாவிலுள்ள சிகை அலங்கார நிலையம் ஒன்றுக்குச் சென்று, தங்களுக்கு  மொட்டையடிக்குமாறு உரிமையாளரைக் கேட்டுள்ளனர்.
 
சிகை அலங்கார நிலைய உரிமையாளரோ ஒருவருக்கு 500 ரூபா வீதம் வழங்க வேண்டுமென்று தெரிவித்துள்ளார். 
 
அந்த மாணவர்களில் பலர் வசதி குறைந்த வருமானங்களைக்  கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பதனையோ அல்லது தான் அவர்களுக்கு மொட்டையடிக்காவிட்டால் அந்த மாணவர்கள் எதிர்கொள்ளவுள்ள அவமானத்தையோ தெரிந்து கொண்டிராத நிலையிலேயே குறித்த சிகையலங்கார நிலைய உரிமையாளர் இவ்வாறு ஒருவருக்கு 500 ரூபா வீதம் கோரியுள்ளார்.
 
அப்போது அந்த மாணவர்கள் தங்களது நிலைமையை அவருக்கு விளக்கியுள்ளனர். தலையை மொட்டையடியாமல் சென்றால் தாங்கள் எதிர்கொள்ளவுள்ள அவமானத்தை  அவருக்கு தெளிவுபடுத்தியுள்ளனர்.
 
மாணவர்களின் பரிதாப நிலையைக் கண்டு  மனம் கசிந்த குறித்த  சிகையலங்கார உரிமையாளர், ‘நீங்கள் 500 ரூபா வீதம் தர வேண்டாம். ஒருவருக்கு 50 வீதம் தாருங்கள்’ எனக் கேட்டுள்ளார்.
 
சிகை அலங்கார உரிமையாளரின் மனிதாபிமானத்தைக் கண்டு  அந்த கனிஷ்ட மாணவர்கள் மிக மகிழ்சியடைந்தவர்களாக தங்களது தலைகளை மொட்டையடித்துள்ளனர்.
 
முடி திருத்தும் சாதாரண நபருக்கு உள்ள மனிதாபிமானம், மொட்டையடிக்கக் கூறிய மாணவ சமூகத்திடம் இல்லாமல் போனமை  கவலையளிக்கிறது.
 
பகிடிவதை என்ற  போர்வையில் மற்றவர்களின்  மானத்தோடும் மனிதாபிமானத்தோடும் விளையாடுவது வேதனையான விடயம்.
 
சிகையலங்கார உரிமையாளர் இந்த விடயத்தை மனிதாபிமானத்துடன் கையாளாதிருந்தால் குறித்த கனிஷ்ட மாணவர்களில் பலரும் விபரீதமான முடிவுகளையும் எடுத்திருக்கலாம்.  தனது  மானத்துடன் மற்றவர்கள் விளையாட எவரும் இடமளிக்கப் போவதில்லை. இவ்வாறான நிலைமைகள் ஏற்படும் போது முடிவுகள் தற்கொலைகளுக்கும் இட்டுச் சென்றுள்ளன.
 
இந்த விடயங்கள் உண்மையாகவிருந்தால் இது தொடர்பில் யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
 
பகிடி வதைகள் ஒரு போதும் மனித வதைகளாக, மனிதாபிமானத்தை புதைப்பனவாக அமையக் கூடாது.
 
-ஏ.எச.சித்தீக் காரியப்பர்.