அரசியல் தீர்வும் இல்லை. அபிவிருத்தியும் இல்லை. இதுதான் இன்று தமிழர்களின் நிலைமையா?

0
397
இன்று இந்நாட்டில் 5 அமைச்சரவை, 2 ராஜாங்க, சுமார் 5 பிரதி முஸ்லிம் அமைச்சர்கள் இருக்கிறார்கள். சுமார் 70 அரச நிறுவனங்கள் ஒட்டுமொத்த முஸ்லிம் அமைச்சர்கள் வசம் உள்ளன. அவை மூலம் கிடைக்கும் அந்த சேவைகளும் போதாது, என்று முஸ்லிம்கள் தமது  அரசியல் தலைவர்களை விமர்சனம் செய்தாலும் கூட, இதுதான் உண்மை.

நான் முஸ்லிம் மக்களை பாராட்ட விரும்புகிறேன். முஸ்லிம் மக்களை பார்த்து தமிழர்கள் பாடம் படிக்க வேண்டும். என  அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தமிழர்களை பொறுத்தவரையில், 3 அமைச்சரவை, 1 ராஜாங்க, 3 பிரதி  அமைச்சர்கள் தான் இருக்கிறோம். இந்நாட்டின், மொத்த 200 இலட்சம் ஜனத்தொகையில், 150 இலட்சம் சிங்களவர்கள், 30 இலட்சம் தமிழர்கள்,  20 இலட்சம் முஸ்லிம்கள். இந்த அரசாங்கத்தை உருவாக்க வழங்கப்பட்ட சிறுபான்மை இன வாக்குகளில் தமிழர் வாக்குகளே பெரும்பான்மை வாக்குகள்.
இதுதான் உண்மையாக இருந்தாலும், இந்த அரசாங்கம், தமிழர்களுக்கு உரிய அந்தஸ்த்தை இன்னமும் தரவில்லை. இதற்கு முன் இருந்த அரசும் தரவில்லை. தமிழர்களுக்கு, “எக்சகியூடிவ் பவர்” என்ற அமைச்சரவை நிறைவேற்று அதிகாரம் இலேசில் கிடைப்பதில்லை.
அதனால்தான், தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசில் இணைந்து அமைச்சு பதவிகளை பெறும்படி நான் பகிரங்கமாக அழைப்பு  விடுத்தேன். எனது அந்த அழைப்பை சிலர் விமர்சனம் செய்தார்கள். ஆனால், நான் சொல்வதில் உள்ள நியாயத்தை சிலர் புரிந்துக்கொண்டார்கள்.  அரசியல் தீர்வும் இல்லை. அபிவிருத்தியும் இல்லை. இதுதான் இன்று தமிழர்களின் நிலைமையா? என்று நான் கேட்பதில் என்ன தவறு இருக்கின்றது?
தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசில் இணையாவிட்டால், உள்ளே இருக்கும் தமிழ் எம்பிகளை தேடிப்பிடித்து, அவர்களுக்கு மேலதிக அமைச்சு பதவிகளை இந்த அரசு கொடுக்க வேண்டும். தமிழ் அமைச்சர்களின் அமைச்சுகளுக்கு மேலதிக நிதி வளம் ஒதுக்க வேண்டும்.
இன்று இவை பற்றி யாராவது பேச வேண்டும். அதனால்தான், நான் இன்று பகிரங்கமாக பேச விரும்புகிறேன். இதன் மூலம் இது பற்றிய நாடு தழுவிய ஒரு கலந்துரையாடலை ஏற்படுத்த விரும்புகிறேன். இது தமிழர் மத்தியில் பேசுபடு பொருளாக வேண்டும்.
அதற்காக அரசாங்கம் என்ற படகை கடற்பாறையில் முட்டி கடலில் மூழ்கடிக்க நான் தயார் இல்லை. ஆனால் வாயை மூடிக்கொண்டு சும்மா இருக்கவும் தயார் இல்லை. அரசுக்கு உள்ளே இருந்தபடியே இயன்ற உள்போராட்டங்களை செய்கிறேன். எதிர்கட்சியை விட அரசை நான் உள்ளே இருந்தபடி விமர்சிக்கிறேன்.