கல்முனை தமிழ் பிரிவில் மினி சூறாவளியினால் 53 வீடுகள் பகுதியளவிலும் 6 பொதுக்கட்டிடங்களுக்கும்  சேதம்

0
310
செ.துஜியந்தன்
கல்முனைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5மணியளவில் வீசிய மினி சூறாவளியினால் கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட பகுதியில் 53 வீடுகள் பகுதியளவிலும், பொதுக்கட்டிடங்கள் மற்றும் பாடசாலைகள் 06 கட்டிடங்கள் சேதங்களுக்குள்ளாகியுள்ளதாக கல்முனைத் தமிழ்ப்பிரிவு பிரதேச செயலாளர் க.லவநாதன் தெரிவித்தார்.

கல்முனை, பாண்டிருப்பு, பெரியநீலாவணை, சேனைக்குடியிருப்பு, நற்பிட்டிமுனை ஆகிய கிராமங்களிலே மினிசூறாவளியின் தாக்கம் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் சேதவிபரங்கள் திரட்டப்பட்டு அம்பாறை மாவட்ட செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவ சேவைப்பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும்,  பாதிக்கப்ட்டவர்களுக்கான நட்டஈட்டினைக் கொடுப்பதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாகவும் பிரதேசசெயலாளர் க.லவநாதன் தெரிவித்தார்.
இதேவேளை கல்முனையில் வீசிய காற்றினால் ஸ்ரீ மாமாங்கவித்தியாலயத்தின் தரம் நான்கு மாணவர்கள் கல்விபயிலும் கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்துள்ளதினால் அக்கட்டிடத்தில் இயங்கிவந்த ஐந்து வகுப்பறைகளுக்குள்ளும் மழை நீர் தேங்கிநிற்கின்றது. இதன் காரணமாக மாணவர்களுக்கான கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை தொடர்வதில் சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக அதிபர் திருமதி ரவீந்திரகுமார் சுகன்சியா தெரிவித்தார்.
இப்பாடசாலை தரம் ஒன்று தொடக்கம் தரம் ஒன்பது வரை இயங்கிவருகின்றது இங்கு 140மாணவர்கள் கல்விகற்கின்றனர். பாடசாலைவளாகம் பள்ளமான இடத்தில் அமைந்துள்ளதினால் இயல்பாகவே நீர் தேங்கிநிற்கின்றது. பல்வேறு வசதிகளற்ற நிலையில் இயங்கிவரும் கல்முனை ஸ்ரீ மாமாங்கவித்தியாலயத்தின் குறைகளை நிவர்த்தி செய்துதருமாறு பலரிடம் சுட்டிக்காட்டியபோதிலும் இதுவரை எவரும் உதவமுன்வரவில்லை என பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
ஞாயிறுவீசிய மினி சூறாவளியினால் மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் திங்கட்கிழமை ஸ்தம்பிதமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.