கிழக்கு மாகாண சபையில் கொழும்பின் தலையீடு மாந்தீவு வைத்தியசாலை மரணதன்டனைக் கைதிகளை தடுத்து வைக்கும் சிறைக் கூடமாக மாறும் அபாயம்

0
245

கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மாந்தீவு தொழுநோயாளர் வைத்தியசாவைக்கு ஊடகவியலாளர் உட்பட யாரும் செல்லமுடியாதவாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 200 பேர் வரை தங்கியிருந்து சிகிச்சை பெறக்கூடிய அந்த வைத்தியசாலையில், தற்போது ஒரே ஒரு நோயாளி மாத்திரமே சிகிச்சை பெறுகின்றார். என்ன காரணத்திற்காக யாருடைய உத்தரவின் பேரில் அங்கு யாரும் செல்ல முடியாதவாறு தடையுத்தரவு போடப்பட்டது என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். 
அப்போது 13 நோயளர்கள் மாத்திரமே அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்ததாகவும் தீ அனர்த்தத்தின் பின்னர் உரிய முறையில் வைத்தியசாலை புனரமைக்கப்படவில்லை என்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சுகாதாரப் பணியாளர் ஒருவர் கூர்மை செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ஒரு பகுதியாக செயற்பட்டு வரும் மாந்தீவு வைத்தியசாலையில், தற்போது 20 மருத்துவ சேவையாளர்கள் கடமை புரிகின்றனர் என்று கூறிய அவர், வைத்தியசாலையின் தற்போதைய நிலைமை பற்றி எதுவும் கூற விரும்பவில்லை.

இதேவேளை, மாந்தீவு வைத்தியசாலையை மரணதன்டனை, ஆயுள் தன்டனை பெற்ற கைதிகளை தடுத்து வைக்கும் சிறைச்சாலையாக மாற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கொழும்பில் உள்ள சுகாதார அமைச்சின் தகவல்கள் கூறுகின்றன.

இலங்கை ஒற்றையாட்சி அரசின் பொலிஸ் தரப்பின் உத்தரவுக்கு அமைவாக, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு, அந்தக் கட்டடத்தை பொறுப்பேற்கவுள்ளது என்றும் அதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

போதைவஸ்த்து கடத்தல், பாதாள உலகக்குழுவினர் மற்றும் கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறுவு ஆகிய குற்றச் செயல்களில் ஈடுபட்டு மரணதன்டனை பெற்ற கைதிகள், ஆயுள் தன்டனை விதிக்கப்பட்டு, கொழும்பு உட்பட இலங்கையின் தென்பகுதி சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் ஒரு பகுதியினரை அங்கு தடுத்து வைப்பதற்கு ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.

இயற்கை அழகு பொருந்திய மாந்தீவு பிரதேசத்தை, மட்டக்களப்புக்கு அழகு சேர்க்கவும் பொருளாதாரத்தை ஈட்டக்கூடிய வகையிலும் புனரமைத்து வழங்குவமாறு மட்டக்களப்பில் உள்ள பொது அமைப்புகள், அரசியல் பிரமுகர்கள் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

ஆனால், தமிழர் தாயக பிரதேசங்களை கேளிக்கை மையங்களாகவும் இராணுவ கேந்திர நிலையங்கள், மற்றும் சிறைக்கூடங்களாக மாற்றும் நடவடிக்கையில் இலங்கையின் ஒற்றையாட்சி அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.

13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் வைத்தியசாலைகளின் நிர்வாகம் மாகாண சபைகளுக்கு உரியது. ஆனால் கிழக்கு மாகாண சபையுடன் எந்தவிதமான கலந்துரையாடல்கள் எதுவும் இன்றி தன்னிச்சையாக கொழும்பு அரசாங்கம் மாந்தீவு வைத்தியசாலையை சிறைச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அந்த உறுப்பினர் கூர்மை செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

இலங்கைப் படையினரின் ஆலோசனைகளை பெற்று, இவ்வாறான செயற்பாடுகளில் கொழும்பு அரசாங்கம் ஈடுபடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பு நகரை அழுபடுத்தும் வேலைத் திட்டங்களின் கீழ் கொழும்பு நகரில் உள்ள வெலிக்கடை சிறைச்சாலை, மகசீன் சிறைச்சாலை இடமாற்றம் செய்யப்படவுள்ளன. அத்துடன் கொழும்பில் குப்பைகள் சேர்க்கப்படும் இடங்களும் வெளிமாட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.