மண்முனை தென்மேற்கு பிரதேசசபையால் பிரேத ஊர்தி சேவை

0
511

(படுவான் பாலகன்)மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் மரணித்து, பிரேதங்களை வைத்தியசாலைக்கு அல்லது வைத்தியசாலைகளில் இருந்து வீட்டிற்கு கொண்டுவருவதற்காக இடர்படுகின்ற மக்களுக்காக பிரேத ஊர்தியொன்றினை கொள்வனவு செய்து, இலவசசேவை வழங்குவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிரதேசசபையின் உறுப்பினர் மு.அருட்செல்வம் தெரிவித்தார்.

மண்முனை தென்மேற்கு பிரதேசசபையின் அமர்வு அண்மையில் நடைபெற்ற போது, இது குறித்ததான பிரேரணையை தான் முன்வைத்ததாகவும் அதற்கமைய இச்செயற்பாட்டிற்கு சபை அனுமதி வழங்கியுள்ளதாகவும் இன்று(27)) ஞாயிற்றுக்கிழமை குறிப்பிட்டார்.
மேலும், சபையின் உறுப்பினர் கூறுகையில்,

வறுமைப்பட்ட மக்கள் பலர் மண்முனை தென்மேற்கு பிரதேசசபைக்குட்பட்ட பகுதிகளில் வாழ்கின்றனர். இவர்களின் வீடுகளில் மரணங்கள் ஏற்பட்டால், பிரேதங்களை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்வதற்கும், வைத்தியசாலையிலிருந்து வீட்டிற்கு கொண்டுவருவதற்கும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இதனை பல இடங்களில் அவதானித்துள்ளோம். இந்நிலையில்தான் பிரதேசத்திற்கென பிரேத ஊர்தியொன்று இருக்குமானால் இலவசசேவையை வழங்க முடியும். இதற்கமைய பிரேரணையொன்றினை அண்மையில் முன்வைத்தேன். அதற்கமைய அதற்கான ஆதரவு கிடைக்கப்பெற்றிருக்கின்றது. வெகுவிரைவில் பிரேத ஊர்தி சேவையில் ஈடுபடும். என்றார்.