இரத்தினபுரியில் 237 பேர், கேகாலை மாவட்டத்தில் 400 குடும்பங்கள் இடம்பெயர்வு

0
442

இரத்தினபுரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையின் காரணமாக 237 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக மாவட்ட செயலாளர் மாலனி லொக்குபோத்தாகம தெரிவித்தார்.

இரத்தினபுரி, வெவெல்வத்த வீதியில் துரேக்கந்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவின் காரணமாக வீதி மூடப்பட்டுள்ளது. பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நிவாரணம் வழங்க சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண ஆளுர் நிலுக்கா ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

தங்குமிடம், உணவு உள்ளிட்ட வசதிகளை சுற்றுநிருபங்களுக்கு அப்பால் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட கிராம சேவை அலுவலர்களுக்கு மாகாண ஆளுநர் அனுமதி வழங்கியுள்ளார்.

கடற்படையினரின் முப்பது படகுகள் அலபாத்த, கலவான, இரத்தினபுரி, அயகம, கிரியெல்ல ஆகிய பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதேநேரம் பொலிஸாரும் 16 படகுகள் அனுப்பி வைத்துள்ளனர்.

 

களு கங்கையின் நீர்மட்டம் தற்போது ஏழு தசம் ஒன்பது அடிவரை அதிகரித்துள்ளது. அது ஒன்பது அடி வரை அதிகரிக்கும் பட்சத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்று இரத்தினபுரி நீர்ப்பாசன பொறியிலாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

மேலும், புளத்கொஹூபிட்டி பிரதேச செயலாளர் பிரிவில் அதிக மழைவீழச்சியின் காரணமாக ஒரு வீட்டில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 

தெஹியோவிற்ற, தல்துவ பிரதேசங்களின் தாழ்ந்த பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கேகாலை, அவிசாவளை வீதியின் பல இடங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

 

சீரற்ற காலநிலை காரணமாக கேகாலை மாவட்டத்தில் 400 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக கேகாலை மாவட்ட செயலாளர் சந்திரசிறி பண்டார தெரிவித்துள்ளார்.

வெள்ளப் பெருக்கின் காரணமாகவும் மரங்கள் முறிந்து வீழ்ந்ததாலும் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

களனி கங்கையின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருவதால் தெஹியோவிற்ற உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.