பாலம் அமைக்கப்படா விட்டாலும் பரவாயில்லை போக்குவரத்துக்கு ஏதாவது ஒழுங்கு பண்ணித்தாருங்கள்.

0
536

கிண்ணையடி பாலத்திற்கு ஒதுக்கிய நிதி எங்கே? மக்கள் விசனம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கிண்ணையடி கிராமத்தின் துறையடிக்கு பாலம் அல்லது பாதை ஒன்றை அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்த வண்ணமே உள்ளனர்.

வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கிண்ணையடிக் கிராமத்திற்கும், கிரான் பிரதேச செயலகப் பிரிவிற்கும் இடைப்பட்ட மிகவும் பின்தங்கிய கிராமமான முருக்கன்தீவு, சாராவெளி, பிரம்படித்தீவு கிராமம் ஆகியவற்றை இணைக்கும் துறையடிக்கு பாலம் ஒன்றை அமைக்குமாறு அப்பிரதேச மக்கள் மிக நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கிண்ணையடிக்கும் முருக்கன்தீவு கிராமத்திற்கும் இடையிலான ஆற்றின் இடைவெளி 200 மீற்றர் தூரம் காணப்படுகின்றது. இதனை கடக்க முடியாது போனால் மக்கள் 10 கிலோ மீற்றர் தொடக்கம் 15 கிலோ மீற்றர் தூரம் சுற்றியே தமது பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

கிண்ணையடிக் கிராமத்திற்கு அப்பால் உள்ள முருக்கன்தீவு, பிரம்படித்தீவு, சாராவெளி ஆகியவற்றிலுள்ள கிராம மக்களும், மாணவர்களும் இவ் ஆற்றினைக் கடந்தே தினமும் பயணம் செய்து தங்களது தேவைகளை முடித்து வருகின்றனர். இதேவேளை வெள்ள நீர் அதிகரித்து காணப்படும் சந்தர்ப்பங்களில் இப்போக்குவரத்து பாதை முற்றாக தடைப்பட்டு காணப்படுவதுடன், அக்காலத்தில் பல்வேறு அசௌகரியங்களை மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.

சில நேரங்களில் இவ் ஆற்றில் தோணி கவிழ்ந்த சம்பவங்களும் நடைபெற்றுள்ளது. கிண்ணையடியில் இருந்து செல்லும் அரச உத்தியோகஸ்தர்கள் குறிப்பாக பெண்கள், விவசாயிகள் கூட மிகுந்த சிரமங்களை அனுபவிக்கின்றனர்.

ஆற்றை கடப்பது மிகவும் ஆபத்தான பயணமாகவுள்ளதாகவும், இரவு வேளைகளில் நோய் வாய்ப்படும் நோயாளிகளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதில் மிகவும் பாரிய சவாலை எதிர்நோக்குவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். காலை ஆறு மணி தொடக்கம் மாலை ஆறு மணி வரையே தோணி சேவை இடம்பெறுகின்றது. இரவு நேரங்களில் கர்ப்பினி தாய்மார்களுக்கு பிரசவ வழி ஏற்பட்டாலோ அல்லது விசக்கடிகள் ஏற்பட்ட சந்தர்ப்பத்திலோ அந்நோயாளியை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியாத துர்ப்பாக்கிய நிலையில் அவர்கள் உயிர் பிரிந்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது.

இதேவேளை பாடசாலை மாணவர்கள் முருக்கன்தீவில் தமது ஆரம்பக் கல்வியை கற்று மேற்படிப்பிற்காக ஆற்றை கடந்து கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயத்திற்கு செல்லும் பிரச்சினையினால் பல மாணவர்கள் பாடசாலைக் கல்வியில் இருந்து இடை விலகுவதாகவும், இதில் இளவயது திருமணம் நிகழ்வதாகவும் பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

காலம் காலமாக எமது பிரதேசத்திற்கு வரும் அரசியல்வாதிகள் இவ்வாற்றை பார்வையிட்டு இவ்வாற்றுக்கான பாலத்தை அமைப்பதற்கு நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் எனக் கூறிச் செல்கின்றார்கள் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.

தாம் ஆபத்தின்றி எப்போது பயணிப்பது என மக்கள் ஏக்கத்துடன் எதிர்பார்த்து நிற்கின்றனர். இப்பகுதிக்கு கடந்த வருடம் பாலம் அமைக்கப்படும் என கூறப்பட்ட போதிலும் இதுவரை பாலம் அமைக்கப்படாமல் உள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கிண்ணையடிக்கும் முருக்கன்தீவுக்கும் இடைப்பட்ட பாலம் அமைக்கப்படுவதற்கு 850 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்திருந்தார். ஆனால் இவ்விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகள் வருகை தரவில்லை.

அத்தோடு கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலின் போது ஸ்ரீ லங்கா சுந்திரக் கட்சியின் கல்குடாத் தொகுதி அமைப்பாளர். எம்.சந்திரபாலன் வருகை தந்து தென்னை மரங்களை எங்களுக்கு தந்து விட்டு தை மாதம் முதலாம் திகதி ஜனாதிபதி வருகை தந்து பாலத்திற்கு அடிக்கல் நாட்டுவதாக தெரிவித்தார். ஆனால் ஜனாதிபதி மே தின கூட்டத்திற்கு மாவடிவேம்புக்கும் வந்து சென்று விட்டார். இங்கு கல் வைப்பதற்கு இன்னும் வரவில்லை. அமைப்பாளரையும் காணவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.

அரசியல்வாதிகள் எப்போதுதான் தங்களால் மக்கள் மத்தியில் கூறப்படும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்று இன்னும் தெரியவில்லை. மக்களை தொடர்ந்த வண்ணம் ஏமாற்றாமல் இவ்விடயம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க அரசியல்வாதிகள் முன்வர வேண்டும்.

அத்தோடு மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி திணைக்களத்தினால் இரண்டு தோணிகளை கொண்டு அமைக்கப்பட்ட பாதையானது பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றது. குறித்த பாதையில் இருபது பேர் மாத்திரம் செல்ல முடியும். ஆனால் இதில் பொறுத்தப்பட்ட பொருட்கள் மாத்திரம் பதினைந்து பேர் செல்லக் கூடிய பாரத்தை கொண்டதாக உள்ளது.

இந்த பாதையை பயன்படுத்தும் பொருட்டு பயணிகள் மோட்டார் சைக்கிள்கள் என்பவற்றை ஏற்றி பயணத்த வேளையில் பாதை கவிழ்ந்து நீரில் மோட்டார் சைக்கிள்கள் விழுந்துள்ளது. மோட்டார் சைக்கிள்களை மீட்பதற்கு மூன்று நாட்கள் சென்றது. இதனால் வாகனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதுடன், சென்றவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர். இவ்வாறு சம்பவங்கள் இடம்பெற்றதால் பயணிகள் அச்சத்தின் மத்தியில் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்;.

எனவே இப்பிரதேசத்தில் உடனடியாக பாலம் அமைக்கப்படா விட்டாலும் பரவாயில்லை மக்கள் அச்சமில்லாமல் ஆற்றைக் கடப்பதற்கு நல்ல முறையிலான பாதை ஒன்றினை பெற்றுத் கொடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என மக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

எனவே நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றாத வகையில் பாலங்களை அமைத்து தருவதற்கு மாவட்ட அரசியல்வாதிகள் கூடிய கவனம் செலுத்தி நடவடிக்கையை துரித கதயில் மேற்கொள்வதற்கு முன்வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

எனவே ஒவ்வொரு வருடமும் இப்பாலம் அமைத்து தரப்படும் என்று மக்களின் பொய்யான வாக்குறுதிகளை வழங்காமல் அதனை செயல் வடிவில் காட்டுவதற்கு அரசியல் தலைமைகள் முன்வருவார்களா?