வடக்கு கிழக்கு பிரதேசத்தில் இருக்கின்ற மீன்பிடி சமூகத்தினுடைய எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவோம்

0
577

வடக்கு கிழக்கு பிரதேசத்தில் இருக்கின்ற மீன்பிடி சமூகத்தினுடைய எதிர்பார்ப்புக்களை முடிந்தவரையில் திட்டமிட்டு நிறைவேற்றுவோம் என மீன்பிடி நீரியல்வள கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், மீன்பிடி நீரியல் வளங்கள் அபிவிருத்தி கிராமிய பொருளாதார பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலியை வரவேற்கும் நிகழ்வும், விருந்துபசாரமும் பொத்தானை கழுவாமடுவில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-

தற்போது எனக்கு மேலதிகமாக மீன்பிடி நீரியல்வள பிரதியமைச்சும் கிடைத்துள்ளது, கடந்த காலத்தில் பிரதியமைச்சராக இருந்து கொண்டு மக்களுக்கு செய்த பணிகளைப் போன்று தொடர்ந்தும் இப்பணிகளை செய்ய இருக்கின்றேன்.

எதிர்காலத்தில் மீன்பிடி நீரியல்வள கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சினூடாக மட்டக்களப்பு மாவட்டத்திலும், விசேடமாக வடக்கு கிழக்கு பிரதேசத்தில் இருக்கின்ற மீன்பிடி சமூகத்தினுடைய எதிர்பார்ப்புக்களை முடிந்தவரையில் நல்ல முறையில் திட்டமிட்டு அவசரமாக செய்ய வேண்டிய விடயங்கள், திட்டமிட்டு செய்ய வேண்டிய விடயங்களை கருத்தில் கொண்டு நாங்கள் செயற்பட இருக்கின்றோம்.

உங்களுடைய பிள்ளைகளை நன்றாக கல்வி கற்பியுங்கள், கல்குடாப் பிரதேசத்திலுள்ள ஒவ்வொரு வீடுகளிலும் இருந்து ஒரு பட்டதாரி வரவேண்டும் என்று கனவு காண்கின்றவன் என்ற அடிப்படையில் உங்களது பிள்ளைகளை புலமை உள்ளவர்களாக மாற்றிக் கொள்ளுங்கள்.

கல்குடாப் பிரதேசத்தில் இருக்கின்ற முகநூல் பாவனையாளர்கள் சிலர் மோசமான வார்த்தைப் பிரயோகங்களை கொண்டு மற்றவர்களை விமர்சனம் செய்கின்றார்கள். யாரைப் பற்றியும் எழுதுங்கள், அது ஜனநாயக உரிமை. ஆனால் வார்த்தைப் பிரயோகங்களை அழகாகவும், கன்னியமாகவும் பயன்படுத்த வேண்டும்.

முகநூல் பாவனையாளர்கள் எதிர்காலத்தில் விமர்சனங்களை செய்கின்ற பொழுது வார்த்தைப் பிரயோகங்களை மற்றைய சமூகத்தவர்கள், மற்றைய பிரதேசத்தவர்கள் வாசித்து உணரக் கூடிய வகையில் நல்ல சொற்பிரயோகங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்குடா கிளையின் ஏற்பாட்டில் ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரி.அஸ்மி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்குடா தொகுதியிலுள்ள பல பிரதேசங்களிலிருந்தும் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதேச சபை உறுப்பினர்கள், மத்திய குழு உறுப்பினர்கள், வட்டாரக்குழு உறுப்பினர்கள், கல்வி அதிகாரிகள், முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது கல்குடாப் பிரதேச முக்கியஸ்தர்களால் மீன்பிடி நீரியல்வள கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், கசிதாவும் இடம்பெற்றது.