ஒருசில கலைமன்றங்களே செயற்பாட்டில் உள்ளன.

0
396

(படுவான் பாலகன்)  100க்கு மேற்பட்ட கலைமன்றங்கள் இயங்கிய மட்டக்களப்பில் ஒருசிலவே தற்காலத்தில் செயற்பாட்டில் உள்ளன. என மட்டக்களப்பு மாவட்ட கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன் தெரிவித்தார்.

கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா கலைகலா மன்றத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட படுவான் முத்தமிழ் முரசு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக்குறிப்பிட்டார்.

மாவட்ட இணைப்பாளர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

மட்டக்களப்பில் 1950தொடக்கம் 1984ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கலைமன்றங்களின் செயற்பாடு உச்சமாக இருந்தது. ஆனால் 1984க்கு பின்னர் அச்செயற்பாடு குறைவடைந்துவிட்டது. 100க்கு மேற்பட்ட கலைமன்றங்கள் அந்தந்த கிராமங்களில் கலைகளை செய்து உச்சமான நிலைக்கு கொண்டுசென்றனர். அந்நிலைமாறி இன்று கலைமன்றங்கள் அருகிச்சென்றிருக்கின்றன.

பெற்றோர்கள் பிள்ளையை கலைமன்றங்களில் இணைப்பதற்கு தயக்கம்காட்டுவதினாலேயே கலைமன்றங்கள் அருகிச்செல்கின்றன. எல்லாப்பிள்ளைகளும் வைத்தியராக, பொறியிலாளராக அல்லது உயர்ந்த பதவிகளைப்பெற வேண்டும் என்று சிந்திப்பது தவறல்ல. அவ்வாறான பிள்ளைகளை ஆளுமையுள்ள, ஆரோக்கியமான, அறிவுத்திறன் கூடிய பிள்ளையாக வளர்ப்பதில் தவறிழைக்கின்றனர்.

கூத்துக்களில், ஏனைய கலைகளில் ஈடுபடுவதினால் பிள்ளைகளின் அறிவுத்திறன் மழுங்கடிக்கப்பட்டுவிடும் அல்லது கல்விக்கு பாதிப்பாகிவிடும் என பெற்றோர்கள் தவறாக சிந்;திக்கின்றார்கள். கலை, இலக்கிய செயற்பாடுகளில் ஈடுபடும் பிள்ளைகள் எப்போதும் மீத்திறன் கூடியவர்களாகவே உருவாக்கப்படுகின்றனர். எனவே பிள்ளைகளை கலைகளுக்குள் இணைப்பதற்கும் பெற்றோர்கள் ஆர்வம்காட்ட வேண்டும்.

கலைமன்றங்கள் குறைவடைந்து செல்வதுபோன்று, மத்தள இசைக்கருவிகள் குறைவடைந்து அல்லது பெறுவதில் சிக்கில்களை கலைஞர்கள் எதிர்கொண்டுவருகின்றனர். மத்தள இசைக்கருவிற்கு மிகவும் அவசியமானதொன்றாக மிருகங்களினது தோல் காணப்படுகின்றது. இதனைபெறுவதிலே சட்டச்சிக்கல்கள் காணப்படுகின்றன. இதனால் மத்தள இசைக்கருவி குறைவடைந்து கொண்டு செல்கின்றது. என்றார்.