மேய்ச்சல் தரைக்கென காணிகள் இல்லை.

0
342

(படுவான் பாலகன்) மேய்ச்சல் தரைக்கென காணிகள் இல்லை. வனவள திணைக்களத்திற்கு சொந்தமான காணிகளிலே மாடுகள் மேய்க்கப்படுகின்றன என மட்டக்களப்பு மாவட்ட வனவள அதிகாரியொருவர் தெரிவித்தார்.

சோஆ நிறுவனத்தின் ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு, மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மேய்ச்சல்தரை தொடர்பான கூட்டமொன்றிலே இதனைக்குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற ஒன்றுகூடலில், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பட்டிப்பளை, வவுணதீவு, ஏறாவூர்பற்று பகுதிகளைச்சேர்ந்த பிரதேச செயலக உயரதிகாரிகளும், விவசாயிகளும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
கால்நடை பண்ணையாளர் சங்கம், மங்களகம விவசாயிகள் சார்பான சமாதானக்குழுவும் ஒன்றிணைந்து முன்வைத்த கோரிக்கைகள் பற்றியே இதன்போது கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கால்நடை பண்ணையாளர்கள் தங்களின் கால்நடைகளை பதிவு செய்வதற்கு கால்நடை சங்கம் ஊடாக நடவடிக்கை எடுத்தல், ஒவ்வொரு பிரதேச செயலகங்களுக்காக ஒதுக்கப்பட்ட மேய்ச்சல்தரையில் தங்கள் கால்நடைகளை தவிர வேறுபிரதேச கால்நடைகள் வருவதை தடுக்கும் வகையில் அரசாங்க அதிபர் வலியுறுத்தல் வழங்கவேண்டும், மங்களகம மக்களுக்காக அமைக்கப்பட்ட யானை வேலியை முழுமையாக்கி பலப்படுத்தல், கால்நடை வளப்பாளர்கள் மேய்ச்சல் தரையில் கால்நடைகளை பராமரிக்கின்றபோது மீன்பிடித்தல் மற்றும் மரங்களை வெட்டுவதாக கூறி கைதுசெய்யப்படுகின்றவர்களை மகோயா போன்ற நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்வதற்கு பதிலாக எமது பிரதேச காவல்துறையூடாக கையாளுவதற்கு நடவடிக்கை எடுத்தல், கால்நடைபண்ணையாளர்கள் சங்கங்களை வலுப்படுத்துதலும் அனைத்து கால்நடைகளையும் கால்நடை சங்கங்கள் ஊடாக மேய்ச்சல் தரைக்கு எடுத்துச்செல்லுதல், கால்நடைகளால் ஏற்படும் பயிர்சேதங்களுக்கு சட்டவிரோதமாக தண்டப்பணம் அறவிடுவதை தவிர்த்து சட்டரீதியில் கால்நடைசங்கம், சமாதானக்குழு மற்றும் காவல்துறையூடாக அறவிடுதல் முறையை கையாளுதல், பயிர் நிலத்திற்கும் மேய்ச்சல் தரைக்கும் இடையிலாக உயிர்வேலி அமைப்பதன் மூலம் இருசாராரது வாழ்வாதாரத்தையும் பாதுகாத்தல். ஆகிய கோரிக்கைகள் பற்றியே கலந்துரையாடப்பட்டது.

கோரிகைகளுக்கமைய அரசதிணைக்களங்களினால் முன்னெடுக்ககூடிய செயற்பாடுகள் அனைத்தும் அரச அதிகாரிகள் முன்னெடுப்பார்கள் எனவும், சங்கங்கள் செய்யவேண்டிய வேலைகள் அனைத்தையும் சங்கங்கள் செய்ய வேண்டுமெனவும் இதன்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மேய்ச்சல் தரைக்கென மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்புறங்களில் சட்டரீதியாக எந்தகாணிகளும் இல்லையெனவும், விவசாய ஆரம்பகூட்டத்தில் மேய்ச்சல் தரைக்களாக தீர்மானிக்கப்பட்டு கூறப்படுகின்ற இடங்கள் அனைத்தும் வனவள திணைகளத்திற்கு சொந்தமான காணிகளேயாகும் என அதிகாரியொருவர் இதன்போது குறிப்பிட்டார்.

குறித்த ஒன்றுகூடலில் தமிழ், சிங்களம் ஆகிய இனமக்கள் இருசாராரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.