வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் அதிக போதை பாவனை

0
290

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலைய பிரிவுகளில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பிரிவிற்குட்ட பகுதியில் அதிக போதைப் பாவனையாளர் உள்ளார்கள் என வாழைச்சேனை பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.சிவதர்சன் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் பேண்தகு பாடசாலை நிகழ்ச்சித் திட்டத்தில் போதைப் பொருள் பாவனையில் இருந்து சமூகத்தை பாதுகாப்போம் என்னும் தொனிப் பொருளில் வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலயத்தினால் செவ்வாய்கிழமை விழிப்புணர்வு பேரணியும், விழிப்புணர்வு கூட்டமும் இடம்பெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்-

மட்டக்களப்பு மாவட்டத்தில் பன்னிரண்டு பொலிஸ் நிலையங்கள் உள்ளது. அதில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் மாத்திரம் போதைப் பாவனை தொடர்பான விசாரணைகள் அதிகம் காணப்படுகின்றது.

அந்த வகையில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கஞ்சா, அவின், ஹேரோயின் இப்போது புதிதாக போதை மாத்திரைகள் என்பன அதிகளவாக பயன்படுத்தப்படுகின்றது. போதை மாத்திரைகள் பாவித்திருந்தால் அதனை வெளிப்படையாக உணர்ந்து கொள்ள முடியாத நிலை காணப்படும்.

வாழைச்சேனை பொலிஸாரால் போதை மாத்திரைகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டால் பாடசாலை மாணவர்கள் அதிகம் பாவிக்கின்றனர். சமூகத்தில் நல்ல நிலையில் உள்ளவர்களின் பிள்ளைகளே அதிகம் போதை மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர்.

பாடசாலை மாணவர்கள் விளையாடும் இடங்களுக்கு சென்று அவர்களை சோதனை செய்யும் போது பக்கட்டில் இருந்து போதை மாத்திரைகள் காணப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பில் பாடசாலைகளுக்கு சென்று விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருகின்றோம்.

பேற்றோர்கள் முதலில் தங்களுடைய பிள்ளைகள் என்ன செய்கின்றார்கள் என்பதை கவனிக்க வேண்டும். அத்தோடு தமது பிள்ளைகள் பழகும் நண்பர்கள் எவ்வாறானவர்கள் என்பதையும் சற்று நீங்கள் சிந்தித்துக் கொள்ள வேண்டும்.

அத்தோடு ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் போகும் போது கஞ்சா கொண்டு சென்று அங்கு பாவனையில் ஈடுபடுவதாகவும் தகவல் கிடைத்துள்ளது என்றார்.