சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்திக்கு 1 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு

0
260
சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் பெளதீக அபிவிருத்திக்கு சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசீம் 1 கோடி ரூபா நிதியினை ஒதுக்கீடு செய்துதருவதாக உறுதியளித்துள்ளார் என வைத்தியசாலை அபிவிருத்திச் சபையின் செயலாளர் றியாத் ஏ.மஜீத் தெரிவித்துள்ளார்.

 

சாய்ந்தமருது வைத்தியசாலை அபிவிருத்திச் சபையின் செயலாளர் றியாத் ஏ. மஜீத் மற்றும் சபை உறுப்பினர் எம்.ஐ.சம்சுதீன் ஆகியோருக்கும் சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசீமுக்குமிடையேயான இரண்டாம் கட்ட சந்திப்பு  (22) ஞாயிற்றுக் கிழமையும் பிரதி அமைச்சரின் நிந்தவூர் வாசஸ்தளத்தில் இடம்பெற்றது.

இதற்கமைவாக வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக் கட்டட விஸ்தரிப்பு மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய கூட்ட மண்டப நிர்மாணத்திற்கு 70 லட்சம் ரூபாவும் வைத்தியசாலையின் விடுதிகளுக்கான அஸ்பெஸ்டட் சீட் பொருத்துதல் மற்றும் நுளைவாயில் நிர்மாணத்திற்கு 30 லட்சம் ரூபாவுமாக 1 கோடி ரூபா நிதியினை இவ்வருடத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளார்.

சாய்ந்தமருது வைத்தியசாலையினை தரமுயர்த்துதல் சம்பந்தமாக வைத்தியசாலை அபிவிருத்திச் சபை விடுத்த வேண்டுகோளை ஏற்ற பிரதி அமைச்சர் பைசால் காசீம் எனது காலப்பகுதிற்குள் அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேச வைத்தியசாலைகளில் விசேட வைத்திய பிரிவுகளை உருவாக்க திட்டமிட்டுள்ளேன் அதனடிப்படையில் சாய்ந்தமருது வைத்தியசாலையில் தனித்துவமான ஒரு விசேட வைத்திய பிரிவினை ஏற்படுத்தி தருவேன் எனவும் உறுதியளித்துள்ளார் என செயலாளர் றியாத் ஏ.மஜீத் மேலும் தெரிவித்தார்.