மட்டக்களப்பில் தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு மாவட்ட விளையாட்டு நிகழ்வு

0
742

மலர்ந்துள்ள விளம்பி வருடம் அனைவருக்கும் நல்லாண்டாக மலர அதி மேதகு ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய கிராமியம், பிரதேசம், மற்றும் மாவட்ட ரீதியில் மட்டக்களப்பில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட கச்சக்கொடி கிராம உத்தியோகத்தர் பிரிவில் தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகள் இன்று (22) இடம் பெற்றது. தமிழ் சிங்கள கலாசார வரவேற்புடன் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மா.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிழ்வு பிரமாண்டமானதாக அமைந்தமை குறிப்பிடக்கூடியது. இதன் போது தமிழர்களின் பண்பாட்டம்சங்களை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு வகையான பாரம்பரிய உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், களரி கூத்து, அன்றைய நாளில் பயன்படுத்தப்பட்ட களி, ஓலைகளாலான பாரம்பரிய வீடு,

ஊஞ்சல், என்பன காட்சிப்படுத்தப்பட்டது. அத்துடன் பாரம்பரியங்களை வெளிக்காட்டும் தலையனைச்சமர், கண்கட்டி முட்டி உடைத்தல், போத்தலில் நீர் நிரப்புதல், சாக்கோட்டம், கயிறு இழுத்தல், கிடுகு பின்னுதல், செல் குற்றுதல், ஊசியில் நூல் கோர்த்தல், தேங்காய் துருவுதல், நாட்டார் பாடல் இசைத்தல், கோலம் போடுதல் போன்ற பல்வேறு மகிழ்ச்சியூட்டும் விளையாட்டுக்களும் நிகழ்த்தப்பட்டதுடன் இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது.

மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி சிறிக்காந் அவர்களின் வரவேற்புரையுடன் மாவட்ட செயலகத்தின் அனுசரனையில் பிரதேச செயலகங்களின் ஓத்துழைப்புடன் நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் மதத் தலைவர்கள், உதவி பொலிஸ் அத்தியட்கர், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள், கணக்காளர்கள், திணைக்களங்களின் பரிவுக்கு பொறுப்பான உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர், பிரதேச செயலகங்களின் உத்தியோகத்தர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், வேறு திணைக்களங்களின் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் அதிதிகளாக கலந்து கொண்டதுடன், பல்லின மக்களும் நிகழ்வில் பங்குபற்றினர்.