பட்டதாரிகளின் நேர்முகப்பரீட்சைக்கான புள்ளித்திட்டம் பாரபட்சமானது

0
391

பட்டதாரிகளுக்கான நேர்முகப்பரீட்சையின் புள்ளித்திட்டம் பாரபட்சமானது!
பட்டதாரிகள் புகார்:விசேடபட்டம் நுண்கலை தமிழறிவுக்கு புள்ளிகளில்லை!
காரைதீவு நிருபர் சகா

தற்போது நாடளாவியரீதியில் நடைபெற்றுவரும் வேலையில்லாப் பட்டதாரிகளை அரச தொழிலுக்குள் ஆட்சேர்ப்பதற்கான நேர்முகப்பரீட்சையின்போது பயன்படுத்தப்படும் புள்ளித்திட்டம் பாராபட்சமானது அநீதியானது. பட்டதாரிகளை மனஉளைச்சலுக்குள்ளாக்கும் இப்புள்ளித்திட்டத்தை கைவிடல்வேண்டும்.

இவ்வாறு நேர்முகப்பரீட்சைக்குத் தோற்றிய பட்டதாரிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

அவர்கள் மேலும் கூறுகையில்:
கடந்தகாலங்களைப்போல் பட்டத்தின்படி கல்வித்தகைமைகளை கருத்திற்கொண்டு இப்புள்ளித்திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கவேண்டும்.

குறிப்பாக இப்புள்ளித்திட்டத்தில் சிறப்புப்பட்டம் பெற்றவர்க்கோ 1வது 2வது தரத்தில் சிறப்புச்சித்திப்பட்டம் பெற்றவர்க்கோ மேலதிக புள்ளிகள் இல்லை. பொதுப்பட்டதாரிக்கான ஒரே புள்ளியே அனைத்திற்கும் வழங்கப்படுகிறது. அவனது படிப்பிற்கு புள்ளிகள் இல்லை.

புள்ளி திட்டத்தில் விளையாட்டுத்துறை அறநெறி கணணி மொழியறிவு என்பனவற்றிக்கு மாத்திரமே முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கிறது. அதனை வேண்டாமென்று நாம் சொல்லவில்லை.ஆனால் அவற்றைப்போன்று இன்னும் எத்தனையோ கவனிக்கப்படவேண்டிய துறைகளுள்ளன.
குறிப்பாக நுண்கலைப்பாடங்களில் அல்லது அகிலஇலங்கை தமிழ்மொழித்தினப்போட்டி நிகழ்ச்சிகளில் பாடசாலை மட்டத்திற்கோ வலய மாவட்ட மாகாண மட்டத்திற்கோ ஏன் தேசிய மட்டத்திற்கோ எவ்வித புள்ளிகளும் வழங்கப்படாதமை பாரிய அநீதியாகும்.

ஆனால் விளையாட்டுத்துறையில் சகல மட்டத்திற்கும் புள்ளிகள் உண்டு. என்ன பட்டதாரிகளை விளையாட்டுத்துறை அபிவிருத்தி உத்தியோகத்தாகளாக நியமிக்கும் திட்டமுள்ளதோ தெரியாது.
மேலும் விசேட தேவையுள்ள பட்டதாரிகளுக்கென எவ்வித சலுகையும் அல்லது புள்ளியும் வழங்கப்பட அந்தப்புள்ளித்திட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கவில்லை.

வர்கள் மேலும் தெரிவிக்கையில்:

பட்டதாரிகளின் நியமனமானது கடந்த காலங்களில் வழங்கப்பட்டது போல் பட்ட இறுதிச் சான்றிதழ் அடிப்படையில் அனைத்து பட்டதாரிகளுக்கும் வழங்கப்பட வேண்டும்.
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து தற்போது பட்டதாரிகளுக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்களை வழங்குவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டு நேர்காணலை முன்னெடுப்பதை வரவேற்கிறோம்.

இலங்கையில் யுத்தம் மற்றும் இயற்கை சார் அசாதாரண சூழல்களால் பாதிக்கப்பட்ட இனங்களை சார்ந்த பட்டதாரிகளிடம் உள்ள பட்டச் சான்றிதழை உள்ளடக்கிய வகையில் நியமனங்களை வழங்குவது பொருத்தமானது ஆகும். இவ்வாறே கடந்த காலங்களிலும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பட்டதாரிகளுக்கு இரண்டு வருட காலத்தில் கணனி மற்றும் மொழியறிவு பயிற்சிகளை வழங்கி அவர்களின் திறனை அதிகரிப்பது பொருத்தமான வழி முறை ஆகும். எந்தப் பட்டதாரியாக இருந்தாலும் தமக்கு வழங்கப்படுகின்ற பயிற்ச்சியை முழுமையாக உள்வாங்கி தமது தொழில் திறமைகளை வளர்த்துக் கொள்வார்கள்.

பட்டதாரிகளிடம் மனவுளைச்சலை ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் நேர்காணல் புள்ளி திட்டங்களை கைவிடுதல் சாலப் பொருத்தமானது ஆகும்.இல்லையேல் நாட்டின் சொத்தான ஃ நாட்டின் அபிவிருத்திக்கு உதவக்கூடிய பல பட்டதாரிகளின் உயிர் பலிகளும்ஃ மனநல பாதிப்பும் ஏற்படுவது உறுதி ஆகும்.
எனவே பட்டம் பெற்று வெளியேறிய எந்தவொரு பட்டதாரிகளும் பாதிக்காத வண்ணம் பொருத்தமான வழி முறையில் நல்லாட்சி அரசு செயற்பட வேண்டும். இவ் நல்லாட்சி அரசிற்கு நாட்டின் முதுகெலும்பான பட்டதாரிகள் பங்களிக்க வேண்டும் இதற்கான சரியான நிலையை பொருத்தமான அமைச்சு விரைந்து மேற்கொள்ள வேண்டும்.