மட்டு. மாவட்ட செலயக ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டு விழா – 2018

0
387

மட்டக்களப்பு மாவட்ட ஏற்பாட்டில் பிரதேச செயலகங்கள், ஸ்ரீலங்கா இராணுவம், கடற்படை, வான்படை, இலங்கைப் பொலிஸ் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் தமிழ் சிங்கள புத்தாண்டு விழா – 2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2மணிக்கு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் கச்சக்கொடி சுவாமி மலை விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

தேசிய ஒற்றுமை மற்றும் சமய நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கோடும் அரசாங்கத்தின் அபிப்பிராயங்களை வெற்றி கொள்ளச் செய்யும் நோக்கத்துடனும் மாவட்ட செயலாளர் மா. உதயகுமார் தலைமையில் நடைபெறும் இவ் விளையாட்டு விழாவில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு மாவட்ட செயலகம் அழைத்துள்ளது.

இவ் தமிழ் சிங்கள புத்தாண்டு விழாவில், புத்தாண்டு பாரம்பரிய உணவகத்தைத் திறந்து வைத்தல், ஊஞ்சல், யானைக்குக் கண்வைத்தல், பலூன் ஊதி உடைத்தல், போத்தலில் நீர் நிரப்புதல், தலையணைச் சமர்,முட்டை மாற்றுதல், ஊசியில் நூல் கொர்த்தல், சாக்கோட்டம், ஓலை பின்னுதல், தேங்காய் துருவுதல், கயிறு இழுத்தல், கோலம் போடுதல், விநோத உடை, மர்ம மனிதனைக் கண்டுபிடித்தல், காடு கட்டி, முட்டி உடைத்தல், கிராமியப்பாடல் போட்டி, தண்ணீரில் அப்பிள் சாப்பிடுதல், நீராடி பணிஸ் சாப்பிடுதல், நெல்லுக் குற்றி புடைத்தல் உள்ளிட்ட விளையாட்டுக்கள் நடைபெறவுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந்தின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகும் இந்நிகழ்வு பரிசு வழங்கல்களை அடுத்து மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் திருமதி தினேஸ் தெட்சிணகௌரியின் நன்றியுரையுடன் நிறைவடையும்.