மட். அரசினர் ஆசிரிய கலாசாலையின் புதிய அதிபராக பாலசுந்தரம் பரமேஸ்வரன்

0
1684

மட்டக்களப்பு அரசினர் ஆசிரிய கலாசாலையின் புதிய அதிபராக இலங்கை ஆசிரிய கல்வியியலாளர் சேவை தரம் ஒன்றைச் சேர்ந்த பாலசுந்தரம் பரமேஸ்வரன் இன்றைய தினம் புதிய அதிபராக கடமைகளைப் பொறுப்பேற்றார்.

1982ல் அம்பாறை மாவட்டத்தின் கோமாரி மெதடிஸ்த மகா வித்தியாலயத்தில் பயிற்றப்பட்ட ஆசிரியராக சேவையில் இணைந்து கொண்ட இவர், தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் பயிற்றப்பட்ட பட்டதாரியாக 1993 – 1994 கடமையாற்றினார். தம்பிலுவில் சரஸ்வதி வித்தியாலயத்தில் பிரதி அதிபராக 1995 முதல் 1998 வரை கடமையாற்றினார்.

1997 முதல் 2001 வரை சேவைக்கால ஆசிரிய ஆலோசகராக கல்முனை கல்வி வலயத்திலும் அக்கரைப்பற்று கல்வி வலயத்திலும் கடமை புரிந்துள்ளார்.

2001 ஆம் ஆண்டு ஆசிய கல்வியியலாளர்சேவைக்குத் தெரிவு செய்யப்பட்ட இவர் வவுனியா தேசிய கல்விக் கல்லூரியில் விரிவுரையாளராகவும், பின்னர் விரிவுரை இணைப்பாளராக கல்வித் தர மேம்பாட்டுக்குப் பொறுப்பாராகவும், 2010 வரை செயற்பட்டார்.

2010 பெப்ரவரி முதல் 2018 ஏப்ரல் வரை மட்டக்களப்பு அரசினர் ஆசிரிய கலாசாலையில் கல்வி, தர மேம்பாட்டுப்பிரிவுக்கான பிரதி அதிபராக கடமையாற்றினார்.

2018 ஏப்ரலில் அதிபர் ஏ.எஸ்.யோகராஜா ஓய்வு பெற்ற பின்னர் இன்று முதல் கலாசாலையின் அதிபர் பதவியைப் பொறுப்பேற்றார்.

இவர் பேரபாதனைப் பல்கலைக்கழகத்தில் கலைப்பட்டத்தினையும், பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆங்கிலப் பாடநெறி பயிறிசி ஆசிரியராகவும், பட்டப்பின் கல்வி டிப்ளோமாவில் திறமைச்சித்தியை தேசிய கல்வி நிறுவகத்திலும், முது கல்வி மாணிப்பட்டத்தை தேசிய கல்வி நிறுவகத்திலும், முது மாணி ஆசிரிய கல்வியை திறந்த பல்கலைக்கழகத்திலும் முது தத்துவமாணிப்பட்டத்தினை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலும், பட்டப்பின் கல்வி முகாமைத்துவப்பட்டத்தினை தேசிய கல்வி நிறுவகத்திலும் பூர்த்தி செய்துள்ளார்.

ஆசிரியப்பணியில் 36ஆவது வருடத்தில் கால் பதித்துள்ள இவர், தனது 57 ஆவது வயதில் மட்டக்களப்பு அரசினர் ஆசிரிய கலாசாலையின் அதிபர் பதவியைப் பொறுப்பேற்றுள்ளார்.

இவரது வரவை கல்விச் சமூகமும் மட்டக்களப்புச் சமூகமும் வாழ்த்துகிறது.