தண்ணீர் சோறு நாகரீகமற்றதாகி பிறியாணி பிரியமானதா?

0
758

– படுவான் பாலகன் –

படுவான்கரை மக்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தியது யார்?

மதியவேளை, வெப்பமும் அதிகமாகவுள்ளது. மரத்தின் நிழலின் கீழ் சைக்கிளை வைத்துவிட்டு சிறிது தூரம்நடந்து செல்கையில் படுவான்கரைக்கே உரித்தான இயற்கை அழகும், அத்தான், மாமா, பெரியப்பா, மாமி என பல உறவுகளை கூறி அழைக்கின்ற சத்தமும் ஒருபுறமாக ஒலித்துக்கொண்டிருக்கின்றது. வீடு அமைந்துள்ள காணியினைச் சுற்றி முள்வேலி, வளவிற்குள் செல்வதற்கென அமைக்கப்பட்டுள்ள கடப்பின் (கதவு) முன்புறம் இரு வாழைகள் குலைகளுடன் நிற்க, நல்வரவு என்ற பதாதையும் காட்சிபடுத்தப்பட்டிருந்தது. நானும் நடந்து கொண்டு செல்கையிலே என்னைநோக்கியும் பல உறவுச்சொற்கள் கூறப்படுகின்றன. அவ்வுறவுகளுடன் பேசி,சிரித்து நிற்கின்ற வேளை, உள்ளே வாரூங்கள், வாரூங்கள் என்ற அழைப்பும் உரத்துக்கேட்கின்றது. அன்பும்மேலோங்குகின்றது. உள்ளே நுழைவதற்கு முன் பன்னீர் தெளித்து, திருநீறு, சந்தனம் சாத்தி நிற்கின்றனர் படுவான்கரையின் எதிர்கால தாய்குலங்கள். அவர்களின் வரவேற்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தி நிற்கின்றது. அழகாக அலங்கரிக்கப்பட்ட கொட்டில் அதன் கீழே அமருவதற்கென கதிரைகள் கதிரையில் அமருமாறு ஒருவர் பின் ஒருவராக பலர் கூறுகின்றனர். எல்லோரின் அன்பையும் ஏற்று அமர்ந்து கொண்டேன். எல்லோரும் என்னைப்பார்த்து முகமலர்ச்சி கொள்கின்றனர். சுகபலன்களை கேட்கின்றனர். மிக்க மகிழ்ச்சியை கொடுத்து நிற்கின்றது. என்று கதிர்காமத்தம்பி என்னிடம் ஒருநாள் மாலைப்பொழுது, படுவான்கரையின் மாற்றம் தொடர்பில் பேசிக்கொண்டிருக்கின்ற போது கூறினார்.

 

படுவான்கரைக்கான பண்பாடுகளையும், பாரம்பரியங்களையும் அழித்துவிடக்கூடாது என்பதில் மிகவும் அக்கறையுடன் செயற்படுபவர் கதிர்காமத்தம்பி. ஆனாலும் என்னவோ! பண்பாடுகளிலும், பாரம்பரியங்களிலும் மாற்றங்கள் ஏற்படத்தான் செய்கின்றன. அவ்வாறு பண்பாடுகளிலும் பாரம்பரியங்களிலும் மாற்றங்களை செய்யவேண்டாம் என பேசினால் எம்மை விரோதியாய் பார்க்கின்றனர். வந்தோரை வாவென்றழைத்து, வயிறாற உணவழித்து அனுப்புகின்ற பண்பாடு படுவான்கரையிலே இன்றும் வேரூன்றி இருக்கின்றது. பலருக்கு உணவு கொடுத்த மண் படுவான்கரையென்றால் மாற்றுக்கருத்து இருக்காது. இது இவ்வாறு இருக்க, கதிர்காமத்தம்பி தொடர்ந்தும் என்ன கூறினார் என்பதனை கூறுகின்றேன்.

படுவான்கரைப்பகுதியில் நடைபெற்ற பூப்புனித மஞ்சள் நீராட்டு மகிழ்ச்சி கொண்டாட்டத்திற்கு கதிர்காமத்தம்பி சென்றிருக்கின்றார். அங்கு நடைபெற்றவைதான் மேற்சொன்னவை. அவர் மேலும் கூறியவையை கூறுகின்றேன்.

கதிரையில் அமர்ந்து கொண்ட பின் எல்லோரையும் சுற்றிப்பார்த்தேன், மகிழ்ச்சியுடன், உறவு சொல்லி அழைத்துக்கொண்டு இருந்தனர். பிள்ளைகளும் விளையாடிக் கொண்டிருந்தனர். கதிரையில் இருந்தவர்களின் கைகளும் கழுவப்பட்டன. சிலர் சாப்பிட்டும் கொண்டும் இருந்தனர். எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இருக்கையில் வீட்டின் கூரையில் நிறைகுடங்களும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதனைப் பார்க்கும் போதும் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. படுவான்கரையில் உள்ள மக்களது வீடுகளில், திருமணம், பூப்புனித மஞ்சள் நீராட்டு போன்ற மங்கலகரமான நிகழ்வுகள் நடைபெற்றாலோ, மரணச்சம்பங்கள் இடம்பெற்றாலோ இங்குள்ள குடி வழமைக்கேற்ப வீட்டுக்கூரையில் நிறைகுடங்கள் வைப்பது பாரம்பரியமானது. அந்த பாரம்பரியம் அங்கு பேணப்பட்டிருந்தமை மகிழ்ச்சியை கொடுத்து நிற்க, கையை கழுவுங்கோ என்று கூறிய படி ஒரு கையில் வாளியுடனும், மறுகையில் தண்ணீர் பாத்திரத்துடனும் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். கைகளை வாளிக்குள் வைத்து பிடிக்க நீரை ஊற்ற கைகளை கசக்கி கழுவிக்கொண்டிருந்தேன். படுவான்கரையில் நிகழ்வென்றால் கட்டாயம் கலந்து கொள்வேன். இங்குள்ள மக்களின் வரவேற்பும், வழங்குகின்ற உணவும் என்றுமே மறக்கமுடியாத உணவாக இருக்கும். அவர்கள் வயல்களிலே விதைத்து அறுவடை செய்த நெல்லின் மூலம் பெறப்பட்ட அரிசியை சோறாக சமைத்து இருப்பார்கள். கறிக்கு அவர்களது வீட்டிலே அல்லது வயல்களிலே, சூழலிலே காணப்படுகின்ற இலைகளில் ஒன்றை சுண்டலாக சுண்டி வைத்திருப்பார்கள். அச்சுண்டல் மட்டுமே போதும். வயிறு நிறைவாகிவிடும். அதேபோன்று கிழங்கு அல்லது ஏதாவது இலைகளை இட்டு சொதியும், குளத்திலே அல்லது ஆற்றிலே பிடிக்கப்பட்ட மீன் அல்லது கோழி அல்லது ஆடு இறைச்சியை குழம்பாக சமைத்திருப்பார்கள். அத்தோடு தயிரும் வைத்திருப்பார்கள் அத்தனையும் சாப்பிட்டால் அன்று பூராகவே உணவுதேவையிருக்காது. சமைக்கும் விதமும் சிறப்பாக இருப்பதுடன் ருசியாகவும் இருக்கும். என்கிறார் கதிர்காமத்தம்பி.
கதிர்காமத்தம்பியும் அவ்வாறான உணவுதான் இருக்கும் என்ற ஆசையில் கைகளை கழுவி விட்டு நிமிர்ந்து அமர, அவன் கைகளிலே பிறியாணி சாப்பாடு வழங்கப்பட்டதாக கூறினான். சற்றுமே எதிர்பாராத நிலையில் வழங்கப்பட்டமை அவனது எதிர்பார்ப்பை மிகவும் சீர்குலைத்துநின்றதாக கூறினார். தனது கைகளிலே உணவை வைத்துக்கொண்டு, உணவு வழங்கியவரை அழைத்து வெள்ளைச்சோறு, சுண்டல் இல்லையா? என்று கேட்க இல்லை. என்ற பதில்தான் ஒலித்ததாக கூறிய கதிர்காமத்தம்பி. சாப்பிடவேண்டும் என்பதற்காக சாப்பிட்டுவிட்டு எழுந்ததாக கூறினான்
தமிழர்களது பாரம்பரிய உணவுகளையும், வெள்ளைநாட்டார் விரும்பி நிற்கும் அதேவேளை தண்ணீர்சோற்றின் அவசியம் கூறித்தும் மேலைநாட்டார் கூறி நிற்கின்ற நிலையில் காலையில் தண்ணீச்சோறு சாப்பிட்டேன் என்று கூறுவதற்கும், அவற்றிலிருந்து விடுபடுகின்ற சமூகமாக இருப்பதும் எமது உடல் நலனுக்கே கேடாகும். அதேபோலதான் செலவின்றி பெறக்கூடிய சத்துள்ள உணவுகள் இருக்கின்ற போதும் நாகரீகம் என்ற போர்வையில் பிறியாணி சமைத்து வாழ்நாளை குறைத்துக்கொள்ளுகின்றோம். எமது மூதாதைகள் கொடுத்த பண்பாடுகளும், பாரம்பரியங்களும் நமது இருப்புக்கும் அவசியமானவை. அவற்றினை பேணுகின்றபோதே இருப்புக்களும் நிலையாகும்.