மட்டக்களப்பு மாநகரசபையில் திண்மக் கழிவு முகாமைத்துவம் தொடர்பிலான கலந்துரையாடல்…

0
406

 

மட்டக்களப்பு மாநகரசபையின் ஏற்பாட்டில் மாநகரசபை உறுப்பினர்களுக்கு திண்மக் கழிவு முகாமைத்துவம் தொடர்பிலாக கலந்துரையாடலும், உலகலாவிய ரீதியில் திண்மக் கழிவு முகாமைத்துவத்திற்குப் பயன்படுத்தப்படும் முறை தொடர்பிலான அறிமுகக் கலந்துரையாடலும் இன்று மட்டக்களப்பு மாநகர மண்டபத்தில் மாநகரசபை முதல்வரின் ஏற்பாட்டில் மாநகர ஆணையாளர் என்.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தி.சரவணபவான், பிரதி முதல்வர் க.சத்தியசீலன் உட்பட மாநகரசபை உறுப்பினர்கள், மாநகரசபைப் பிரதி ஆணையாளர் மற்றும் அவுஸ்திரேலியாவின் குளோபல்கிறீன் இன்டர்நஷனல் நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி சன்ன பெர்னான்டோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது தற்போதுள்ள திண்மக்கழிவு முகாமைத்துவங்கள் பற்றிய பல்வேறு விளக்கங்கள் மாநகர சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டதுடன். உலகலாவிய ரீதியில் அங்கீகரித்து நடைமுறைப்படுத்தப்படுகின்ற பைரோலிசிஸ் முறைமை தொடர்பிலும் விளக்கம் கொடுக்கப்பட்டது.

இம்முறையினை மட்டக்களப்பில் ஆரம்பிப்பதற்கான கலந்துரையாடலும் இங்கு இடம்பெற்றது.

ஒட்சிசன் இல்லாத உச்சநிலை வெப்பத்தால் கழிவுகளை வெப்பச் சிதைவு செய்து அதிலிருந்து வரும் சக்தியைக் கொண்டு கழிவிலிருந்து மின்வலுப் பெறும் தொழில்நுட்பமே இந்த பைரோலிசிஸ் முறைமையாகும். இம்முறைமையின் மூலம் திரட்டப்படுகின்ற கழிவுகள் சேரிக்கப்படாமல் அத்தினமே வெப்பச் சிதைவு செய்யப்பட்டு மின்வலுவுக்கான சக்தி பெறப்படுகின்றது.

இதன் மூலம் தற்போது மேற்கொள்ளப்படுகின்ற குப்பைக் கிடங்கு முறைமை நீங்கப்படும் நிலைமையும் அதிகரிக்கும் என வலியுறுத்தப்பட்டது. மட்டக்களப்பு மாநகரத்தில் ஏற்படுகின்ற குப்பை பிரச்சினை தொடர்பில் இதன் மூலம் ஒரு தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் இதன் போது கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

இவ்விடயத்திற்கான மாநகர சபை அனுமதி மற்றும் இதனை எங்கு ஆரம்பிப்பது போன்ற விடயங்கள் தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.