அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனத்தில் நேர்முகத்தேர்வுக்குத் தோற்றிய, குறிப்பிட்ட ஆண்டுக்கு முன் பட்டத்ததைப் பெற்றவர்களை உள்வாங்குக!

0
947

புள்ளியிடலையும், வயதெல்லையையும் பரிசீலனை செய்து மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பிட்ட ஆண்டுக்கு முன் பட்டப்படிப்பை பூர்த்தி செய்த, நேர்முகத் தேர்விற்கு தோற்றிய அனைவரையும் உள்வாங்க நடவடிக்கை எடுக்குமாறு கூறி ஜனாதிபதிக்கு இன்று(19) கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணசபையின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கொள்கைத் திட்டமிடல் அமுலாக்கல் அமைச்சினால் முழு இலங்கையிலுமுள்ள வேலையற்ற பட்டதாரிகளை பயிலுனராக இரண்டு வருட பயிற்சி அடிப்படையில் சேர்த்துக் கொள்வதற்காக 31.12.2016 அன்று பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்களாய் இருக்க வேண்டுமென்றும், 08.09.2017 திகதியில் 35வயதிற்கு மேற்படாதவராக இருக்க வேண்டுமென்ற அடிப்படையிலும் விண்ணப்பம் கோரப்பட்டதென்பது வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஒர் உற்சாகத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது. இது பாராட்டத்தக்க ஒரு விடயமாகும்.

இத்திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இம்மாதம் 16ம்திகதி முதல் 25ந்திகதி வரை ஏறக்குறைய 2500 ற்கு மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கான நேர்முகத் தேர்வு நடைபெற்று வருவதாக அறியமுடிகிறது. இந் நேர்முகத்தேர்வில் சான்று ஆதாரங்கள் இருக்கும் பட்சத்தில் 100புள்ளிகள் பெறக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாக அறிகின்றேன்.

இதில் 65புள்ளிகளை பெறுவதற்கான வாய்ப்புக்கள் 90சத வீதமானோருக்கு காணப்படவில்லை என்பது எனது கணிப்பாகும். அண்ணளவாக 35 புள்ளிகளை மாத்திரமே அதிக பட்சமான பட்டதாரிகள் பெறுவதற்கான வாய்ப்புக்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணக்கூடியதாக நான் உணர்கின்றேன். இதனை தேசிய ரீதியாக பரிசீலனை செய்யுமிடத்து புள்ளிகளில் பாரிய ஏற்றத்தாழ்வுகள் காணப்படக்கூடும்.

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் குறிப்பிட்ட புள்ளியிடல் முன்னெடுக்கப் படுமாயிருப்பின் ஒரு சிலரே இரண்டு வருட பயிற்சிநெறிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

எனவே இரண்டு வருட பயிற்சியில் இணைக்கப்படவுள்ள வேலையற்ற பட்டதாரிகளின் புள்ளிகள் பரீசிலனை செய்யப்பட்டால் மட்டுமே 800-1000 பேர் வரையில் உள்வாங்கப்பட சந்தர்;ப்பம் ஏற்படும். இது தவறுமிடத்து மிகச் சிறு தொகையினரே மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பட்டதாரி பயிலூனர்களாக தெரிவு செய்யப்படும் வாய்ப்பு உள்ளது.

எனவே புள்ளியிடலையும், வயதெல்லையையும் பரிசீலனை செய்து மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பிட்ட ஆண்டுக்கு முன் பட்டப்படிப்பை பூர்த்தி செய்த, நேர்முகத் தேர்விற்கு தோற்றிய அனைவரையும் உள்வாங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.