வாழைச்சேனையில் விபுலானந்தர் சிலை அமைக்க தவிசாளருக்கு மகஜர்

0
428

வாழைச்சேனையில் விபுலானந்தர் வீதியில் விபுலானந்தர் சிலை அமைத்தல் மற்றும் வாழைச்சேனை பொது மைதானத்திற்குப் பெயர் சூட்டுதல் தொடர்பான மகஜரை வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித்திற்கு பிரதேச சபை உறுப்பினர் க.கமலநேசன் வழங்கி வைத்தார்.

வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் தனது கடமைகளை பொறுப்பேற்ற போது கலந்து கொண்டு இந்த மகஜரை வழங்கி வைத்தார்.

அந்த மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது!

வாழைச்சேனை விபுலானந்தர் வீதியில் அமைந்துள்ள விபுலானந்தர் சிலை தனியார் காணியில் அமைந்துள்ளதால் அச்சிலையை அகற்றி விபுலானந்தர் வீதியிலேயே உள்ள பொது இடம் ஒன்றிலே புதிதாக நிறுவ வேண்டும் என ஊர்ப் பொதுமக்கள் கோரிக்கைகளை தொடர்ச்சியாக விடுத்து வருவது தாங்கள் அறிந்த விடயம்.

விபுலானந்தர் வீதி எனப் பெயர் உள்ளதனாலும், குறித்த சிலையை அமைப்பதற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என பிரதேச சபை தவிசாளரை கேட்டுக் கொள்கின்றேன்.

அத்தோடு வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேசத்திற்கு சொந்தமான பொது மைதானத்திற்கு நாமம் ஒன்றை சூட்டுவதற்கு தங்கள் ஒத்துழைப்பை வேண்டி அறிக்கையொன்றை சமர்ப்பிக்கின்றேன்.

முன்னாள் தவிசாளர் கணபதிப்பிள்ளை கனகரெத்தினம் என்பவர் 1974இல் 03 ஏக்கர் காணியை கொள்வனவு செய்து பொது மைதானத்தை அமைத்து மக்கள் பாவனைக்கு ஒப்படைத்தார்.

அதுமாத்திரமன்றி பிரதேச சபைக் கட்டடம் (1985 இல் இனக் கலவரத்தில் உடைக்கப்பட்டது) நூலகம், சிறு வீதிகள், தெரு விளக்குகள், முன்பள்ளிகள், பொதுக் கிணறுகள், வடிகாண் அமைப்புக்கள் எனப் பல்வேறுபட்ட செயற்பாடுகளை கிட்டத்தட்ட 15 வருடங்களாக பிரதேசத்திற்கு அளப்பரிய சேவையாற்றியுள்ளார்.

அவரது சேவையை கௌரவப்படுத்தும் வகையில் பொது மைதானத்திற்கு சேர்மன் கனகரெத்தினம் என்னும் நாமத்தை சூட்டுவதற்குரிய நடவடிக்கைகளை குறுகிய காலத்திற்குள் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.