பெண்களின் பொருளாதாரம், வாழ்வாதாரம் மெருகூட்ட எனது வேலைத் திட்டங்கள் அமையும்

0
364

பெண்களின் பொருளாதாரம், வாழ்வாதாரம் மெருகூட்ட எனது வேலைத் திட்டங்கள் அமையும் என வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் தெரிவித்தார்.

வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராக தனது கடமைகளை புதன்கிழமை பொறுப்பேற்றதன் பிற்பாடு கருத்து தெரிவிக்கும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-

தற்போது நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபை தேர்தலின் பிற்பாடு கிழக்கு மாகாணத்தில் உள்ளுராட்சி சபையின் தவிசாளராக முதல் பெண் என்ற வகையில் நான் மாத்திரம் நியமனம் பெற்றுள்ளதாக அறிகின்றேன்.

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்கள் மற்றும் மக்களின் அபிவிருத்தி என்ற நோக்கத்துடன் கட்சி, இன, மத பேதமற்ற வகையில் பிரதேச சபையினால் செய்யக் கூடிய அனைத்து வேலைத் திட்டங்களையும் மிகச் சிறந்த முறையில் முன்னெடுத்து மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதே எனதும், எமது சபை உறுப்பினர்களின் நோக்கமாக அமையும்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இத்தேர்தலில் பெண்களுக்கான விகிதாசாரத்தினை வழங்கியுள்ளது. இந்த அரசாங்கம் 25 வீதம் பெண்கள் உள்வாங்கும் வகையில் திட்டத்தி;னை நடைமுறைப்படுத்தியுள்ளது.

எனவே எமது சமூகத்தில் வாழும் பெண்களின் பொருளாதாரம், வாழ்வாதாரம், அவர்களது ஏனைய வேலைத் திட்டங்களை நான் பெண் என்ற ரீதியில் முன்னுரிமை கொடுத்து முன்னெடுப்பேன் என்றார்.