கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி  முஸ்லிம்பெண்கள் ஒன்றியம்

0
330

கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி  முஸ்லிம்பெண்கள் ஒன்றியம் அமைக்கப்பட்டுள்ளது.கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் அவர்கள் எதிர் கொள்ளும் சவால்கள் போன்றவற்றை தீர்த்து வைப்பதற்காக இந்த பெண்கள் ஒன்றியம் அமைக்கப்பட்டுள்ளதாக இதன் ஏற்பாட்டாளரும் தலைவியுமான காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சல்மா ஹம்ஸா தெரிவித்தார்.

இந்த ஒன்றியத்தின் அங்குரார்ப்பணக் கூட்டம் அண்மையில்  காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.எல்.மைமுனா உட்பட மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இருந்து பெண் சட்டத்தரணிகள் பெண் வைத்தியர்கள், இலங்கை நிர்வாக சேவையுடை பெண்கள் பெண் அதிபர்கள் மற்றும் துறைசார்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது இந்த ஒன்றியத்திற்கான தலைவியாக காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சல்மா ஹம்ஸா தெரிவு செய்யப்பட்டதுடன் உப தலைவியாக ஓட்டமாவடியைச் சேர்ந்த மௌலவியா ஜமீலா அஸ்ரப், செயலாளராக ஏறாவூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பிரதிக் கல்விப்பணிப்பாளர் எஸ்.ஏ.நசீறா பொருளாளராக காத்தான்குடியைச் சேர்ந்த மர்ழியா இஸ்ஸதீன் ஆசிரியை, உப செயலாளராக சாய்ந்தமருதைச் சேர்ந்த நதீறா நெசளத் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதுடன் சட்ட ஆலோசகராக ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.எல்.மைமுனா தெரிவு செய்யப்பட்டார். இதன் நிருவாக அங்கத்தவர்களாகவும் 25 பேர் தெரிவு செய்யப்பட்டனர்.

திருகோணமலை மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலுள்ள பிரதேசங்களுக்கும் இதன் இணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

முஸ்லிம் பெண்களுக்கு அவ்வப்போது ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் முஸ்லிம் பெண்கள் எதிர் கொள்ளும் பல்வேறு சவால்கள் போன்றவற்றை தீர்த்து வைப்பதற்காக இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டு அநாதரவாக கைவிடப்படும் முஸ்லிம் பெண்களை காப்பதற்கான காப்பகம் ஒன்றை காத்தான்குடியில் அமைப்பதற்கான தீர்மானமும் இந்த கூட்டத்தின் போது எடுக்கப்பட்டுள்ளதாக இதன் தலைவியும் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான சல்மா ஹம்சா குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்களில் இவ்விவகாரங்களை கையாள்வதற்காக பிரதேச இணைப்பாளர்களை நியமித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.