விளம்பி வருடப்பிறப்பு விளம்புவது என்ன?

0
397

உலகஇயக்கத்திற்கு உறுதுணையாக இருப்பது சூரியன்.தமிழர்கள் இயற்கையோடு வாழ்ந்தவர்கள். அன்று இயற்கையை தெய்வமாக வழிபட்ட அவர்கள் இன்றும் சூரிய சந்திரரோடு தமது வாழ்வியலையும் சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் வரையறுத்துக்கொண்டவர்கள்.
 
ஞாயிறு ஒளி பரவாவிடின் வையகத்தில் விடிவில்லை. அகிலமும் அண்டசராசரமும் இருட்டு. சூரியபகவான் காலத்தை அளப்பதற்குமட்டுமல்ல உயிரின் தோற்றத்திற்கும் வாழ்க்கைக்கும் மூலவிசையாகத் தொழிற்படுகின்றார்.
ஆதிசங்கரர் தோற்றுவித்த ஆறுவித வழிபாட்டில் சூரியவழிபாடும் ஒன்று. அதனை சௌரம் என அழைப்பர். 
 
விண்ணுலகத் தெய்வமான சூரியனோடு தொடர்புடைய விழா பொங்கல் விழா.அதேசூரியன் 12இராசிகளிலும் சஞ்சரித்து மீண்டும் மகரராசியில் பிரவேசிக்கும் தினம் புத்தாண்டாக கொள்ளப்படுகிறது.
பிரம்மா உலகப்படைப்பை ஆரம்பித்த நாள்தான் புதுவருடப்பிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.
இலங்கையில் தமிழ் – சிங்கள மக்களால் கொண்டாடப்படும் வைபவமாக புதுவருடப் பிறப்பு இருப்பதால் இது ஒரு தேசியப் பெருவிழாவாகவும் முக்கியத்துவம் பெறுகிறது. புதிய எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் வைத்து மங்களகரமான திருநாளாக சித்திரைப் புதுவருடம் வரவேற்கப்படுகிறது
 
கைவிஷேடம்
சித்திரை முதல் நாளன்று அனேகமானோர் கோயில்களுக்கு சென்றும் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டும் மற்றும் பல வகைகளிலும் வருடப் பிறப்பை சிறப்பாக கொண்டாடுவர்.
 
சித்திரைப் புதுவருடத்தின் மற்றொரு சிறப்பு அம்சம் கைவிசேடமாகும். ஆரம்ப காலத்தில் வீட்டின் தலைவி உரிய சுப நேரத்தில் சிறிய மூலிகைப் பொட்டலம் ஒன்றினை கிணற்றுக்குள் போட்டுவிட்டு பிறக்கும் புத்தாண்டு நிமித்தம் முதல் முறையாக தண்ணீரை கிணற்றிலிருந்து வெளியில் எடுப்பதையே கை விசேடமாக கருதப்பட்டது. ஆயினும் நாளடவில் கைவிசேடம் என்பது சுபமுகூர்த்தத்தில் பணத்தை கொடுப்பதும் எடுப்பதும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
 
நல்ல நேரத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் குடும்பத் தலைவரிடமிருந்தும் வயதில் மூத்தவர்களிடமிருந்தும் அலுவலகங்கள் விற்பனை நிலையங்கள்இ தொழிற்சாலைகள் என்பவைகளில் வேலை செய்வோர் தங்கள் வேலை கொள்வோரிடமிருந்தும் புதுவருடத்தில் முதல் அன்பளிப்பாக வெற்றிலையில் பாக்கு நெல்லு காசு என்பவற்றை வைத்து குத்து விளக்கின் முன்னாலே வைத்து கொடுப்பர்கள். பணத்தை கைவிசேடமாக பெற்றுக்கொள்வார்கள். கொடுக்க பட்ட எல்லாவற்றையும் எண்ணி (நெல்லு உட்பட) அது ஒற்றை விழுந்தால் நல்ல பலன் என்பது ஐதீகம். கைவிசேடம் பரிமாறிக்கொள்வது என்பது ஒரு பாரம்பரியமான வழக்கமாகும்.
 
மூத்தோர்களிடமிருந்து கைவிசேடம் பெற்றால் அந்த ஆண்டு முழுவதும் பணவரவும் பல நன்மைகளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. கைவிசேடமாக பெற்ற பணத்தை அந்த ஆண்டு முழுவதும் பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்பதும் நம்பிக்கையாக கடைப்பிடிக்கப் பட்டு வருகிறது.
 
சிங்கள மக்கள் தமது புதுவருடத்தில் புத்தாண்டுக்கான ஏற்பாடுகள் அதற்கான சுபநேரத்தில் அரிசி இடித்து அடுப்புக்கட்டி பலகாரம் சுடுவதுடன் ஆரம்பிக்கப்படுவது வழக்கமாகும்.அடுத்ததாக பழைய வருடத்திற்கான ஸ்நானம் இடம்பெறும். உடலையும் உள்ளத்தையும் சுத்தப்படுத்தும் நோக்கி இடம்பெறும் இந்த குளியில் பழைய வருடத்திற்கான இறுதிக் குளியலாகும். புத்தாண்டுக்கான விசேட நீராடல் சிங்களவர் மத்தியில் வழக்கத்தில் இருந்து வருகின்றது.
 
கலை கலாச்சார நிகழ்வுகள்
நாட்டின் முக்கிய பகுதிகளிலும் கலை கலாசாரஇசை நிகழ்ச்சிகளுடன் சித்திரைப் புதுவருடம் சிறப்பாகவே கொண்டாடப்படும். இடத்துக்கு இடம் அந்தந்தப் பிரதேச கலாசார மரபுகளுக்கு அமைய வைபவ நடைமுறைகள் வேறுபட்டிருந்தாலும் பாரம்பரியமான நிகழ்ச்சிகளான போர்த்தேங்காய் அடித்தல் சேவல் சண்டை கிளித்தட்டு சடுகுடு போன்ற விளையாட்டுகள் எல்லா இடங்களிலும் நடைபெறும் சிறப்பு அம்சங்களாகும்.
 
இத்துடன் ஊஞ்சலாட்டம் கும்மியடித்தல் கொக்கான் வெட்டுதல் பல்லாங்குழி ரபான் அடித்தல் சொக்கட்டான் போன்ற பெண்கள் கலந்து கொள்ளும் விளையாட்டுகளும் இடம்பெறுவதுண்டு. அத்துடன் மாட்டு வண்டிச் சவாரி துவிச்சக்கர வண்டி ஓட்டம் மரதன் ஓட்டம் சைக்கிள் ஓட்டம் தலையணை சண்டை வழுக்கு மரம் ஏறுதல் போன்ற போட்டிகளும் சித்திரைப் புதுவருடத்தையொட்டி நடைபெறுவது வழக்கம்.
 
புதுவருடத்திற்காக அடுப்பு மூட்டுவதும் ஒரு பழக்கமாகும். பழைய வருடத்தின் முடிவில் அனைத்து அடுப்பு வேலைகளும் முடிவிற்குக் கொண்டுவரும் வீட்டுத் தலைவி அடுப்புச் சாம்பலையும் அப்புறப்படுத்தி அடுப்பை தூத்துவிடுவான். அதன் பின் புத்தாண்டு பிறக்கும் வரை வீட்டில் அடுப்பு பத்த வைப்பதில்லை. உரிய நேரம் காலம் பார்த்து மீண்டும் புதுப்பானை வைத்து பொங்குவதற்காக வீட்டுத் தலைவி சுபமுகூர்த்தத்தில் அடுப்பை பத்த வைப்பதே வழக்கத்தில் இருந்து வருகின்றது.
 
 
சுவாமி பிறந்தது கரவருடத்திலா?
அகிலம் போற்றும் முத்தமிழ்வித்தகர்  சுவாமி விபுலானந்தர் பிறந்த கரவருடம் பங்குனித்திங்கள் 16ஆம் நாளுக்கு நேரொத்த ஆங்கிலத்திகதி 27.03.1892 என கணிப்பிடப்படுகிறது. சுவாமியின் தந்தையாhர் பிந்திபதிவுவைத்த காரணத்தினால் பெற்ற பிறப்பத்தாட்சிப்பத்திரத்தை வைத்துக்கொண்டு சிலர் சுவாமி 5ஆம் மாதம் 03ஆம் திகதி பிறந்ததாக கூறுவதை முற்றாக மறுக்கின்றேன். 
ஏனெனில் தமிழ்சித்திரைப்புத்தாண்டு பிறப்பது சித்திரை மாதம் 1ஆம் திகதி அதாவது ஏப்ரல் 14ஆம் திகதி. அப்படி 5ஆம் மாதம் எனின் கரவருடத்தில் சுவாமி பிறக்கவில்லை.மாறாக நந்தன வருடத்தில் பிறந்திருக்கவேண்டுமே. எந்த ஒரு இடத்திலும் சுவாமி பிறந்தது கரவருடத்திற்குப்பதிலாக நந்தன வருடம் என்று குறிப்பிட்டிருக்கவில்லை.
எனவே சுவாமி பிறந்தது 27.03.1892இல்தான் என்பது நிருபணமாகிறது.
 
பாரம்பரியம்!
இந்நன்னாளில் எம்மவர்கள் மருத்துநீர் தேய்த்து சிரசில் கடப்பமிலையும் பாதத்தில் வேப்பமிலையும் வைத்து ஸ்ஞானம் செய்து புத்தாடை தரித்து கண்கண்ட தெய்வமாம் சூரியபகவானை வணங்கி பொங்கலிட்டு ஆலயவழிபாட்டில் ஈடுபட்டு குரு பெரியார்களின்ஆசிபெற்று அறுசுவை உண்டியுண்டு உற்றார் உறவினர்களிடம் சென்று பாரம்பரிய விளையாட்டுகளில்ஈடுபட்டுசுகமான நித்திரைசெய்வது வழமையாகும்.
 
இலங்கையில் தேசிய நல்லுறுவுக்கான ஒரு தேசிய விழாவாக புத்தாண்டை இந்துதமிழரும் பௌத்தசிங்களமக்களும் இணைந்து கொண்டாடுகின்றனர் என்பது சிறப்பம்சமாகும். இத்தினங்கள் தேசிய விடுமுறையாக இலங்கையில் பதியப்படுவதும் சிறப்பம்சமாகும்.
புத்தாண்டில் சுபநேரம் அதிமுக்கியத்துவம்!
இந்த விழாவானது சமய சம்பிரதாயங்களை உள்வாங்கிய விழாவாகும். தமிழர்களின் பாரம்பரியங்கள் அதேபோல் சிங்களமக்களின் பாரம்பரியங்கள் பறைசாற்றப்படுகின்றதை யாவரும் அறிவோம்.
 
இதில் குறிப்பாக சுபநேரம் என்பது முக்கியஇடத்தைப்பிடிக்கின்றது. புத்தாண்டில் அனைத்து கருமங்களையும் சுபநேரம் பார்த்தே நிறைவேற்றுவார்கள்.
குறிப்பாக மருத்துநீர் தேய்த்தல் புத்தாடை புனைதல் பொங்கலிடல் கைவிசேசம் புதியஉணவு உண்ணல் செய்தொழில்செய்தல் அனைத்துமே சுபநேரம் பார்த்தே செய்வார்கள். தலைக்கு எண்ணெய்வைத்தல் சிங்களபௌத்தர்கள் மத்தியில் பாரிய பாரம்பரிய நிகழ்வாக கொண்டாடப்பட்டுவருகின்றது.
 
வசந்தகாலத்தில் இனஉறவுக்கான புத்தாண்டு!
இலங்கையில் இக்காலம்  வசந்த காலம். குயில்கூவும் மரங்கள் பூக்கும் மனங்கள் விரியும் புத்தாக்க சிந்தனைகள் துளிர்விடும்.
இலங்கையில் அனைத்துபாகங்களிலும் புத்தாண்டு குதூகலம் இவ்வசந்தகாலத்தில் நிலவுவதுண்டு. குறிப்பாக நுவரேலியாவில் வசந்தகாலம் களைகட்டும். முழு இலங்கையர்களுமே ஜாதிமதபேதமின்றி அங்கு கூடுவர். இரவுபகல் தெரியாத காலம். எங்கும் குதூகலம்.
புத்தாண்டில் புதியவாழ்க்கை ஆரம்பம்!
பழையன கழிதலும் புதியன புகுதலும் வழமையானதொன்றே. எனவே புத்தாண்டு பிறந்திருக்கின்ற இவ்வேளையில் எம்மிடையே உள்ள சில தீயகுணங்களை விடுத்து நல்லகுணங்களை நல்ல பழக்கவழக்கங்களை பின்பற்றி ஆரம்பித்தால் அதுவே புத்தாண்டுக்கு அர்த்தம் சேர்க்குமெனலாம். 
எல்லோரும் இன்புற்றிருக்கவேண்டும் என்பதே இன்றைய பிரார்த்தனை.
விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா