யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிராம கட்டடம் திறப்பு

0
393

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட எல்லைக் கிராமமான சாளம்பச்சேனையில் கிராம அபிவிருத்திச் சங்க கட்டட திறப்பு விழா வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது.

லண்டன் நம்பிக்கை ஒளி அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எஸ்.பரமானந்தம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மேலும் அதிதிகளாக கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு, மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.அருண்மொழி, புணானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உப்பாலி ஹேரத், ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன், கிராம சேவை அதிகாரி, கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் எஸ்.உதயகுமார் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார், கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு, மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.அருண்மொழி, புணானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உப்பாலி ஹேரத் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரால் புணாணை சாளம்பச்சேனை கிராமத்தில் மூத்தவர்கள் மூவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். அத்துடன் லண்டன் நம்பிக்கை ஒளி அமைப்பினால் சாளம்பச்சேனையில் கால் அங்கங்களை இழந்தவருக்கு சக்கர நாற்காலி வழங்கி வைக்கப்பட்டதுடன், சிறுமியரின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.

2009ம் ஆண்டு யுத்தத்தினால் சீரிக்கப்பட்டு காணப்பட்ட சாளம்பச்சேனை கிராம அபிவிருத்திச் சங்க கட்டடத்தினை லண்டன் நம்பிக்கை ஒளி அமைப்பின் எட்டு இலட்சம் ரூபாய் நிதியில் புனரமைப்பு செய்யப்பட்டு மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இங்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமாரால் மக்களிடத்தில் காணப்படும் குறைபாடுகள் சம்பந்தமான கலந்துரையாடலை மேற்கொண்டார்.

இக் கிராமத்தில் மக்கள் ஒன்றுகூடி பல விடயங்களை முன்னெடுப்பதற்கு ஓர் பொது மண்டபம் இல்லை. யுத்தத்தின் எச்சங்களில் ஒன்றாக கிராம அபிவிருத்திச் சங்கம் காணப்படுகின்றது. இவற்றின் திருத்த வேலைகளை முடித்துத் தந்து மீண்டும் புத்துயிர் பெற வைக்க வேண்டும் என நம்பிக்கை ஒளி அமைப்பினை இக் கிராம மக்கள் வேண்டி நின்றமையின் பயனாக லண்டன் நம்பிக்கை ஒளி அமைப்பால் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் கட்டடம் மீள் நிர்மாணம் செய்யப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பின் தங்கிய கிராமங்களில் ஒன்றாகக் காணப்படுவது சாளம்பச்சேனை கிராமமாகும். இக்கிராமம் நீண்ட கால யுத்தத்தில் பாரிய அழிவுகளை சந்தித்துள்ளது.