இரு விடயங்களை மனித நேயத்துடன் நோக்கவேண்டும்

0
509

வடக்கு கிழக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்படவேண்டும் என்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப் பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

தமது காணிகளை இழந்து தவிப்போரே அது தொடர்பிலான சிரமங்கள் மற்றும் துயரங்களை அறிவார்கள். இதேபோன்று சிறைச்சாலைகளில் எந்தவித விசாரணையும் இன்றி அடைக்கப்பட்டுள்ள கைதிகளின் நிலையும் அமைந்துள்ளது. விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.இந்த விடயங்கள் அரசியல் இன பேதங்களுக்கு அப்பால் மனிதநேயத்துடன் நோக்கப்படவேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளரும் டொக்டர் ராஜித சேனாரத்ன இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது செய்தியாளர் கேட்ட கேள்விக்கு அமைச்சர்  பதிலளிக்ககையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

செய்தியாளர் : மன்னார் பிரதேசத்தில் இராணுவத்தின் கட்டுபாட்டிலுள்ள 400 ஏக்கர் காணிகளை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா?

அமைச்சர் : இராணுவத்தின் கட்டுபாட்டிலுள்ள காணிகளை விடுவிக்க படிப்படியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதனடிப்படையில் மன்னாரில் படையினரின் கட்டுபாட்டிலுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

செய்தியாளர் : ஹெலிய (வெளிச்சம்) என்ற அமைப்பு இது குறித்து தெரிவித்துள்ளது.

அமைச்சர் : வெளிச்சம் இல்லாததன் காரணமாகவே அவர்கள் இருளில் இருந்து வருகின்றனர். தமது காணியை இழந்து தவிப்போர் அனுபவிக்கும் துயரங்களை அந்த பகுதிக்கு சென்று பார்க்கவேண்டும். இது மனிதநேய பிரச்சனை. அந்த அடிப்படையில் இதை நோக்கவேண்டும். அரசியல் பிரச்சனை அல்ல.

செய்தியாளர்: நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்ப்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு விதித்த நிபந்தனைகளுக்கு அமைவாக நிபந்தனைகளில் ஒன்றாக காணி விடுவிக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் : அவ்வாறு எந்த நிபந்தனையும் முன்வைக்கப்படவில்லை. இராணுவத்தினர் மக்களின் காணிகளில் பேக்கரிகளை அமைத்து செயற்படுகின்றனர். இது முறையற்ற செயலாகும். பொது மக்களுக்கு சொந்தமான காணிகளை உரியவர்களிடம் கையளிக்க வேண்டும்.

இராணுவத்தினர் தெற்கில் பொது மக்களுக்கு சொந்தமான காணிகளில் பேக்கரி அமைத்து செயற்பட்டால் அதனை தெற்கில் உள்ள பொது மக்கள் அங்கீகரிப்பார்களா? இது எந்த வகையில் நியாயமானது.

2015ஆம் ஆண்டில் இணக்கம் காணப்பட்டதற்கு அமைவாக பொது மக்களின் காணிகளை கையளித்தல் வழக்கின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளோரை விடுதலை செய்தல் ,காணாமல் போனோர் தொடர்பில் நிவாரணம் வழங்கல் உள்ளிட்டவற்றை நடைமுறைப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

இது தவிர தமிழ் தேசிய கூட்டமைப்பு நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்ப்பதற்காக அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் பொருட்டு எந்தவித நிபந்தனையும் விதிக்கவில்லை.தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம் சுமந்திரன் இது குறித்து யாழ்ப்பாணத்தில் சுட்டிகாட்டினார்.

10 – 15 வருடங்களாக எந்தவித விசாரணையும் இன்றி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் தண்டனை வழங்கவேண்டும் அல்லது விடுவிக்கப்படவேண்டும்.

இந்த விடயங்களை மனிதநேயத்துடன் நோக்கவேண்டும். முன்னைய அரசாங்க காலப்பகுதியில் முன்னாள் எல்ரீரீஈ உறுப்பினர் 12,000 புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூக மயப்படுத்தப்பட்டுள்ளனர்.இவர்கள் பிரச்சனை இன்றி சமூகத்தில் வாழ்ந்து வருகின்றனர் என்பதையும் அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.