பனைசார் உற்பத்தி பொருட்களின் தரத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

0
464

வேலணை பிரதேச சபை தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி!

பனைசார் உற்பத்திகளை ஊக்குவித்து அதனை உற்பத்தி செய்யும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குரிய தீர்வுகளை பெற்றுக்கொடுத்து வேலணைப் பிரதேசத்திலுள்ள குறித்த துறைசார் மக்களின் வாழ்விலுக்கு இத்துறையூடாக ஒரு நிரந்தர பொருளாதாரதிற்கு வழிவகை செய்து கொடுப்பதே எமது நிலைப்பாடாகும் என வேலணை பிரதேச தவிசாளரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் குறித்த பிரதேச நிர்வாக செயலாளருமான நமசிவாயம் கருணாகரகுருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

புங்குடுதீவு பனைசார் கைப்பணி உற்பத்தி மற்றும் விற்பனை நிலைய திறப்பு விழா நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

தீவக மக்களின் வாழ்வாதாரத்தில் அதிகளவு பங்களிப்பது பனைவளம். இந்தப் பனைவளம் தீவகப் பகுதியின் சொத்தாகவும் காணப்படுகின்றது. பனைவளத்தின் முக்கியத்துவத்தையும் அத்துறை சார்ந்த மக்களது பாதுகாப்பையும் தொழில் வாய்ப்புகளின் உறுதித்தன்மையையும் பெற்றுக்கொடுத்து அந்த மக்களது வாழ்வியலுக்கு வழிவகை செய்து கொடுத்தவர் எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களே.

அத்துடன் கடந்த காலங்களில் அவர் அமைச்சராக இருந்த காலப்பகுதிகளில் இத்தொழில் சார் மக்களது வாழ்வியலில் நிரந்தர தொழில் வாய்ப்புக்காகவும் அதன் உற்பத்தி பொருட்களை வெளிநாடுகளுக்கும் சந்தைப்படுத்தும் வாய்ப்புக்களையும் உருவாக்கிக் கொடுத்தது மட்டுமல்லாது பனைசார் ஆராய்ச்சிக்கென கைதடியில் பனை ஆராய்ச்சி நிலையத்தையும் உருவாக்கிக் கொடுத்து இத்துறைசார் மக்களின் வாழ்வில் நம்பிக்கை ஒளியையும் ஏற்படுத்திக் கொடுத்திருந்தவர் எமது செயலாளர் நாயகம் என்பதை யாரும் மறக்கமுடியாது.

அந்த வகையில் அவரது வழிநடத்தலின் கீழ் பணியாற்றும் எமது கட்சியிடம் இன்று இப்பகுதி மக்கள் மீண்டும் வேலணை பிரதேச சபையின் அதிகாரத்தை தந்துள்ளனர்.

இந்தப்பகுதி மக்களின் எதிர்பார்ப்புக்களை நிச்சயம் நாம் ஈடேற்றிக் கொடுப்பதுடன் பனைசார் உற்பத்தி பொருட்களின் தரத்தை உயர்வடையச் செய்து அவற்றை உலக தரம் மிக்க சந்தை வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதற்கும் வழிவகை செய்து கொடுப்போம் என்றார்.