மாணவர்களுக்கு, கற்பதற்கான சூழலை பெற்றோர்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

0
822

(படுவான் பாலகன்) மாணவர்களுக்கு, கற்பதற்கான சூழலை, பெற்றோர்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு போட்டிகள், வித்தியாலயத்தின் அதிபர் சா.விக்னேஸ்வரன் தலைமையில் நேற்று(09) இடம்பெற்றன.

ஒலிம்பிக் தீபம் ஏற்றுதலுடன், வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் க.ஹரிகரராஜின் உத்தியோகபூர்வ ஆரம்பிப்புடனும் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வுகளில் குறுந்தூர ஓட்டங்கள், அஞ்சல் ஓட்டங்கள், சிறுவர்களுக்கான செயற்பட்டு மகிழ்வோம் போன்ற நிகழ்வுகளும், அணிநடை மரியாதை, உடற்பயிற்சி கண்காட்சி, யோகாசனம் போன்றனவும் நடைபெற்றன.

வலயக்கல்விப் பணிப்பாளர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
மாணவர்களின் அடைவு மட்டங்களை அதிகரிப்பதற்கு பெற்றோர்களின் பங்கு அளப்பெரியது. பெற்றோர்கள் மாணவர்கள் கற்பதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அவ்வாறு ஏற்படுத்த தவறுகின்ற போது மாணவர்களின் அடைவும் வீழ்ச்சியை எதிர்கொள்ளும். மாணவர்கள் தொடர்பிலும், அவர்களது கற்றல், கற்பித்தல் தொடர்பிலும் பெற்றோர்கள் அக்கறை காட்டவேண்டும். இதற்காக மாணவர்கள் பாடசாலையில் கற்ற விடயங்களை மாணவர்களுடன் வினவுவதுடன், பயிற்சிகொப்பிகளையும் பார்வையிட வேண்டும். இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெறவேண்டும். இதன் பயனாக வலயத்தினை இன்னும் முன்னுக்கு பலநிலை தாண்டி கொண்டுசெல்ல முடியும். என்றார்.