கோறளைப்பற்று வடக்கு பிரதேசசபையின் அதிகாரத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

0
380

மட்டக்களப்பு கோறளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உதவித் தவிசாளரை தெரிவுசெய்யும் அமர்வு செவ்வாய்கிழமை (10) கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் வை.எம்.சலீம் தலைமையில் நடைபெற்றது. வட்டார அடிப்படையில் 11 பேரும் விகிதாசார அடிப்படையில் 07 பேருமாக 18 பேர் தேர்தலில் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பில் 5 பேரும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பில் 3 பேரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் 5 பேரும், தெரிவுசெய்யப்பட்டிருந்த நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் 2 பேரும், தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு சார்பில் ஒருவரும்;, கருணா அம்மானின் சுயேட்சைக் குழு சார்பில் இருவரும்; தெரிவாகியிருந்தனர்.

தவிசாளர் மற்றும் உதவித் தவிசாளர் தெரிவுக்கான திறந்த வாக்கெடுப்பினை மேற்கொள்வது என உறுப்பினர்களினால் தீர்மானிக்கப்பட்ட நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் சிவஞானம் கோணலிங்கம் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பில் கண்ணப்பன் கணேஷன் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன.

இதையடுத்து பகிரங்க வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் கதிரவெளி வட்டாரத்தைச் சேர்ந்த சிவஞானம் கோணலிங்கம் 10 வாக்குகளைப் பெற்று தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டார்.இவரை எதிர்த்து போட்டியிட்ட கண்ணப்பன் கணேஷன் 8 வாக்குகளைப் பெற்றார்.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட மூவரில் இருவரும், ஐக்கிய தேசிய கட்சியைச் உறுப்பினர்கள் இருவரும், தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினரும் வாக்களித்தனர்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு கருணா அம்மானின் சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் இருவரும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஒரு உறுப்பினரும் ஆதரவு வழங்கியிருந்தார்.

உதவித் தவிசாளர் தெரிவிற்கான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியிலிருந்து புணாணை கிழக்கு வட்டாரத்தைச் (இரட்டை அங்கத்தவர் வட்டாரம்) சேர்ந்த தி.மு.சந்திரபாலன் மற்றும் ச.முகமட் தாஹிர் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன.

பகிரங்க வாக்கெடுப்பில் தி.மு.சந்திரபாலன் 10 வாக்குகளைப் பெற்று தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டார்.இவரை எதிர்த்து போட்டியிட்ட கண்ணப்பன் கணேஷன் 8 வாக்குகளைப் பெற்றார்.