இன்னும் சிறிது காலத்தில் புனர்வாழ்வுச் செயற்பாடானது இறுதிக்கட்டத்தினை அடைந்துவிடும் – மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக்க
தற்போது புனர்வாழ்வுகளுக்காக மிகச்சிறியளவினரே எஞ்சியிருக்கிறார்கள். எதிர்காலத்தில் இந்தப் புனர்வாழ்வுச் செயற்பாடானது இறுதிக்கட்டத்தினை அடைந்துவிடும். புனர்வாழ்வு பெற்றவர்களது பொருளாதார மற்றுமு; வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவது மிக முக்கியமானதாகும் என புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக்க தெரிவித்தார்.
சனிக்கிழமை மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் நடைபெற்ற புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு தொழில் மற்றும் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு மீள்குடியேற்ற மற்றும் இந்து மத விவகாரங்கள் அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் பி.சுரேஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீ.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், எஸ்.வியாளேந்திரன், மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார், புனர்வாழ்வு அதிகார சபையின் புதிய தலைவர் என்.அன்னலிங்கம், புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக்க , பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், கடந்த காலங்களில் நடைபெற்ற யுத்தம் காரணமாக வடக்குக்கிழக்கில் கலாச்சார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பல பின்னடைவுகளை நாங்கள் சந்தித்திருந்தோம். இந்த யுத்தம் காரணமாக, பலர் உயிர்களை இழந்திருந்தார்கள், அங்கவீனமுற்றிருந்தார்கள், குறிப்பாக விடுதலைப்புலி உறுப்பினர்களும் அங்கவீனமடைந்திருந்தார்கள். இவ்வாறு சமூகப்பின்னடைவுகள் பல இருந்தன.
யுத்தம் நடைபெற்ற 30 வருடங்களில் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பல அபிவிருத்திகளில் பின்னடைவுகளைக்கண்டிருந்தோம். எனவே இந்த அபிவிருத்தியை மேற்கொள்வதற்காக அரசியல்வாதிகள், அதிகாரிகள், முப்படையினர் அனைவரும் இணைந்து மேற்கொள்ளும் போதே இவை மேம்படும் என்பதில் எந்தவொரு ஐயமுமில்லை.
2009ஆம் ஆண்டு முதல் சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு புனர்வாழ்வு மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அமைச்சு மூலமாக இயங்குகின்ற இயங்குகின்ற புனர்வாழ்வு ஆணையாளர்நாயகம் மூலமாக மற்றும் புனர்வாழ்வு அதிகாரசபையின் ஊடாக இவ்வாறான பின்னடைவுகளை மேம்படுத்துவதற்காவும் அவர்களுடைய தொழில் வசதிகளை மேம்படுத்துவதற்காகவும் எங்களது புனர்வாழ்வு ஆணையாளர் பணிமனை செயற்பட்டு வருகிறது.
ஆரம்பத்தில் அவர்களாக விரும்பி வருகின்றவர்களுக்காகச் செயற்பட்டிருந்தோம். அதில் பத்தாயிரம் அளவில் பயிலுனர்களாக இருந்தார்கள். அதன் பின்னர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு புனர்வாழ்வுக்கு வந்தவர்கள் இரண்டாயிரம் பேர்வரை இணைந்தனர். அதன்படி மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மாகாணங்களைச் சேர்ந்த 12182பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளார்கள்.
எனவே தற்போது புனர்வாழ்வுகளுக்காக மிகச்சிறியளவினரே எஞ்சியிருக்கிறார்கள். எதிர்காலத்திலும் இணைந்து கொள்பவர்களுடன் இந்தப் புனர்வாழ்வுச் செயற்பாடானது இறுதிக்கட்டத்தினை அடைந்துவிடும்.
இந்தச் சந்தர்ப்பத்தில் மிகவும் முக்கியமான பணியாகக் கருதப்படுவதுதான் அவர்களைப் பொருளாதார ரீதியாக வலுப்படுத்துவதும் வாழ்வாதார ரீதியாக மேம்படுத்துவதுமாகும்.
அந்த வகையில் அரசாங்கத்தினால் பிரத்தியேகமாக தேசிய நல்லிணக்க அமைச்சு அமைக்கப்பட்டிருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையாரின் தலைமையில் உள்ள அலுவலகம், பிரதமரது அலுவலகத்தின் மேர்ப்பார்வையின் கீழ் நல்லிணக்கச் செயற்பாட்டுக்கான அலுவலகம் என்பனவும் இணைந்து இந்தப்பிரதேசங்களில் உதவிகளை வழங்கும் வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிது. அதற்கும் மேலதிகமாக சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு புனர்வாழ்வு மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அமைச்சின் ஊடாகவும் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறது.
பிரதம மந்திரியினது அலுவலகத்தினர் அரச சார்பற்ற நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு வடக்குக்கிழக்கு பிரதேசங்களில் இருக்கின்ற முன்னாள் போராளிகளை இனங்கண்டு அவர்களுக்கான உதவிகளையும், ஒத்தாசைகளையும் வழங்கு வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
எதிர்காலத்திலும் புனர்வாழ்வு பெற்றவர்களது தேவைகள் குறித்து அவர்களது வேண்டுகோள்களை அடிப்படையாகக் கொண்டும் உதவிகளை வழங்கத் தயாராக இருக்கிறோம்.
புனர்வாழ்வு பெற்றவர்கள் வெளிநாட்டுக்குச் சென்று வேலைவாய்ப்பினைப் பெற்றுக் கொள்வாராயின் அவருக்கான பயணச்சீட்டிற்கான செலவினைக்கூட வழங்குவதற்கு எமது பணியகம் தயாராக இருக்கிறது.
எனவே தொடர்ந்து எதிர்காலத்திலும் தேசிய நல்லிணக்க அமைச்சு, எமது புனர்வாழ்வு ஆணையாளர் பணியகத்தின் ஊடாகவும் அமைச்சின் ஊடாகவும், பிரதமரின் அலுவலகம், புனர்வாழ்வு அதிகாரசபை ஆகியவ்றி; மூலமாகவும் பல உதவிகளையும் செயற்பாடுகளையும் மேற்கொள்ளவுள்ளோம் என்று தெரிவித்தார்.