நாங்கள் வழங்கும் இழப்பீடுகள் உங்களது இழப்புக்கு ஈடாகாது – புனர்வாழ்வு அதிகார சபையின் புதிய தலைவர்

0
548

ஒரு மரணம் ஏற்பட்டால் காசு கொடுத்து அந்த உயிரை வாங்க முடியாது. இருந்த போதிலும் மனித நேயத்தால் சில சில உதவிகளைச் செய்து அந்தக் கவலையின் தாக்கத்தைக் குறைக்க வேண்டும் என்ற வகையில் தான் எங்களது அதிகார சபை செயற்படுகின்றது என புனர்வாழ்வு அதிகார சபையின் புதிய தலைவர் என்.அன்னலிங்கம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு டேர்பா மண்டபத்தில் சனிக்கிழமை பகல் நடைபெற்ற, கடந்த கால வன்செயல்களால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள், அரச உத்தியோகத்தர்கள், சமயத்தலங்களுக்கு நட்ட ஈடு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன் போது 259 பேருக்கு நட்ட ஈடுகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து உரையாற்றிய புனர்வாழ்வு அதிகார சபையின் புதிய தலைவர் என்.அன்னலிங்கம்,

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலவிதமான உதவிகளைச் செய்வதில் ஈடுபட்டுள்ள நாங்கள் வழங்கும் இழப்பீடுகள் உங்களது இழப்பிற்கு ஈடாக இருக்காது என்பது எமது கவலை. முக்கியமாக ஒரு மரணம் ஏற்பட்டால் காசுகொடுத்து அந்த உயிரை வாங்க முடியாது. இருந்த போதிலும் மனித நேயத்தால் சில சில உதவிகளைச் செய்து அந்தக் கவலையின் தாக்கத்தைக் குறைக்க வேண்டும் என்ற வகையில் தான் எங்களது அதிகார சபை செயற்படுகின்றது.

அரசாங்கத்தின் நிதியில் முழுக்க முழுக்கத் தங்கியுள்ள எங்களது அதிகார சபையின் மூலம் முடிந்தவரையில் மிகவும் விரைவாக போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்ட ஈடுகளை வழங்குவதற்கான செயற்பாடுகளை முடக்கிவிட்டுள்ளோம்.

அரசாங்கத்தின் நிதி கிடைக்கின்ற சந்தர்ப்பத்தில் எங்களது செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்ல உதவியாக இருக்கும். எப்படியாயினும், முன்னாள் தலைவர் பத்மநாதனை நினைவுகூரவேண்டும். அவரது செயற்பாடு புனர்வாழ்வு அதிகார சபையின் செயற்பாட்டுக்கு மிகவும் உதவியாகவும், ஒத்தாசையாகவும் இருந்தது. அவரது பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு இச் செயற்பாடுகளை நிறைவேற்ற கூடியவரையில் முயற்சி செய்வோம்.

இந்த அதிகார சபையானது பொது மக்களுக்கு நட்ட ஈடுவழங்கும் ஒருபகுதி, அரச உத்தியோகத்தர்களுக்கு நட்ட ஈடு வழங்கல், வணக்கத் தலங்களுக்கு நட்ட ஈடு வழங்கல், யுத்தம் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்குவதையும் மேற்கொண்டு வருகிறது.

கஸ்ரங்களுக்குள் அல்லல்பட்டு, பின்னர் தங்களுக்கான உதவிகளுக்காக சமர்ப்பித்துள்ள இப்போதைய நிலையில் 35 ஆயிரம் விண்ணப்பங்கள் நிறுவையிலுள்ளது. அவற்றினை விரைவாகத் தீர்மானம் எடுத்து ஒரு முடிவுக்குக் கொண்டு வர முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறோம்.

இச் செயற்பாட்டில், மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்கள் ஆகியோரது பங்களிப்புகள் மிகவும் அவசியமாகின்றது. அவர்களின் மூலமாகத்தான் பயனாளிகளை அடையாளம் கண்டு வேண்டிய விதந்துரைகளைப் பெற்று தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது.

இதனை விடவும், ஒரு சுய தொழில் வாய்ப்பை உண்டு பண்ணக்கூடிய கடன் வழங்கும் திட்டங்களை வைத்துக் கொண்டுள்ளது. இதில் முக்கியமாக இளைஞர்களை நோக்காகக் கொண்டு கடன் வழங்குனர்களினால் இக் கடன் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். உங்கள் முயற்சியுடன் கடன்களைப் பெற்று சுயமாக இயங்கி உங்களுடைய இடர்களை நீங்களே தீர்க்கும் அளவிற்கு வரவேண்டும் என்பது எனது கோரிக்கை. அரசாங்கத்திடம் கையேந்தும் அதே வேளை, எங்களது சொந்த முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். கஸ்ரங்களுக்கு முகம் கொடுக்க வேண்டும் என்பது எனது எண்ணம் என்றும் தெரிவித்தார்.