படுவான்கரையின் இரு கிராமங்களை, திரும்பிப்பார்க்க வைத்த மகளீர்கள்

0
928

 

– படுவான் பாலகன் –

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய மாணவிகள் தாமும் சாதனை வீராங்கனைகள்தான் என்பதனை சாதித்து காட்டி நிற்கின்றார்கள். பன்சேனை பாரி வித்தியாலயமும், கடுக்காமுனை வாணி வித்தியாலயமும் இந்தச் சாதனைக்கு காரணம். பெண்களினால்தான் இரு பாடசாலைகளும் பெருமைபெற்றும் இருக்கின்றன.

வயல்வெளிகளும், காடுகளும் ஆங்காங்கு மேட்டுநிலப்பகுதிகளில் வீடுகளையும் கொண்டமைந்த இப்பகுதியில், பன்சேனை பாரி வித்தியாலயம் அமைந்துள்ளது.

‘5 கிலோ மீற்றர், 4 கிலோமீற்றர், 3 கிலோமீற்றர் என்று கிலோமீற்றர் கணக்கான தூரத்தில் இருந்து, நடையிலும், துவிச்சக்கர வண்டியிலுமாக இப்பாடசாலைக்கு மாணவர்கள் வருகிறார்கள்’ என்கிறார் அதிபர் செல்வராசா ஜமுனாகரன்.

இப்படி வருபவர்களும் வறுமைக்கோட்டில் வாழ்பவர்களாகவே உள்ளனர். இன்று பலரும் இவர்களைப் பற்றி கதைக்கத் தொடங்கிவிட்டனர். ஏன் தெரியுமா? கடந்த ஆண்டுகளில் பெண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில் கிழக்கு மாகாண மட்டத்தில் பன்சேனை பாரி வித்தியாலயம் முதலிடம்.! 100 மீற்றர், 400 மீற்றர், 800 மீற்றர், 1500 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் கோட்ட, வலய மட்டங்களில் பன்சேனை பாரி வித்தியாலயம் முதலிடம்! மாகாணமட்ட போட்டியிலும் வெற்றி பெற்றிருக்கின்றனர்.!

உடல்வலுவை மட்டும் பயன்படுத்தி செய்யும் விளையாட்டுக்கும் நல்ல பயிற்சி வேண்டும். பாடசாலையில் பயிற்சி வசதி எந்தளவுக்கு உள்ளது என உடற்பயிற்சி ஆசிரியரிடம் வினாவினோம். ‘காலை மாலை என இருநேரங்களுமே பயிற்சி செய்வதற்கான உகந்த நேரமாக கொள்ளப்படுகின்றது. ஆனால் இந்த நேரங்களில் மாணவர்கள் வரமாட்டார்கள். கிடைக்கும் நேரத்தினைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு பயிற்சியினை வழங்கிக் கொண்டிருக்கின்றேன்.’ என்கிறார் அவர்.

அது மட்டுமல்லாமல் மாணவர்கள் காலை மாலை வருகைதர முடியாததற்கான காரணத்தையும் உடற்பயிற்சி ஆசிரியர் தேவப்போடி பவளசிங்கம் குறிப்பிட்டார்.
‘இங்கு யானை நடமாட்டம் உண்டு. மாணவர்கள் வெகு தூரங்களில் இருந்து வருவதால் நேரத்திற்கு எழுந்து வருவதோ அதேபோல பாடசாலையிலிருந்து 4 மணிக்கு பிற்பாடு வீட்டுக்கு செல்வதோ அவர்களால் முடியாது. யானைக்குப் பயம்’ என்கிறார்.

‘கிடைக்கும் நேரத்தில் கூட பயிற்சியை ஒழுங்காக வழங்கமுடியாது. இந்த மாணவர்களின் வறுமை அவர்களுக்கான உணவை இரண்டு நேரமாக குறைந்துள்ளது. அதிலும் அவை சத்தான உணவுகளே அல்ல. ஒரேமாதிரியான உணவைத்தான் அவர்கள் தொடர்ந்து உண்கின்றனர். இதனால் உடல் வலுவும் போதுமானதாக இல்லை.’ இவ்வளவு பிரச்சினைகள் இருந்தும் கடந்த வருடம் பன்சேனை பாரி வித்தியாலயம் விளையாட்டுப் போட்டிகளில் 06 தங்கம், 01 வெள்ளி, 01 வெண்கல பதங்கங்களைப் பெற்றுள்ளது.

‘பாடசாலையில் எனது ஆசிரியரிடம் ஓட்ட நுட்பங்களைப் பெற்றாலும் பயிற்சி என்னவோ எனது பயத்தினால் வந்தது. எனது வீட்டுக்கும் பன்சேனை பாரி வித்தியாலயத்திற்கும் உள்ள தூரம் 5 கிலோ மீற்றருக்கு மேலாக இருக்கும். சைக்கிளில் அல்லது நடையில் செல்வேன். நடந்து செல்வதென்றால் ஓடியே செல்வேன். அதேபோல யானைப் பயத்திலையும், மாடு துரத்தும் போதும் பயத்தினால் மிக வேகமாக ஓடுவேன். இவைதான் எனது ஓட்டப்பயிற்சியாக அமைந்தன.’ என்கிறார் மாகாண மட்டத்தில் 3 தங்கப் பதக்கங்களுக்கு சொந்தக்காரியான பாக்கியராசா வசந்தினி. இவர் கடந்த வருடம் 400 மீற்றர், 800 மீற்றர், 1500 மீற்றர் ஓட்டங்கள் (முதல் இடம்) உதைபந்தாட்டம், அஞ்சல் ஒட்டம் என அனைத்திலும் வெற்றி பெற்றவர்.

குடும்பத்தில் எட்டுப்பிள்ளைகளில் ஏழாவது பிள்ளையான இவர் தனது குடும்பத்தினரும் ஓரளவு ஒத்துழைப்பு நல்குவதாக குறிப்பிடுகிறார். வருங்காலத்தில் தேசிய மட்டத்தில் முதலிடங்களைப் பெறுவேன் என நம்பிக்கையுடன் குறிப்பிடும் இவர் தான் ஒரு சிறந்த உடற்பயிற்சி ஆசிரியராக வரவேண்டும் என்பதே தனது விருப்பு என்றும் கூறுகிறார். கடந்த வருடத்தோடு சாதனையை முடித்து வைக்கவில்லை. இந்த வருடமும் சாதனை வீராங்கனைகளாக மாறியிருக்கின்றனர்.

கிரீடா சக்தி எனும் தொனிப்பொருளில் அகில இலங்கை ரீதியாக அண்மையில் விளையாட்டுத் துறை அமைச்சினால் நடாத்தப்பட்ட காற்பந்தாட்டப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் அணியினர் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டுள்ளனர். இப்போட்டியில் கலந்து கொண்டிருந்தவர்கள் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பன்சேனை பாரி வித்தியாலய மாணவிகளும், கடுக்காமுனை வாணி வித்தியாலய மாணவிகளுமாவர். லீக் முறையில் நடாத்தப்பட்ட இப்போட்டியில், ஏ குழுவில் நான்கு அணிகளையும் வெற்றி கொண்ட மட்டக்களப்பு பன்சேனை அணியினர், வீ பிரிவின் களுத்துறை அணியுடன் நடைபெற்ற அரையிறுதி போட்டியிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் கொழும்பு மாவட்ட அணியுடன் மோதி, தண்டணை உதைமூலம் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டு, சாதனையை நிலைநாட்டியுள்ளனர்.

இப்போட்டியில் பங்கேற்றிருந்த மட்டக்களப்பு மாவட்ட அணியின் 8பேர் தேசிய அணிக்கு தெரிவாகி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அதேவேளை இப்போட்டியில் பங்கேற்றிருந்த மட்டக்களப்பு அணி வீராங்கனை பா.வசந்தினி மொத்தமாக எட்டுக் கோள்களை போட்டு சாதனையை நிலைநாட்டியிருக்கின்றார்.

பன்சேனை பாரி வித்தியாலயத்தினைப் போன்று சாதனைப் பாடசாலையாக கடுக்காமுனை வாணி வித்தியாலயமும் திகழ்கின்றது. பெண்களுக்கான உதைப்பந்தாட்டப்போட்டியில் மாகாணமட்டத்தில் முதலிடத்தினையும், தேசிய மட்டத்தில் இரண்டாம் இடங்களையும் பெற்ற வரலாறுகளும் பதிவாகியுள்ளன. 2010ம் ஆண்டு தொடக்கம் 2017வரை பெண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில் சாதனையை நிலைநாட்டி வருகின்றனர். 2012ம் ஆண்டு தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டது. 2013, 2014ம் ஆண்டுகளில் மாகாணத்தில் முதலிடத்தினைப் பெற்றுக்கொண்டது. மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் தரம் 11 வரையான வகுப்புக்களைக் கொண்ட பாடசாலையாக கடுக்காமுனை பாடசாலை அமைந்துள்ளது. இப்பாடசாலையும் பௌதீக மற்றும் கல்வியில் வளர்ச்சி பெற்றுவருகின்றது. இவ்வாறான சாதனைகளை நிலைநாட்டும் பாடசாலைகளையும், மாணவர்களையும், ஆசிரியர்கள் மற்றும் அதற்கு துணையாக நின்ற யாவரையும் பாராட்ட வேண்டியதும் அவசியமானதொன்றே. அதேவேளை பொருளாதாரத்திலும் பின்தங்கி நின்றுகொண்டு, அனைத்து வசதிகளையும் கொண்ட பாடசாலை மாணவர்களோடு போட்டியிட்டு வெற்றயீட்டும் நமது சாதனைப் பெண்கள் பெரிதும் மதிக்கத்தவர்கள்.