போரதீவுப்பற்று தரம் 05 மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிப்பதற்கான செயற்றிட்ட ஆரம்ப நிகழ்வு

0
341
(பழுகாமம் நிருபர்)

மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட போரதீவுப்பற்று கல்விக்கோட்டத்தில் இன்று(07.04) இரு பாடசாலைகளில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.  திருப்பழுகாமம் விபுலானந்த வித்தியாலயம் மற்றும் மண்டூர் 14 அ.த.க.பாடசாலையிலும் கோட்டக்கல்விப்பணிப்பாளர் என்.அருள்ராஜாவின் தலைமையில் இடம்பெற்றது.

போரதீவு கல்விக்கோட்ட தரம் 05 மாணவர்களின் அடைவுமட்டத்தை அதிகரித்தல் எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்கத்தினால் போரதீவு கனடா ஒன்றியத்தினரின் நிதி அனுசரனையில் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளது.
மிகவும் கஷ்டப்பட்ட பிரதேசத்தை சேர்ந்த மாணவர்கள் முற்றுமுழுதாக பாடசாலையையே நம்பி இருக்கின்றனர். ஆகவே அம்மாணவர்களின் நன்மை கருதியும் அடைவுமட்டத்தை அதிகரிக்க செய்யவுமே இவ்வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இக்கோட்டத்தில் உள்ள  686  மாணவர்களை 07 நிலையங்களில் உள்ளடக்கப்பட்டு வகுப்புக்கள் நடாத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் போரதீவு கனடா ஒன்றித்தின் உறுப்பினர் நேசதுரை பாலகிருஷ்ணன் மற்றும் கல்வி அபிவிருத்திச் சங்க ஸ்தாபகர் எஸ்.தேவசிங்கம், அதிபர்கள், பெற்றோர்கள் மாணவர்கள்   என பலரும் கலந்துகொண்டனர்.

ஆரம்பபிரிவு கல்வி அடைவு மட்டத்தில் கிழக்கு மாகாணம் 2017ம் ஆண்டு ஒன்பதாவது(09) இடத்திலும்,  98 கல்வி வலயங்களில் 91வது இடத்தை கடந்த 2016, 2017ம் ஆண்டுகளில் தக்க வைத்துள்ளதுமை குறிப்பிடத்தக்கது.