புதிய அரசமைப்பு எப்போது?நாடாளுமன்றம்தான் பதில் சொல்ல வேண்டும்.ஜனாதிபதி

0
392
தற்போதுள்ள நாடாளுமன்றத்தில் தனியாக ஆட்சியைக் கோரும் அதிகார பலம் எந்தக் கட்சிக்கும் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இன்று (06) காலை, கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பிலேயே, ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
அச்சந்திப்பில் மேலும் கூறுகையில்,
“பிரதமருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பிலேயே அனைவரும் இப்போது பேசுகின்றனர். நான் அதற்கு ஆதரவு வழங்கியதாகச் சிலரும், ஆதரவு வழங்கவில்லை எனச் சிலரும் கூறுகின்றனர். ஆகையால் என்னுடைய நிலைப்பாட்டைத் தெரிவிப்பது சிறந்ததெனக் கருதுகிறேன்.
“பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் பின்னர், சில கட்சிகள் தங்களுக்குப் பலம் கிடைத்துவிட்டதாகக் கருதினர். தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகளின் பிரகாரம், எந்தவொரு கட்சியும் 40 சதவீதத்துக்கு மேல் வாக்கினைப் பெறவில்லை. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பொறுத்தமட்டில் சுமார் 15 சதவீதமான வாக்குகளைப் பெற்றிருக்கிறது. எமக்குக் கிடைத்த வாக்குகளின் அடிப்படையில், நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தால் சுமார் 30 உறுப்பினர்களைப் பெற்றிருப்போம்.
“நிலைமை இவ்வாறிருக்கையில், தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிட்டவர்கள் தாங்கள்தான் வெற்றிபெற்றவர்கள் என்று ஆர்ப்பரிக்கத் தொடங்கினர். இதேவேளை, பொது எதிரணியில் இருப்பவர்கள் என்னைச் சந்திக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தனர். அக்கோரிக்கைக்கிணங்க, அவர்களைச் சந்தித்தபோது, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் தகுதி தங்களுக்கு இருப்பதாகவும், அதனூடாக பிரதமர் பதவியைத் தமக்குத் தரவேண்டும் எனவும் கோரினர்.
“பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமா இல்லையா என்று நாடாளுமன்றத்தில் நிரூபியுங்கள் என்று கூறினேன். அதற்கான பிரதிபலன் எவ்வாறு அமைந்தது என்பது யாவரும் அறிவீர்கள்’ என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும் கூறுகையில்,
“நம்பிக்கையில்லாப் பிரேரணையைப் பிரதமர் வெற்றிகொண்டதன் பின்னர் தனியாட்சி சாத்தியமா எனக் கேட்கின்றனர். என்னைப் பொறுத்தமட்டில், தற்போதுள்ள நாடாளுமன்றத்தில் எந்தக் கட்சிக்கும் தனித்து ஆட்சியமைக்கும் பலம் கிடையாது. ஆகையால் கூட்டாட்சி ஒன்றே சாத்தியமானது. எனவேதான், அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணையுமாறு கேட்கின்றோம்.
“நாட்டினுடைய எதிர்காலம் கருதி, வலுவான ஆட்சியொன்றை முன்னெடுப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் முன்வரவேண்டுமெ என வேண்டிக்கொள்கிறேன்“
உள்ளூராட்சி முறை மாறும்
“நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் பின்னர், சபைகளை யார் ஆள்வது என்பது தொடர்பான போட்டி தொடர்கிறது. அவை அனைத்தும் இன்று நிறைவுக்கு வரும். வெற்றி பெற்ற கட்சிகளைவிட ஏனைய கட்சிகளின் கைகளிலேயே பெரும்பான்மையான சபைகள் சென்றிருக்கின்றன. அதாவது மக்கள் ஆணைக்குப் புறம்பான வகையிலேயே ஆட்சியதிகாரம் கைமாற்றப்பட்டிருக்கிறது. ஆகையால் இந்தத் தேர்தல் முறையை மாற்றுவது தொடர்பாகப் பரிசீலிக்கின்றோம். 8,000 மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட உள்ளூராட்சி மன்றங்களை 4,000 உறுப்பினர்களாக அதாவது 50 சதவீதத்தால் குறைக்கும் திருத்தத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
வெசாக் வாரம்
ஏப்ரல் 30ஆம் திகதி தொடக்கம் மே 06ஆம் திகதிவரை புனித வெசாக் வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளதாகவும், மே 7ஆம் திகதியை அரச விடுமுறை தினமாக பிரகடணப்படுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
வரிவிதிப்பால் பாதிப்பில்லை
“வங்கி வைப்பில் 125,000 ரூபாய்க்கும் அதிகமான வட்டியைப் பெறும் நபர்களுக்கே வருமான வரி அறவிடப்படவுள்ளது. அதாவது 20 மில்லியன் ரூபாய்க்கு மேல் வைப்பில் வைத்திருக்கும் ஒருவருக்கே ரூ.125,000 வட்டி கிடைக்கும். அப்படிப்பட்டவர்கள் நிச்சயமாக ஏழைகளாக இருக்கமாட்டார்கள். எனவே, பாமர மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது“ எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அமைச்சரவையில் மாற்றம்
“அமைச்சரவையில் முழுமையான மாற்றமொன்று மேற்கொள்ளப்படவுள்ளது. அதாவது, சில அமைச்சுகளுக்குக் கீழுள்ள திணைக்களங்களின் தன்மை போன்ற விடயங்கள் மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்படும். பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த அமைச்சர்கள் பற்றிய முடிவை கட்சியின் உயர்பீடம் கூடியே தீர்மானிக்கும்“ எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
சம்பந்தனுக்கு நன்றி
“சிங்கள மக்களின் மனங்களை வெல்லக்கூடியதும், நாட்டிலுள்ள அனைத்து மக்களின் திருப்தியையும் கருத்திற்கொண்டே தீர்வைக் கோருகிறார் சம்பந்தன். அந்தவகையில் அவரது எதிர்பார்ப்பை வரவேற்கிறோம். அனைவரையும் திருப்திப்படுத்த நினைக்கும் அவருக்கு எமது நன்றிகள்“ எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
புதிய அரசமைப்பு எப்போது?
புதிய அரசமைப்பை எப்போது உருவாக்குவீர்கள் என்ற கேள்விக்கு, “நாடாளுமன்றம்தான் பதில் சொல்ல வேண்டும். அதற்கான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களின் முடிவுகளை அறிவித்திருக்கிறார்கள். இனிமேல் நாடாளுமன்றம்தான் அதற்குப் பதில் கூறவேண்டும்” என, ஜனாதிபதி பதிலளித்தார்.(Jm)