ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையில் தன்னைத் தானே வழி மொழிந்த சம்பவம் !

0
588

தவிசாளர் தெரிவுக்கு வழி மொழிவதற்கு யாரும் முன்வராத நிலையில் தன்னைத் தானே வழி மொழிந்த சம்பவம் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையில் இன்று நடைபெற்றுள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பாக வனேந்திரன் சுரேந்திரனின் பெயரினை வேலாயுதம் புவிதாஸன் முன்மொழிந்தார் இவரை வழிமொழிவதற்க எவரும் முன்வராத நிலையில் தன்னை தானே வழி மொழிந்தார்.

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று (செங்கலடி) பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உதவித் தவிசாளரை தெரிவுசெய்யும் அமர்வு வியாழக்கிழமை (05) மாலை கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் வை.எம்.சலீம் தலைமையில் நடைபெற்றது. வட்டார அடிப்படையில் 18 பேரும் விகிதாசார அடிப்படையில் 13 பேருமாக 31 பேர் தேர்தலில் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பில் 8 பேரும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பில் 8 பேரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் 7 பேரும், தெரிவுசெய்யப்பட்டிருந்த நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் 4 பேரும், தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு சார்பில் 2 பேரும், ஐக்கிய சமாதான கூட்மைப்பு சார்பில் ஒருவரும் ஜனநாயக தேசிய இயக்கம் சார்பில் ஒருவரும் தெரிவாகியிருந்தனர்.

தவிசாளர் மற்றும் உதவித் தவிசாளர் தெரிவுக்கான திறந்த வாக்கெடுப்பினை மேற்கொள்வது என உறுப்பினர்களினால் தீர்மானிக்கப்பட்ட நிலையில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பாக நாகமணி கதிரவேலின் பெயரினை எஸ்எம்.முகமது ஜௌபர் முன்மொழிந்தார் அதனை சீனி முகமட் கமால்டீன் வழி மொழிந்தார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் நவரெத்தினம் திருநாவுக்கரசுவின் பெயரை நல்லலையா சரஸ்வதி முன்மொழிய நிர்மலா சிவமூர்த்தி வழிமொழிந்தார்.

இதற்கு மேலதிகமாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பாக வனேந்திரன் சுரேந்திரனின் பெயரினை வேலாயுதம் புவிதாஸன் முன்மொழிந்தார் இவரை வழிமொழிவதற்க எவரும் முன்வராத நிலையில் தன்னை தானே வழி மொழிந்தார். இதையடுத்து அவர் போட்டியிலிருந்து தானாகவே விலக்கிக்கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் சின்னத்துரை சர்வானந்தனின் பெயரினை முன் மொழிந்தார் அதனை சர்வானந்தன் ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்த வேலாயுதம் புவிதாஸன் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேரந்த காளயப்பன் ராமச்சந்திரனின் பெயரை முன்மொழிந்தார் அதனையும் அவர் ஏற்கவில்லை.

இதையடுத்து பகிரங்க வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சார்பில் குடியிருப்பு வட்டாரத்ததைச் சேர்ந்த நாகமணி கதிரவேல் 18 வாக்குகளைப் பெற்று தவிசாளரா தெரிவு செய்யப்பட்டார். எதிர்த்து போட்டியிட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்த நவரெத்தினம் திருநாவுக்கரசு 10 வாக்குகளையும் பெற்றனர் இதில் தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு சார்பில் 2 பேரும், ஐக்கிய சமாதான கூட்மைப்பு சார்பில் ஒருவரும் நடுநிலை வகித்தனர்.

உதவித் தவிசாளர் தெரிவிற்கான தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் காளயப்பன் ராமச்சந்திரனின் பெயரை சின்னத்துரை சர்வானந்தன் முன்மொழிய முத்துப்பிள்ளை முரளிதரன் வழிமொழிந்தார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பில் விஜயரெத்தினம் ஜெய்கணேஸின் பெயரை கதிரேசுப்பிள்ளை லோகிதராசா முன்மொழிய சபாவதி நடராசா வழிமொழிந்தார். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பில் எஸ்எம்.முகமது ஜௌபரின் பெயரை சீனி முகமட் கமால்டீன் முன்மொழிய முகட் சாஜித் வழிமொழிந்தார்.

உதவித் தவிசாளருக்கான வாக்கெடுப்பில் காளயப்பன் ராமச்சந்திரன் 13 வாக்குகளையும், விஜயரெத்தினம் ஜெய்கணேஸ் 12 வாக்குகளையும், எஸ்எம்.முகமது ஜௌபர் 4 வாக்குகளையும் பெற தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு 2 உறுப்பினர்களும் நடுநிலை வகித்தனர்.

உதவித் தவிசாளருக்கான மீண்டும் நடைபெற்ற வாக்கெடுப்பில் காளயப்பன் ராமச்சந்திரன் 18 வாக்குகளையும், விஜயரெத்தினம் ஜெய்கணேஸ் 11 வாக்குகளையும் பெற்றனர்.

தமிழ் தேசிய கூட்மைப்புக்கு ஆதரவாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 6 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சியின் 4 உறுப்பினர்களும், ஐக்கிய சமாதான கூட்மைப்பு ஒரு உறுப்பினரும் ஆதரவு வழங்கினர்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் இருவரும், ஜனநாயக தேசிய இயக்கம் சார்பில் ஒருவரும் ஆதரவு வழங்கினர். தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு இரு உறுப்பினர்களும் நடுநிலை வகித்தனர்.

வாக்கெடுப்பின் அடிப்படையில் குடியிருப்பு வட்டாரத்ததைச் சேரத்ந்த நாகமணி கதிரவேல் (பேரின்பம்) தவிசாளதாகவும் தமிழ் தேசிய கூட்மைப்பின் சார்பில் வந்தாறுமூலை வட்டாரத்தைச் சேர்ந்த காளயப்பன் ராமச்சந்திரன் உதவித் தவிசாளராகவும் பகிரங்க வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.