ஏறாவூர் நகர பிதாவாக வாசித் அலி தெரிவு.

0
581

மட்டக்களப்பு ஏறாவூர் நகர சபை நிருவாகத்திற்கான தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவு வியாழக்கிழமை 05.04.2018 கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை. சலீம் தலைமையில் இடம்பெற்றது.

அதன்படி தலைவராக ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் றம்ழான் அப்துல் வாசித் அலி என்பவரும் உப தலைவராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்ட மீராலெப்பை ரெபுபாசம் என்பவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் முன்னாள் முதலமைச்சரின் ஆதரவு அணியான ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் வாசித் அலிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமதின் ஆதரவாளர் அணியைச் சேர்ந்த வாசித் அலி, மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானாவின் ஆதரவு அணியைச் சேர்ந்த முஹம்மட் ஸாலி நழீம் ஆகியோர் தவிசாளர் தெரிவுக்கு பிரேரிக்கப்பட்டனர்.

இதன்போது பகிரங்க வாக்கெடுப்பு இடம்பெற்ற நிலையில் வாசித் அலிக்கு 9 உறுப்பினர்களும், நழீம் என்பவருக்கு 7 உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்த அதேவேளை சீனிமுஹம்மது ஜப்பார் எனும் உறுப்பவினர் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு உறுப்பினர் நடுநிலை வகித்தார்.

உப தவிசாளர் தெரிவுக்கு இருவர் பிரேரிக்கப்பட்டனர். அதில் ஒருவர் தாமாக விலகிக் கொண்டதின்படி மீராலெப்பை ரெபுபாசம் இயல்பாகவே உப தலைவரானார்.

நடந்து முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் ஏறாவூர் நகர சபை நிருவாகத்திற்கான தேர்தலில் வெற்றியீட்டிய மற்றும் பொதுப் பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமத், மாகாண முன்னாள் உறுப்பினர்கள், மற்றும் ஆதரவாளர்கள் பொதுமக்கள் ஆகியோர் இந்நிகழ்வில் சமுகமளித்திருந்தனர்.

ஏறாவூர் நகர சபைத் தேர்தலில் உத்தியோகபூர்வ முடிவுகளின்படி முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு : 5 ஆசனங்கள், ஐக்கிய தேசியக் கட்சி 4 ஆசனங்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி; 3 ஆசனங்கள், இலங்கை தமிழரசுக் கட்சி 2 ஆசனங்கள், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு 1 ஆசனம், சுயேட்சை குழு 1 ஆசனம், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 1 ஆசனம் என்ற அடிப்படையில் மொத்தம் 17 ஆசனங்கள் பகிரப்பட்டுள்ளன.

அறுதிப் பெரும்பான்மை இல்லாத உள்ளுராட்சி மன்றங்களில் தலைவர், பிரதித் தலைவரைத் தெரிவு செய்துகொடுத்து அந்த நிருவாகத்தை வழிநடாத்துவதற்காக உள்ளுராட்சி ஆணையாளர் பங்கும் பிரசன்னமும் முதலாவது அமர்வில் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

புதிய தேர்தல் முறைமையின்;படி கூடுதல் வாக்குகளைப் பெறாத பின்தங்கிய சிறிய கட்சிகள் மற்றும் சிறுபான்மைக் கட்சிகளுக்கும் ஆசனங்கள் கிடைத்துள்ளன.