கல்முனையில் இரகசியப்பேச்சுவார்த்தை. தமிழ்பேசும் மக்கள் ஒன்றிணைந்தால் மட்டுமே சிறுபான்மையினரின் உரிமைகளைப்பெறமுடியும்!

0
529
கல்முனையில் மு.காவுடனான பேச்சுவார்த்தையில்  மாவைசேனாதிராஜா!
காரைதீவு  சகா
கல்முனை மாநகரசபையில் இலங்கை தமிழரசுக்கட்சியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் இணைந்து ஆட்சியமைப்பது தொடர்பில் இரகசியப்பேச்சுவார்த்தையொன்று  கல்முனையில் இடம்பெற்றது.

 
மு.கா சார்பில் பிரதியமைச்சர் எச்எம்.எம்.ஹரீசும் த.அ.கட்சி சார்பில் அதன் தலைவர் மாவைசேனாதிராஜாவும் கல்முனை மாநகரசபைக்கு இ.த.அரசுக்கட்சிசார்பில் தெரிவான உறுப்பினர்களும் ஏனையோரும் கலந்துகொண்டிருந்தனர்.
 
அதன்போது ஆட்சியமைப்புபற்றிப்பேசப்பட்டது. த.அ.கட்சியும் ஸ்ரீல.முகாவும்(ஜ.தே.கட்சி) இணைந்து அதாவது மு.காவின் 12ஆசனங்களும் த.அ.கட்சியின் 7ஆசனங்களும் ஏனைய 3தமிழ் உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சியமைக்கமுடியும். இவ்வாறு நிகழ்ந்தால் மு.கா மேயராக த.அ.கட்சி பிரதிமேயராக வாய்ப்புண்டு.
 
அந்தப்பேச்சுவார்த்தையை ஆரம்பித்துவைத்துப்பேசிய இலங்கைத்தமிழரசுக்கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா 
நாட்டில் வாழும் சிறுபான்மையினராகிய தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்றிணையும் பட்சத்திலேயே சிறுபான்மையினருக்கான உரிமைகளைப்பெற்று தலைநிமிர்ந்து வாழமுடியும்.
தனித்து உரிமையைப்பெறமுனைந்தால் ஆட்சியாளர்க்கு அதனைத்தட்டிக்கழிக்க இலகுவாயிருக்கும்.
 
எனவே இங்கு அம்பாறை மாவட்டத்தில் ஏலவே காரைதீவு பிரதேசசபை அமைப்பில் கடந்த 27.3.2018இல் த.அ.கட்சிக்கு மு.கா. ஆதரவு நல்கியுள்ளது. அதேபோல் 29.03.2018இல் பொத்துவில் பிரதேசபை அமைப்பில்  மு.கா ஆட்சியமைக்க த.அ.கட்சி ஆதரவு நல்கியிருந்தது.
 
அதுபோல கல்முனை மாநகரசபையையும் ஒற்றுமையாக விட்டுக்கொடுத்து கலந்துரையாடி ஆட்சியமைக்க இருசாராரும் பேசவேண்டும். என்றார்.
அங்கு தமிழர் தரப்பில் புரையோடிப்போயக்கிடக்கின்ற வழமையான தேவைகள் கோரிக்கையாக அல்லது நிபந்தனையாக முன்வைக்கப்பட்டன. 
 
கல்முனை மாநகரசபைக்குத்தெரிவான இ.த.அ.கட்சி உறுப்பினர்கள் எழுவரின் சார்பில் ரெலோ உபதலைவர் ஹென்றிமகேந்திரன் உரையாற்றினார்.
 
 கல்முனை தமிழ்ப்பிரதேசசெயலக தரமுயர்த்தல் கல்முனை நகரஅபிவிருத்தித்திட்டத்தை கைவிடல் சாய்ந்தமருது பிரிந்தால் மீதிக்கல்முனையை அப்படியேவிடுதல் அல்லது  கட்டாயம் 3ஆகப்பிரிக்கவேண்டுமாகவிருந்தால்தமிழ்க்கிராமங்களைஉள்ளடக்கிய தமிழர் நகரசபையொன்றை ஏற்படுத்தவேண்டும். கல்முனை 12ஆம் வட்டாரப்பிரிப்பை மீள்பரிசீலனை செய்யவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்துரையாற்றினார்.
 
அதுமட்டுமல்ல இந்நிபந்தனைகள் தொடர்பில் எழுத்துமூலம் உடன்படிக்கைசெய்து ஏற்றுக்கொண்டால் மாத்திரமே ஆட்சியமைப்பிற்கு மு.காவிற்கு ஆதவளிக்கமுடியும் என பகிரங்கமாக ஆணித்தரமாகக்கூறினார்.
பதிலுக்கு தென்கிழக்கு அலகு கரையோரமாவட்டம் போன்ற அஸ்திரங்களை விடுத்து பிரதியமைச்சர் ஹரீஸ் உரைநிகழ்த்தினார்.. கரையோரமாவட்டத்திற்கு உங்கள் கட்சி எதிர்ப்பது ஏன் எனவும் அவர் கேட்கத்தவறவில்லை. எதனையும் தமது கட்சித்தலைமைகளுடன் பேசி முடிவுசொல்வதாக பதிலளித்தார்.
கரையோரமாவட்டம் தொடர்பில் எமது கட்சி உத்தியோகபூர்வமாக எதனையும் கூறவில்லை. ஒருசில பிரதிநிதிகள் பேசியிருக்கலாம்.அது அவர்களது சொந்தக்கருத்து. வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் பேசுகின்றபோது மட்டுமே கரையோரமாவட்டம் பற்றி பேசமுடியும். என்று ஹென்றிமகேந்திரன் பதிலளித்தார்.
 
இந்தச்செய்தி எழுதும்வரை அடுத்தகட்டப்பேச்சுவார்த்தை இடம்பெறவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.