வாழைச்சேனையில் இன ஒற்றுமையுடன் விபுலானந்தர் பிறந்த நாள்

0
271

கனடா பொக்கிஷம் அமைப்பின் மட்டக்களப்பு கிளையின் ஏற்பாட்டில் வாழைச்சேனையில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 126 ஆவது பிறந்த தினம் நேற்று மாலை கொண்டாடப்பட்டது.

சுவாமி விபுலானந்தரின் பிறந்த தினத்தினை முன்னிட்டு பாடசாலைகள், பொது நிறுவனங்கள், பொது நூலகங்கள் எனப் பல்வேறுபட்ட இடங்களில் சுவாமி விபுலானந்தரின் பிறந்த தின நினைவாக பல நிகழ்வுகள் நடந்தப்படு வருகின்றது.

அந்த வகையில் வாழைச்சேனை விபுலானந்தர் வீதியில் அமைந்துள்ள சுவாமி விபுலானந்தர் சிலைக்கு மாலை அணிவித்து, விளக்கேற்றி பிறந்த தின நிகழ்வு கனடா பொக்கிஷம் அமைப்பின் உறுப்பினரும், வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினருமான க.கமலநேசனின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

ஓய்வு பெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் வ.சின்னத்தம்பி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கலந்து கொண்டார்.

மேலும் அதிதிகளாக வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களான கி.சேயோன், திருமதி.ஷோபா ஜெயரஞ்ஜித், எஸ்.நல்லரெட்ணம், வாழைச்சேனை கிராம சேவை அதிகாரி சி.வரதராஜன், பொக்கிஷம் அமைப்பின் அகில இலங்கை பொறுப்பாளர் திருமதி.எஸ்.வசந்தகுமாரி, வடமாகாண பொறுப்பாளர் பு.திவ்வியன், கிழக்கு மாகாண பொறுப்பாளர் எஸ்.மலர்விழி, மத்திய மாகாண பொறுப்பாளர் திருமதி.றியாஸ் பாத்திமா, முல்லைத்தீவு பொறுப்பாளர் சு.நிதர்சினி, சப்ரகமுக மாகாண பொறுப்பாளர் முகமட் றியாஸ், மட்டக்களப்பு காந்தி சேவா சங்க செயலாளர் கதிர் பாரதிதாசன், தொழிலதிபர் எஸ்.மணியம் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், கழக உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

சுவாமி விபுலானந்தரின் பிறந்த தின நிகழ்வின் போது இலங்கையின் பல பாகங்களில் இருந்து தமிழ், முஸ்லிம் மக்கள் இனவேறுபாடுகளின்றி கலந்து கொண்டு தீபமேற்றி வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.