கண்விழித்து வேலை செய்தால், சீதேவி வீட்டுக்கு வந்து சேர்வாள்

0
524

– படுவான் பாலகன் –
கண்விழித்து வேலை செய்தால், சீதேவி வீட்டுக்கு வந்து சேர்வாள்
கண்விழித்து வேலை செய்தாலும் சீதேவி வீட்டுக்கு வந்துசேர்வாள். இப்பெல்லாம் கடதாசிதான் கையில் வந்துசேருது, அதுவும் போறவழிதெரியல்ல என்கிறார் மூன்று தலைமுறையைக் கண்ட சின்னத்தம்பி. சீதேவி என்றவுடனே பெண்ணப்பற்றி சொல்லப்போறாங்களோ என்று பலர் நினைக்கலாம். நீங்க நினைப்பது போன்று பெண்ணைப் பற்றி சொல்லவில்லை. என்ன விடயத்தினை சொல்லவருகிறேன் என்பதனை வாசித்துப்பாருங்கோ புரியும்.
இற்றையிலிருந்து ஒரு தசாப்தத்திற்கு முன்பு படுவான்கரைப்பிரதேசத்தில் மனிதவலுக்கள்தான் வேலைசெய்தன. இயந்திரங்களை காண்பது கடினம்தான். இப்பெல்லாம் இயந்திரங்கள் அதிகரித்துவிட்டன. இயந்திரம் எனும் போது, மோட்டார் சைக்கிலும் இயந்திரம்தான், அது இல்லாமலும் சிலர் இருக்கின்றார்கள், பலர் வைத்திருக்கின்றனர். அதற்காக மோட்டார் சைக்கிள் அதிகரித்திருக்கின்றது என்ற விடயத்தினை சின்னத்தம்பி கூறவில்லை. சின்னத்தம்பி சீதேவி பற்றிதான் சொல்லவாறார்.
படுவான்கரையென்றாலே பலருக்கு ஞாபகம் வருபவை வயல்வெளிகள்தான், இங்கு மேடுகளில் வீடுகளும், மற்றைய இடங்களில் எல்லாம் வேளாண்மை பயிரும்தான் காணப்படும். இதனால் இங்குள்ள மக்கள் விவசாயத்தினையே அதிகம் தொழிலாக செய்கின்றனர். இங்கு வேளாண்மையை மனிதர்கள்தான் அறுவடை செய்வார்கள், கட்டுவார்கள், சூடு வைப்பார்கள். உழவு இயந்திரம் வருகைதந்ததன் பிறகு உழவு இயந்திரத்தினால் சூடுமிதித்து நெல்லை வேறாக்கி மூட்டைகளாக கட்டி வீடு கொண்டு செல்வார்கள். வீட்டிலே அடுக்கி வைப்பார்கள். அழகுக்கிற்காக அடுக்கி வைப்பதில்லை. உணவிற்காகவும், மீண்டும் நெற்செய்கை செய்வதற்கும் வீட்டிலே வைத்துக்கொள்வர். இவ்வாறு பயன்படுத்தும் போது, எடுக்க எடுக்க குறையாத அமுதசுரபி போன்று நெல்லும் இருந்து கொண்டு இருப்பதுபோன்ற உணர்வு வீட்டில் இருப்பவர்களுக்கு ஏற்படும். அதற்காக, அமுதசுரபிதான் என்று சொல்லவரவில்லை.
நெல் அறுவடை செய்து, வீட்டுக்கு நெல் கொண்டு வருவதென்பது, ஒரே நாளில் நடந்து முடியாது. இதற்கு பல நாட்கள் எடுக்கும். இப்போதெல்லாம், ஒரே நாளில், ஒரே நாள் என்றும் சொல்லவும் முடியாது. குறித்த நேரத்திற்குள் அறுவடை செய்து நெல்லும் கிடைத்து, நெல்லையும் அவ்விடத்திலே விற்றுவிட்டு அதற்கான பணத்தினை கையிலே எடுத்துவிட்டு வீட்டுக்கு வந்திடுவர். வீட்டுக்கு கொண்டுவந்த பணமும் போறவழி தெரியாமல் சென்றுவிடும். சோற்றுக்கு கையேந்தும் நிலையும், கடன் வாங்கும் நிலையும் தான் இப்பெல்லாம் நடக்கின்றது. அப்பெல்லாம் நெல்லுதான் வீட்டின் சீதேவி, இதனால் சோற்றுக்கு போராடவில்லை. என்கின்றார் சின்னத்தம்பி.
வயல் செய்கையில் மிகுந்த ஈடுபாடும், அதுபற்றிய அறிவும் நிரம்பியவர்தான் சின்னத்தம்பி, அவர் சொல்வதுபோன்று, முன்னெல்லாம் அரிசிக்கடை படுவான்கரையில் இருக்கல்ல. இப்போதுதான் திரும்பும் திசைக்கெல்லாம் அரிசிக்கடை இருக்கின்றது.
சின்னத்தம்பியும், சிதேவிப் பற்றி கூறியதோடு, இன்னொரு விடயத்தினையும் விடயத்தினையும் கூறினார். கேட்க கவலைதான் இருந்தது. அதையும் வாசித்துப் பாருங்கோ,
சின்னத்தம்பி சூடுமிதிப்பது இரவில்தான் நடைபெறும், கண்விழித்திருந்துதான் சூடுமிதிப்பர். நித்திரை வந்தால் வைக்கோல் கந்துகளில் தூங்கிக்கொள்வர். உழவு இயந்திரத்தின் வேலை முடிந்தவுடன் எழுந்து வைக்கோல் கந்துகளை வெளியாக்குவர். பலர் நித்திரைக் கொள்வதில்லை. இருந்தாலும் தொடர்ச்சியாக இரவுகளில் நித்திரை விழித்தால், சிலர் தூக்கிக்கொள்வர். அவ்வாறு வைக்கோல் கந்துகளில் தூக்கினால் தெரியவுமாட்டார்கள். ஒரு நாள், ஓரிடத்தில் சூடுமிதித்துக்கொண்டிருக்கும் போது, ஒருவர் வைக்கோல் கந்தில் தூக்கிவிட்டார். உழவு இயந்திர சாரதிக்கு இவர் தூங்கியது தெரியாது. உழவு இயந்திரத்தினை வைக்கல் கந்துகளின் மேல் ஏற்றிய போது, உழவு இயந்திரத்தின் சில்லுக்குள் இவரின் கால்தான் அகப்பட்டது. என்ற ஞாபக உணர்வினையும் சின்னத்தம்பி கூறமறக்கவில்லை.