தலைவர் பிரபாகரனின் கோட்பாட்டை சிதைக்க சிலர் கிழக்கில் முயற்சிக்கின்றனர்.அரியம்.

0
465

கிழக்கிலே தமிழ்ப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்கின்ற போர்வையில் தந்தை செல்வா, தலைவர் பிரபாகரன், தற்போதைய தலைவர் சம்பந்தன் ஐயா ஆகியோரின் கோட்பாட்டைச் சிதைப்பதற்காக முயற்சி செய்கின்றார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்திற்கு மட்டும் உரிய கட்சி அல்ல. இது வடகிழக்குத் தாயகத்திற்கான கட்சி என முன்னளா பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தெரிவித்தார்.

இன்றைய தினம் மட்டக்களப்பு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக் காரியாலயத்தில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் 120வது பிறந்த தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தந்தை செல்வாவின் கொள்கையை நாங்கள் நேசிப்பதாக இருந்தால் தந்தை செல்வாவால் உருவாக்கப்பட்ட கட்சியை நாங்கள் பலப்படுத்த வேண்டும். அதுதான் அவருக்குச் செய்கின்ற கைமாறு.

இன்றிருக்கின்ற நிலையில் எமது கிழக்கு மாகாணத்தைப் பொருத்தமட்டில் பல்வேறு கட்சிகள் வந்திருக்கின்றன. அக்கட்சிகளைப் பலப்படுத்துவதற்கான பிரதேசவாதக் கருத்துக்களை முன்வைக்கின்ற பல அமைப்புக்களும் இப்போது வந்திருக்கின்றன. அவர்கள் கூறுவதாவது கிழக்கில் ஒரு தமிழ் முதலமைச்சர் வர வேண்டும், அதற்காக கிழக்கில் உள்ள தமிழர்கள் அனைவரும் ஒன்று சேரவேண்டும் என்ற கருத்துக்கள் எல்லாம் வந்திருக்கின்றன.

இதிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்றவர்கள் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்திற்கு மட்டும் உரிய கட்சி அல்ல. இது வடகிழக்குத் தாயகத்திற்கான கட்சி. ஒரு குடையில் இருக்க வேண்டும், ஒரு குடையில் அரசியல் செய்ய வேண்டும் என்பவர்கள் அதற்குச் சரியான கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதான் என்பதை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சிதைப்பதற்காக பல்வேறுபட்ட அமைப்புகள், சக்திகள் எந்தக் கட்சியையும் சார்பானவர்கள் அல்ல என்று கூறிவருகின்றார்கள்.

அவ்வாறான அமைப்புகளிலே இருக்கக் கூடிய பலர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக கடந்த காலங்களில் தேர்தல்களிலே போட்டியிட்டவர்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடிக்க வேண்டும் என்று களமிறங்கியவர்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் பிரசாரம் செய்தவர்கள் அனைவரும் சேர்ந்து தற்போது கிழக்கிலே தமிழ்ப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்கின்ற போர்வையில் தந்தை செல்வாவின் கோட்பாட்டை, தலைவர் பிரபாகரனின் கோட்பாட்டை, தற்போதைய தலைவர் சம்பந்தன் ஐயாவின் கோட்பாட்டைச் சிதைப்பதற்காக முயற்சி செய்கின்றார்கள். இதில் மக்கள் தெளிவாக இருக்க வேண்டும்.

எக்காரணம் கொண்டும் பிரதேசவாதங்களை முன்வைக்கின்ற கட்சிகளின் பின்னால் அணிதிரள்வதை மக்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். வடகிழக்குத் தாயகம் தான் எமது பூர்வீக நிலம் அதனூடாக அரசியல் செய்கின்ற எமது தமிழரசுக் கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்