தந்தை செல்வா அவர்கள் பேணிய மாண்புகள் ஒரு பார்வை! வே. தவராஜா

0
522

தந்தை செல்வா!
தமிழினப் பற்றாளர்கள் நாளும் உச்சரிக்கும் மந்திரம்!
சத்தியம் நிறைந்தவர், சக்தி கொண்டவர், சரித்திரம் படைத்தவர்! சாகாவரம் பெற்றவர்!
முழு நாட்டுக்குமே பெருமைதேடிக் கொடுத்த பெருந்தகை!
நான்கு சகாப்தங்களாக தமிழினத்தை வழிநடத்திச் சென்ற பெரும்தலைவன்!

நம்மிடமிருந்து விடைபெற்று 40 ஆண்டுகள் கடந்த நிலையில் அவரது 120 ஆவது அகவையில் நாம் அவரைத் தரிசிக்கிறோம்.

தலைவன் என்றழைத்ததால் அங்கு சற்று இடைவெளியிலிருக்கும். தந்தையென்று போற்றினால் நெருக்கமிருக்கும். தன்னினத்தோடு நெருக்கமாய் வாழ்ந்தவர் என்பதனால் அனைத்துத் தமிழரும் ஏகோபித்த முறையில் தந்தையென்றழைத்துப் பெருமைகொண்டாடினார்கள்.

அகிம்சையின் உச்சிக்கே நம்மை அழைத்துச் சென்றார். நாட்டையே ஆட்டம்காண வைத்தார். ஆனால் அவர் மறைவிற்குப்பின் நமது அரசியல் பாதைமாறியது. எல்லாமே நடந்தது. ஆனால் இன்றோ எல்லாமே பூச்சியமானது! நெருக்கடி நிறைந்த நிலையில் அவரை நினைந்து நிம்மதியடைவோம்!

தற்போதைய நமது அரசியல் நிலவரங்களை நோக்கும்போது நமது பெரியவர் தந்தை அவர்கள் தன்சொந்த வாழ்விலும், அவரது அரசியல் வாழ்விலும் அவர் கட்டிக்காத்த மாண்புகளை எண்ணிப் பார்க்கத் தோன்றுகிறது.

 கற்கும் காலத்தில் கடைப்பிடித்த ஒழுக்கம்
 ஆசானாய்ப் பணியாற்றியபோது ஆசிரியத்துவத்திற்கே இலக்கணம் வகுத்தது.
 சட்டத்துறையில் காத்துநின்ற சத்தியம்.
 அரசியல் வாழ்வில் போற்றிப் பேணிய மாண்புகள்.

இப்படி ஒவ்வொரு வாழ்வு நிலையிலும் அவர் வாழ்ந்த வாழ்வு நமக்குப் பெரும் படிப்பினையாகும். எனவே ஒவ்வொன்றாகப் பார்ப்பது இன்றைய காலத்திற்கு அவசியமாகின்றது.

மாணவப் பருவம்
பள்ளிக்காலம் அது அனைவருக்கும் பொற்காலம். அந்தப் பருவத்தில் பதிவாகும் பண்புகள் எக்காலத்திற்கும் அவர்களை வழிநடத்தும். அப்படித்தான் தந்தையவர்களது பாடசாலை வாழ்க்கையும் அமைந்திருந்தது. அவர் பேணிய ஒழுக்க சீலங்களைக் கண்டு வியந்த அவரது ஆசான்கள் அவரை இப்படித்தான் வியந்து போற்றினார்கள்.

“கெட்டிக்காரன் எதையும் பகுத்தறியும் கூர்மையான புத்தியுடையவன். கடினமாகப் படிப்பவன். நல்லொழுக்கம் பேணியவன். ஆழ்ந்து சிந்தித்து சுருக்கமாகப் பேசுபவன். நடைமுறைச் சாத்தியமான வழிகளைப் பின்பற்றி காரியம் சாதிக்கத் தெரிந்தவன்.”

போதித்தவர்கள் போற்றிப் பகிர்ந்த நற்சான்றுகள் தந்தையின் பிற்காலப் பெருவாழ்விற்குக் கட்டியம் கூறுபவைகளாக அமைந்தன.

ஆசிரிய வாழ்வில் அவரது அரும்பணிகள்
1918களில் தந்தையவர்கள் ஆசிரியப் பணிக்குள் அடியெடுத்து வைக்கிறார்கள். அப்போதவர் விஞ்ஞானப் பட்டதாரி. கணிதமும், விஞ்ஞானமும் அவருக்கு மிகவும் பிடித்த பாடங்கள். கொழும்பு சென். தோமஸ் கல்லூரி, கொழும்பு வெஸ்லி கல்லூரி ஆகிய புகழ்மிக்க கல்லூரிகளில் ஆசிரியப் பணி புரிந்தவர்.

அவர் அங்கு, ஆற்றிய ஆசிரியப் பணியின் சிறப்பை அவரிடம் கல்வி பயின்ற மாணவர்களிலொருவர் ஈ. டபிள்யு. அதிகாரம் அவர்கள். இவரொரு கல்விமான், தத்துவஞானி, சிறி ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக துணைவேந்தராகப் பணியாற்றியவர். இலங்கைப் பிரம்மஞான சங்கத்தின் தலைவராக விளங்கியவர்.

இப்பேற்பட்ட பெருமகன் அவர்கள் தன் வாழ்க்கைச் சரித்திரத்தில் பகிர்ந்தவைகள் நமக்குப் பெருமை சேர்ப்பனவாகும்.

“நான் வெஸ்லியில் படிக்கும்போது ஒரு கவர்ச்சிமிக்க ஆசிரியரைச் சந்தித்தேன். அவர் பெயர் சா.ஜே.வே. செல்வநாயகம். அவர் எனக்கு மிகவும் விருப்பமானவர். மாணவர்களுடன் பெரும் அன்பு நிறைந்தவர். கணிதம், விஞ்ஞானம் கற்பித்தார். சிங்களம், தமிழ், முஸ்லிம், பறங்கியர் என்ற பேதம் பாராமல் அனைவரையும் ஒன்றாகவே நோக்கினார். நாட்டில் சகோதரத்துவத்தையும், நல்லெண்ணத்தையும் வளர்ப்பதற்கு அவர் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியவை.”

அப்படி தந்தையவர்கள் ஆசான் பணியில் ஆற்றிய பங்கு அவரது அரசியல் வாழ்விலும் பளிச்சிட்டது.

நியாயதுரந்தர் சேவையில் நிலைநாட்டிய நீதி
தனது 26வது அகவையில் சட்டத்துறைக்குள் பிரவேசிக்கிறார். மிகவும் பேர்போன சட்டவல்லுனராக விளங்கிய காலப்பகுதி.

அப்போது மலைநாட்டைச் சேர்ந்த பெரும் பணக்காரர் ஒருவர் தந்தையைச் சந்திக்கிறார். தனது வழக்கிலே ஆஜராகும்படி கேட்கிறார். வழக்கைப் படிக்க வேண்டும். கால அவகாசம் கேட்கிறார். இருவாரங்களின் பின் மீண்டும் சந்திக்கிறார்கள். தந்தையோ தன்னால் இவ்வழக்கில் தோன்ற முடியாதென்கிறார். பணம் கூடுதலாகத் தருகிறேன் என்று சொல்கிறார். அப்போதும் தன்னால் முடியாதென்று முற்றுப்புள்ளி வைக்கிறார். அவர் கூடவே இருந்தவர் பணம் கூடத் தருகிறார்தானே பேசுங்களேன் என்று சொல்கிறார். சிரித்துக்கொண்டே சொல்கிறார் பொய்வழக்கது, அப்படிப் பொய்யான வழக்குகளில் நான் ஆஜராகமாட்டேன்.
இப்படித்தான் காந்தியடிகளும் தன்னுடைய சட்டத்துறை வாழ்வில் சத்தியம் காத்தார். இதனால் ஈழத்துக் காந்தியென்று நமது தந்தையும் போற்றப்பட்டார்.

அரசியல் வாழ்வு
நாடான்ற நம்மினம் நலிந்துபோன துயரம் கண்டு தனக்குள்ளே வேதனைப்பட்டுக் கொண்டிருந்தவர் நமது தந்தையவர்கள். நெஞ்சுக்குள் நெருப்பாயெரிந்த உணர்வு சந்தர்ப்பம் தேடியது. 1936 களில் அரசியலில் நாட்டம் கொண்டார். 1944 இல் அரசியலுக்குள் அடியெடுத்து வைத்தார். 1947 இல் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் வேட்பாளராக காங்கேசன்துறை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். நாடாளுமன்றில் நமது தலைவன் ஒலிக்கத் தொடங்கினார்.

தான் சாந்த கட்சி சோரம் போனதால் தானும் சோரம் போகாமல் 1949 இல் தமிழரக்கென்று தனிக்கட்சி கண்டார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியென்றும், மூவர்ணக் கொடியும், வீடும் அதன் சின்னமென்று அறிவித்தார்.

இங்கு அவர் காட்டிய மாண்புகள் பற்றிப் பார்ப்போம்.
தேர்தல் காலங்களில் தன்னோடு போட்டியிடுபவர்களைத் திட்டித் தீர்ப்பது வழமையாகும். இப்படித்தான் தந்தையவர்களது மேடையிலும் திட்டித் தீர்க்கத் தொடங்கினார்கள். அப்போதெல்லாம் மேடையிலிருந்தவாறே அதனைக் கண்டித்து நிறுத்திவிடுவார்.

இப்படித்தான் செங்கலடியில் தந்தையவர்கள் கலந்து கொண்ட மேடையிலும் கே.டபிள்யு. தேவநாயகம் அவர்களைத் திட்டத் தொடங்கினார்கள். தந்தை அதனைத் தடுத்து நிறுத்தினார்கள். அப்போது அங்கு பேசியவர் அவர்கள் நம்மை அப்படித் தாக்குகிறார்களே என்றார். தந்தை “மெல்லிய தன் குரலில் அது அவர்கள், நாம் அதனைச் செய்யக்கூடாது” என்றார்.

ஒரு நாள் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தந்தையைச் சந்திக்க வந்திருந்தார்கள். அவர்களில் அமரர் எதிர்மன்னசிங்கம் அவர்களுமிருந்தார்கள். அப்போது தந்தையோடிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் எதிர்மன்னசிங்கம் அவர்களை சாடிப்பேச முனைந்தார். அது கண்டு சீற்றமடைந்த தந்தையவர்;கள் அதனை நிறுத்தியதோடு அவ்வாறு செயற்பட முனைந்தவரை அங்கிருந்து வெளியேற்றி விட்டார்.

மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்று அவர் கடைப்பிடித்த அரசியல் மான்பு இன்று மிக, மிக அவசியமாகத் தோன்றுகிறது. தன்னுடைய கட்சித் தொண்டர்களை அவர் மதித்துப் போற்றினார்.

அமரர் இராசமாணிக்கம் ஐயா அவர்களைச் சந்திப்பதற்காகப் பட்டிருப்புத் தொகுதியிலிருந்து ஒரு கட்சித் தொண்டர் பாராளுமன்றம் வந்திருந்தார். கடதாசித் துண்டொன்றில் இராசமாணிக்கம் ஐயாவைச் சந்திக்க வேண்டும் என்று அங்கு சென்றவர் எழுதி அனுப்பினார்.

சற்று நேரத்தில் அதே துண்டைக் கையில் ஏந்தியவாறு மெல்ல, மெல்ல தந்தையவர்கள் அங்கு சந்திக்க வந்தவரை நோக்கி வருகின்றார். அவரைக் கண்டதும் மிகவும் ஆச்சரியத்தோடு அங்கு வந்தவர் கையெடுத்துக் கும்பிட்டுக் கொண்டு தந்தையை நோக்கி ஓடினார்.

“நான்தான் ஐயா இராசமாணிக்கம் ஐயாவைச் சந்திக்க வந்தவர்” என்று சொன்னதும் அவர் பேசிக் கொண்டிருக்கிறார் அவரது பேச்சையும் நீங்கள் கேட்கலாம் என்றதோடு அனுமதி சீட்டையும் கொடுத்து அழைத்துக் கொண்டு போனார்.

இவ்வாறு தொண்டனை மதிக்கும் தலைவனை இக்காலகட்டத்தில் காண்பதரிது அல்லவா! இன்னுமொரு அரிய காட்சியை விபரிக்க விரும்புகிறேன்.

ஐயா இராசமாணிக்கம் அவர்கள் இயற்கை எய்திய சேதி கேட்டு தந்தையவர்கள் அதிர்ந்து போனார்கள். யாழ்ப்பாணத்திலிருந்தவாறே இரங்கல் செய்தியை விடுத்திருக்க முடியும். ஆனால் இறுதிக் கிரியைகள் நடைபெறும் நாளன்று இராசமாணிக்கம் ஐயாவின் வீட்டிற்கு வருகை தந்து தனது இறுதி அஞ்சலியைச் செலுத்தினார். அத்தோடு அவர் திரும்பி விடுவார் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் அங்கேதான் அந்த ஆச்சியத்தைக் கண்டு அதிசயித்தோம்.

ஐயாவின் பூதவுடல் மயானத்தை நெருங்கிக் கொண்டிருந்த நேரம் வண்டியொன்று வந்து நிற்கிறது. வண்டியின் கதவுகள் திறக்கப்படுகின்றன. தந்தை செல்வா இறங்குகிறார். ஊர்வலத்தில் வந்தவர்கள் எல்லோரும் “ஐயா” இறங்க வேண்டாம், நீங்கள் அப்படியே வண்டியில் வந்து மயானத்தில் இறங்குங்கள்” மழைவேறு பெய்துகொண்டிருந்தது என்று கெஞ்சிக் கேட்டார்கள். ஆனால் அவர் அதனை மறுதலித்து ஊர்வலத்தில் கலந்து மயானம் வரை நடந்து வந்தார்.

தந்தை அவர்கள் நோய்ப்படுக்கையில் யாழ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரம் அப்போதைய தமது நாட்டின் பிரதமர் அவர்கள் விசாக் கட்டுப்பாடு எதுவுமின்றி நரம்பியல் நிபுணன் ராமமூர்த்தி அவர்களை வரவழைத்து தந்தைக்கு வைத்தியம் பார்த்தது தந்தையின் தலைமைத்துவப் பண்புக்கு கொடுக்கப்பட்ட பெரும் மரியாதையல்லவா.

தந்தை அவர்களின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலியுரை நிகழ்த்திய சகல இனங்களையும் சேர்ந்த தலைவர்கள் தந்தை அவர்களின் மாண்புகளை எடுத்துக்கூறியது இன்றும் நினைத்து பெருமைப்படத்தக்கவைகளாகும்.

தந்தையவர்கள் காட்டிய அரசியல் மாண்புகள் போற்றத்தக்கவை மட்டுமல்ல கடைப்பிடிக்கப்பட வேண்டியவைகளும்கூட.

தந்தையே!
எப்போது இப்படியொரு தலைவனை நாங்கள் தரிசிப்போம். உங்கள் வரவிற்காக காத்துக்கிடக்கிறோம்.
வே. தவராஜா
தலைவர்
மண்முனை வடக்கு
இ.த.அ.கட்சிக் கிளை,
மட்டக்களப்பு.
தொ.பேசி. 077 0070617
31.03.2018