தமிழ் மண்ணுக்கு பெருமை சேர்த்த மாணவர்களை வாழ்த்தும் யோகேஸ்வரன் எம்.பி.

0
169

2017ம் ஆண்டு முடிவடைந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் மூலம் தமிழ் சமூகத்துக்கு பெருமை சேர்;த்த கல்விச் செல்வங்களை வாழ்த்துவதில் பெருமிதம் கொள்வதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தற்போது வெளியான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் தொடர்பாக வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே மேற்சொன்னவாறு தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கையில்!

இலங்கையில் தற்போது வெளியான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் படி அகில இலங்கை ரீதியில் ஏழாம் இடத்தையும், தமிழ் மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தையும் பெற்று தமிழ் சமூகத்திற்கு பெருமை சேர்த்து தந்த யாழ்ப்பாணம் வேம்படி உயர் மகளீர் கல்லூரி மாணவி செல்வி.சுரேஷ்குமார் மிருதிக்கு தமிழ் சமூகம் சார்பாக எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமிதமடைகின்றேன்.

இந்த புதிய பாடத்திட்டத்திற்கமைய சாதாரண தரப் பரீட்சையில் பத்தாயிரம் மாணவர்கள் ஒன்பது ஏ சித்திகளைப் பெற்றிருப்பது மிகவும் சந்தோசத்தை தருகின்றது. அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன் முறையாக தமிழ் பாடசாலை ஒன்றில் அதிக சித்திகளைப் பெற்று தமிழ் சமூகத்திற்கு பெருமை சேர்த்த வின்சன்ட் மகளீர் உயர்தர பாடசாலை மாணவர்கள் 42 பேருக்கும், மற்றும் ஏனைய சித்திகளைப் பெற்ற மாணவர்களையும் கௌரவமாக பாராட்டுகின்றேன்.

அத்தோடு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள நான்கு தமிழ் கல்வி வலயங்களில் திறமையான சித்திகளைப் பெற்ற மாணவர்களை பாராட்டுவதுடன், இவர்களை கற்பித்த ஆசிரியர்களையும் இந்த சந்தர்ப்பத்தில் பாராட்டுகின்றேன்.

அத்தோடு வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் ஒன்பது ஏ சித்திகளை ஏழு மாணவர்களும், எட்டு ஏ சித்திகளை மூன்று மாணவர்கள், ஏழு ஏ சித்திகளை ஏழு மாணவர்களும் பெற்று கல்குடா கல்வி வலயத்தில் முதலாம் இடத்தினை பெற்றமைக்காக குறித்த மாணவர்கள், கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர், கற்பித்த ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள், கல்வியலாளர்கள் ஆகியோருக்கு எனது தலைமையில் நடைபெற்ற வாழைச்சேனை பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் வைத்து எனது வாழ்த்துக்களையும் தெரிவித்தேன்.

மேலும் இம்முறை வாகரை மகா வித்தியாலயத்தில் எட்டு ஏ புள்ளிகளைப் பெற்று ஒரு மாணவி சித்தி பெற்றிருப்பதானது வாகரைப் பிரதேசத்தின் கல்வி வளர்ச்சி தற்போது அதிகரித்து வருகின்றமை தெரியவருகின்றது. இது விடயமாக வலயக் கல்விப் பணிப்பாளருக்கு எனது மனப்பூர்வமான நன்றியை நேரில் தெரிவித்;ததுடன், குறித்த மாணவிக்கும், பாடசாலை சமூகத்துக்கும், பெற்றோருக்கும் எனது நன்றிகள்.

எனவே சித்தி பெற்ற மாணவர்கள் உயர் தரத்திலும் சித்தி பெற்று பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகி தமிழ் சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்கு உதவும் வகையில் தங்கள் கல்வியை மெருகூட்ட வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.