7வருட வரலாற்றையே மாற்றியமைத்த மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம்.

0
608

(படுவான் பாலகன்) இலங்கைப் பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் 51வீதமான மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் ஆரம்பிக்கப்பட்டு 2017க்கு முன்னர் 7தடவைகள் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றியிருந்த நிலையில், மாணவர்களின் உயர்தரத்திற்கான தெரிவு அதிகூடிய சித்தி வீதம் 2011ம் ஆண்டே பெறப்பட்டிருந்தது. குறிப்பாக 40.1வீத சித்தியை மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் பெற்றிருந்தது. அதேவேளை 2016ம் ஆண்டு சித்தி 30வீதமாக காணப்பட்ட நிலையில், 2017ம் ஆண்டிற்கான பெறுபேறு 51வீதமாக மாற்றமடைந்துள்ளதுடன், 2016ம் ஆண்டைவிட 21வீத சித்தியினை மேலதிகமாக பெற்று கடந்த 7வருட வரலாற்றையே 2017ம் ஆண்டு பெறுபேறு மாற்றியமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முழுமையாக கஸ்ட, அதிகஸ்ட பாடசாலைகளையும், கடந்த மூன்று தசாப்த கால யுத்தத்தின் வடுக்களை தாங்கிய மக்களையும், பாடசாலை கல்வியை மாத்திரமே நம்பி வாழும் பெரும்பான்மையான மாணவர்களையும், அன்றாட தமது வாழ்க்கையினை வழிநடத்துவதற்கு போராடும் மக்களையும் கல்வியின் அவசியத்தினை மெதுமெதுவாக உணர்ந்துவருகின்ற பெற்றோர்களையும், முக்கிய பாடங்களுக்கு இன்னமும் ஆசிரியர் பற்றாக்குறைகளுடன் இருக்கின்ற பாடசாலைகளையும் கொண்டுள்ள வலயமாக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் இருக்கின்ற சூழலிலும் 51வீதமான சித்தியினை பெற்றுள்ளமை எடுத்துக்காட்டத்தக்கது.
பெறுபேற்றின் உயர்வுக்கு உழைத்து நின்ற மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், வலயக்கல்வி அதிகாரி உட்பட்ட அதன் கீழ் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றிகளையும், சித்தியடைந்த மாணவர்களுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வதாக மேற்கு வலய சமூகத்தினர் தெரிவித்தனர்.