சாதனையால் பிரதேசத்தினையே திரும்பி பார்க்க வைத்த மண்முனை தென்மேற்கு கோட்ட மாணவர்கள்

0
2894

(படுவான் பாலகன்) இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள 2017ம் ஆண்டிற்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மண்முனை தென்மேற்கு கோட்டத்திற்குட்பட்ட மாணவர்கள் வரலாற்று சாதனையை நிலைநாட்டியுள்ளனர்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் உருவாக்கப்பட்டதன் பின்பு, மண்முனை தென்மேற்கு கோட்டத்தில் ஓரிரு 8ஏ தர சித்திகளும் ஏனைய ஒரு தர சித்தியும் இதுவரை பெறப்பட்டு வந்துள்ளன.

குறித்த கோட்டத்தில் ஒன்பது கல்விப்பொதுத்தராதர சாதாரணதரத்தினைக் கொண்ட பாடசாலைகள் உள்ளன. இவற்றில்  வெளியாகியுள்ள பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் 6பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் 8ஏ தர சித்திகளுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலயத்தில் கல்வி பயின்ற இரு மாணவர்கள் 8ஏ,1வீ தர சித்திகளையும், முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற ஒரு மாணவன் 8ஏ,1வீ தர சித்திகளையும், மற்றுமொரு மாணவன் 8ஏ, 1சீ தர சித்திகளையும், முனைக்காடு விவேகானந்த வித்தியாலய மாணவன் 8ஏ,1எஸ் தர சித்திகளையும், அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலய மாணவர் ஒருவர் 8ஏ,1எஸ் தர சித்திகளையும், அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர் ஒருவரும், கடுக்காமுனை வாணி வித்தியாலய மாணவர் ஒருவரும் 8ஏ தர சித்திகளையும் பெற்றுள்ளனர்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் முழுமையாக கஸ்ட, அதிகஸ்ட பாடசாலைகளை கொண்டுள்ள நிலையிலும், கடந்த மூன்று தசாப்த கால யுத்தத்தில் பாதிக்கப்பட்டிருந்த சூழலிலும், அன்றாடம் கூலிவேலைகளைள செய்து குடும்பத்தினை அதிகம் கொண்ட பிரதேசமாக உள்ள நிலையிலும் கல்வியில் மெதுமெதுவான வளர்ச்சியினை கண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.