மட்டக்களப்பில் சிங்கள கற்கை நெறியாளர்களுக்கு சான்றிதழ்

0
338

மட்டக்களப்பு சிவில் பிரஜைகள் அமைப்பினால் நடாத்தப்பட்ட ஆறு மாத சிங்கள கற்கை நெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் மற்றும் கௌரவிப்பு நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு சிவில் பிரஜைகள் அமைப்பின் தலைவர் ரி.திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக வாகரை பிரதேசத்திற்கான இராணுவ கட்டளைத் தளபதி கேணல்.எஸ்.அமரசிறி கலந்து கொண்டார்.

மேலும் அதிதிகளாக கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு, மட்டக்களப்பு தேசிய கல்வியல் கல்லூரி தலைவர் எஸ்.ராஜேந்திரன், 23ம் இராணுவ பிரிவின் சிவில் உத்தியோகத்தர் எல்.கே.அமுணுகம, வாழைச்சேனை பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.பன்டார, ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர் எம்.எச்.எம்.ஹமீம், ஓட்டமாவடி தேசிய பாடசாலை அதிபர் எம்.ஏ.ஹலீம் இசாக், முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் கிழக்கு மாகாண பொறுப்பாளர் ஏ.எல்.ஜுனைட் நளிமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது கலந்து கொண்ட அதிதிகள் பொன்னாடை போர்;த்தி கௌரவிக்கப்பட்டதுடன், சிங்கள கற்கை நெறியில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர்களான யூ.எல்.எம்.ஹரீஸ், ஏ.எச்.ஏ.ஹீஸைன் ஆகியோருக்கும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் சிவில் பிரஜைகள் அமைப்பினால் நடாத்தப்பட்ட ஆறு மாத சிங்கள கற்கை நெறியினை பூர்த்தி செய்த அறுபது மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் என்பன அதிதிகளால் வழங்கி கௌரவிப்பட்டதுடன், அமைப்பினால் ஆறு மாத காலங்களுக்கு ஒரு முறை சிங்கள கற்கை நெறிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்படத்தக்கது.