அடுத்த சமூகத்தின் மொழி தெரியாமல் 2000 ஆயிரம் வருட வரலாற்றைப் பற்றிப் பெருமையடிப்பதில் பயனேதுமில்லை

0
487
அடுத்த சமூகத்தின் மொழி தெரியாமல் 2000 ஆயிரம் வருட வரலாறு நம் கைவசம் இருக்கிறது என தங்களுக்குச் சாதகமாக எழுதப்பட்ட வரலாற்றைப் பற்றிப் பெருமையடித்துக் கொண்டிருப்பதில் பயனேதும் இல்லை என மட்டக்களப்பு தாளங்குடா கல்வியியற் கல்லூரி முதல்வர் எஸ்.ராஜேந்திரன் தெரிவித்தார்.
ஓட்டமாவடி மத்திய தேசியக் கல்லூரி மண்டபத்தில் மட்டக்களப்பு சிவில் பிரஜைகள் சபையின் தலைவர் ரீ. திருநாவுக்கரசு தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (24.03.2018) சகோதர மொழியான சிங்களத்தையும் இணைப்பு மொழியான ஆங்கிலத்தையும் எழுத, பேச, வாசிக்கக் கற்றுக் கொண்ட தமிழ் பேசும் முஸ்லிம் மற்றும் தமிழ் இளைஞர் யுவதிகள் 80 பேருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
அங்கு கற்றுக் கொண்ட  மொழிப் புலமையை வெளிப்படுத்தும் நிகழ்வுகளும் மேடையில் நிகழ்த்தப்பட்டன.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய ராஜேந்திரன், நாம் அடுத்த சமூகத்தின் மொழியை ஆர்வத்தோடு கற்றுக் கொள்வதில் நமக்கு ஒன்றும் குறைந்து விடப்போவதில்லை.
ஆனால், அரசு கொள்கை வகுப்பில் இதற்கான சரியான அமுலாக்கம் இருக்க வேண்டும்.
மட்டக்களப்பு தேசிய கல்வியியற் கல்லூரியில் தமிழ் பேசும் சமூகங்களைச் சேர்ந்த சுமார் 470 ஆசிரிய பயிலுநர்கள் பயிற்சி பெறுகின்றார்கள்.
ஆனால், அங்கு சிங்கள மொழிபை; போதிக்க ஒரு சிங்கள விரிவுரையாளரை அனுப்புவதற்கு நமது நிருவாகங்களில் வழிவகைகள் இல்லை. அதுபற்றிச் சிந்திப்பதற்குக் கூட நிருவாக முறைமை இடம்கொடுப்பதுமில்லை.
இங்கு மட்டுமல்ல தமிழ் பேசும் வடக்கு கிழக்கின் வேறெங்கும் உள்ள கல்வி, உயர் கல்வி  நிறுவனங்களில் புலமைவாய்ந்த ரீதியில் சிங்கள மொழியைப் போதிக்க, அதில் கவனம் செலுத்த எவரும் முயற்சிப்பதில்லை.
அதேபோல பெரும்பான்மை சிங்களப் பிரதேச கல்வி நிறுவனங்களில் புலமை வாய்ந்த ரீதியில் தமிழைப் போதிக்க ஏற்பாடுகளுமில்லை, நமது மன  நிலை அதற்கு இடங்கொடுப்பதுமிலலை.
திருத்தி, அல்லது தங்களது பெருமையைப் பறைசாற்றும்படி எழுதப்பட்ட வரலாறுகளை வைத்துக் கொண்டு அதற்கு 2000 ஆண்டுகளாக நாம் இவற்றைப் பாதுகாத்து வந்திருக்கின்றோம், என்று பெருமையடித்துக் கொண்டு திரிகின்றோமே தவிர அடுத்த சமூகத்தின் வரலாறு மொழி எனபனவற்றைக் கற்று அவர்களோடு சக வாழ்வு வாழ நாம் எவரும் முயற்சி எடுத்ததில்லை. இது ஒரு மோசமான வரலாற்றையும் ஈடுசெய்ய முடியாத பாதிப்புக்களையும் இலங்கையின் புதல்வர்களுக்கு அளித்துள்ளது.
அரச கரும மொழிகளைப் படிப்பதில் அரச ஊழியர்கள் படும்பாடு சொல்லுந்தரமன்று.
எதிர்காலத்தில் இலங்கையில் இன ரீதிhன சகவாழ்வு ஐக்கியம் நிலவ வேண்டுமாயின் கொள்கை ரீதியான மாற்றங்கள் தேவை. அத்துடன் அவற்றை நடைமுறைப்படுத்தவும் வேண்டும்.
ஒரு நிகழ்வை, ஒரு சம்பவத்தை, ஒரு சரித்திரத்தை தத்தமது லாபங்களுக்கான திரித்துக் கூறுவதில் மொழி அடிப்படையில் நாம் போட்டி போட்டுக் கொண்டு செயல்படுகின்றோம். இதில் ஊடங்கங்களின் பங்கு மிகவும் சிலாகித்துப் பேசப்படுகின்றது.
சிங்கள ஊடங்கங்கள் ஒரு போக்கும், தமிழ் ஊடகங்கள் இன்னொரு நேர் எதிர்மாறான போக்கையும் கொண்டுள்ளன.
அவரவர் மொழி கலாசாரம் பண்பாடுகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
மனம் திறந்த கலந்துரையாடல்களின் மூலமாக இலங்கையின் அவரவர் சமூக கலாச்சார பண்பாடுகளும், வரலாறும் பேணிப் பாதுகாப்பதோடு வரலாறும் புதுப்பித்து உண்மைத் தன்மையோடு எழுதப்பட வேண்டும்”; என்றார்.
இங்கு இடம்பெற்ற  நிகழ்வுகள் வருகை தந்திருந்த அதிதிகளால் மிகுந்த வரவேற்பைப் பெற்றுப் பாராட்டப்பட்டது.
இந்நிகழ்வுகளில் படை, பொலிஸ், மற்றும் நிருவாக சேவை அதிகாரிகள், நிறுவனப் பிரதிநிதிகள், மட்டக்களப்பு சிவில் பிரஜைகள் சபையின்  பொதுச் செயலாளர் எச்.எம். அன்வர்  மாவட்ட அமைப்பாளர் ஏ.எஸ்.எம். ஸாதிக் ஆகியோரும் டிப்ளோமா பாடநெறியை முடித்துக் கொண்ட பயிலுநர்களும் கலந்து கொண்டனர்.