சட்டம், நீதி என்பவற்றிற்கு அப்பால் ஒரு நியாயம் இருக்கின்றது என்பதனை சட்டம் எப்போதும் ஒத்துக்கொள்கின்றது.

0
395

சட்டம், நீதி என்பவற்றிற்கு அப்பால் ஒரு நியாயம் இருக்கின்றது என்பதனை சட்டம் எப்போதும் ஒத்துக்கொள்கின்றது. எமது நாட்டின் ஜனாதிபதி அவர்களும் மக்களின் கோரிக்கைகளுக்கு கவனம் செலுத்தி ஒப்புரவு நீதி என்கின்ற நீதி என்பது கடைப்பிடிக்கப்படுகின்ற ஒன்று என்ற விடயத்தையும் கவனத்தில் கொண்டு ஆனந்த சுதாகரன் அவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.

நேற்று (24) மட்டக்களப்பில் இடம்பெற்ற ஆனந்தசுதாகரன் விடுதலை தொடர்பான கையெழுத்து சேகரிக்கும் நிகழ்வில் கலந்து கையொப்பமிட்ட பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஆனந்த சுதாகரன் அவர்களின் மனைவியின் இறுதிச் சடங்கு நிகழ்வில் கலந்து கொண்ட போது அங்கு ஏற்பட்ட அனுதாப அலைகளை தாங்களும் அங்கீகரிப்பதாக மட்டக்களப்பு இளைஞர்களும், மக்களும் இணைந்து மட்டக்களப்பு காந்திப் பூங்கா முன்னால் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்பது தொடர்பில் கையெழுத்து சேகரிக்கும் நிகழ்வினை மேற்கொள்கின்றார்கள். இந்த நிகழ்வு மக்களுடைய மனங்களில் இருந்து எழுந்திருக்கின்ற அனுதாபங்களை வெளிப்படுத்துகின்ற ஒன்றாக இருக்கின்றது. சட்டம், நீதி என்பவற்றிற்கு அப்பால் ஒரு நியாயம் இருக்கின்றது என்பதனை சட்டம் எப்போதும் ஒத்துக்கொள்கின்றது. இந்த அடிப்படையிலே தான் பிரித்தானியாவின் சட்ட வரைபில் ஒப்புரவு நீதி என்கின்ற விடயம் கடைப்பிடிக்கப்பட்டு சட்டம் கண்டு கொள்ளாத விடயங்கள் பல இருக்கின்றன, அவை கண்டு அறியப்பட்டு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலே சான்சரி நீதி மன்றங்கள் என்ற நீதி மன்றங்களை அமைத்து அதன் மூலம் சட்டத்திற்கு அப்பாற்பட்ட நியாயங்கள் வழங்கப்பட்டு வந்தன. காலகதியிலே அந்த முறைமை ஒழிக்கபபட்டிருந்தும் கூட நாட்டின் அரசுத் தலைவர் பதவி வகிப்பவர்கள் இவ்வாறான சந்தர்ப்பங்களில் மக்களின் கோரிக்கைகளை கவனத்தில் எடுத்துக் கொண்டு இவ்வாறான கைதிகளுக்கு விடுதலை வழங்குகின்ற நடைமுறைகள் உலகெங்கிலும் நடைபெற்றுக் கொண்டிருகின்றன. அதனை எமது நாட்டின் ஜனாதிபதி அவர்களும் பின்பற்றி மக்களின் கோரிக்கைகளுக்கு கவனம் செலுத்தி ஒப்புரவு நீதி என்கின்ற நீதி என்பது கடைப்பிடிக்கப்படுகின்ற ஒன்று என்ற விடயத்தையும் கவனத்தில் கொண்டு ஆனந்த சுதாகரன் அவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகின்ற மனிதாபிமானமுள்ள இந்த மக்களின் கோரிக்கைகக்குச் செவிசாய்த்து அவரை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற என்னுடைய அபிப்பிராயத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று தெரிவித்தார்.