கோரளைப்பற்று பிரதேச செயலக கிறிக்கெட் சமர் கிண்ணம் அரச அதிபரிடம் கையளிப்பு

0
350

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பிரதேச செயலகம் மூன்றாவது வருடமாக நடாத்திய கிறிக்கெட் சமரில் மட்டக்களப்பு மாவட்ட செயலக அணி 2ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டதற்கான கிண்ணம் மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமாரிடம் கையளிக்கப்பட்டது.

மாவட்டத்திலுள்ள 12 பிரதேச செயலக அணிகளும் மாவட்ட செயலக அணியுமாக மொத்தம் 13 அணிகள் பங்குகொண்ட இச் சமரில் 18.03.2018ஆம் திகதி ஆரம்பமாகிய முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் கோறளைப்பற்று மற்றும் கோறளைப்பற்று மத்தி செயலக அணிகள் மோதியதில் கோறளைப்பற்று அணி வெற்றி பெற்றது.

தொடர்ந்து 20ஆம் திகதி இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதிப் ஆட்டத்தில் ஆரையம்பதி மற்றும் மாவட்ட செயலக அணியும் மோதியதில் மாவட்ட செயலக அணி வெற்றி பெற்றது.

அன்று பிற்பகல் 3.00 மணியளவில் நடைபெற்ற இறுதி நிகழ்வுகள் பிரதேச செயலாளர் வன்னியசிங்கம் வாசுதேவன் தலைமையில் நடைபெற்றது.

பிரதம அதிதியாக மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்ஷினி ஸ்ரீகாந்த் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார். இந் நிகழ்வில் கணக்காளர் திருமதி.ரெய்வதன், செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

முதலில் துடுப்பெடுத்தாடிய மாவட்ட செயலக அணி 10 ஓவர் நிறைவில் 85 ஓட்டங்களைப் பெற்றனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கோறளைப்பற்று செயலக அணியினர் 10 ஓவர் நிறைவில் 86 ஓட்டங்களைப் பெற்று கிண்ணத்தை வெற்றி கொண்டதுடன் 3வது கிறிக்கெட் சமரில் 2வது முறையாகவும் கிண்ணத்தை வென்று புதிய சாதனையொன்றை பதிவு செய்துள்ளதாக அணியின் தலைவர் பெனடிக்ட் மோசஸ் தெரிவித்தார்.