நாச்சியாதீவு பர்வீனிடமிருந்து ஜனாதிபதிக்கு கண்ணீர் மடல்

0
383

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு!
உங்களுக்கு வாக்களித்த, இந்த நாட்டின் பிரஜை என்கின்ற வகையில் எனது தாழ்மையான அவசர வேண்டுகோளை செவிமடுப்பீர்கள் என நினைக்கிறேன்.

ஜனாதிபதி அவர்களே, இந்த நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதில் இந்த நாட்டின் சிறுபான்மைச் சமூகமான தமிழ், முஸ்லிம் மக்கள் வழங்கிய பங்களிப்பை நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள் என நினைக்கிறேன்.

முன்னர் விடுதலைப் புலிகளாக இருந்து அரசுக்கெதிராக யுத்தம் புரிந்த பலர் இன்று அரசாங்கத்தின் செல்லப்பிள்ளைகளாக அல்லது அரசாங்கத்தின் ஏஜெண்டுகளாக மாறியுள்ள நிலவரம் நான், நீங்கள், இந்த நாட்டு மக்கள், சர்வதேசம் அனைவரும் அறிந்த விடயமே.

ஆனால், அந்த யுத்த காலத்தில் வெறும் அம்புகளாகப் பாவிக்கப்பட்ட சில அப்பாவி தமிழ் இளைஞர்களை இன்னும் சிறையிலடைத்து, அவர்களின் வாழ் நாளையும், வாலிபத்தையும் கேள்விக்குறியாக்கிக் கொண்டிருப்பதில் என்ன நியாயமுள்ளது ஜனாதிபதி அவர்களே!

இந்நாட்டில் நடந்து முடிந்த யுத்தமொன்றினை காரணங்காட்டி, எமது சகோதரர்களான தமிழ் வாலிபர்களை நீங்கள் கேள்வி பார்வையின்றி அடைத்து வைத்திருப்பது உங்கள் மனசாட்சிக்கு சரியாகப்படுகின்றதா? ஆனந்த சுதாகர் என்ற பெயருடைய தமிழ் அப்பாவி இளைஞன் கடந்த பத்து வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளது தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

கௌரவ ஜனாதிபதி அவர்களே,
இப்போது சிறையில் வாடுகின்ற அரசியல் கைதிகள் வெறும் அம்புகள் மாத்திரமே! அவர்கள் சூழ்நிலைக்கைதிகள், அவர்களுக்கும் ஒரு குடும்பமுள்ளது. தாய், தந்தை, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, மாமன், மச்சான், மனைவி, பிள்ளைகள் இப்படி எனக்கும், உங்களுக்கும் இருப்பது போல ஒரு குடும்பமும், பல உறவுகளும் உள்ளன.

உங்கள் கருணைக்கண் அவர்கள் மீது படாதா? உங்கள் கருணைக்கண் எப்போதாவது படும் என்று தினமும் காத்துக்கிடக்கும் அப்பாவி ஜீவன்கள் அவர்கள். அவர்களுக்கு வாழ்வதற்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்குங்கள். அவர்களின் இருண்டு கொண்டிருக்கும் வாழ்க்கைக்கு ஒளி கொடுக்கும் சக்தி உங்கள் கரங்களில் தான் இருக்கிறது.

ஆனந்த் சுதாகரின் மனைவி இறந்து போனார் இரண்டு குழந்தைகளும் அனாதையாகிப்போனார்கள். அண்ணன் சுடுகாட்டுக்கு அம்மாவின் பூத்தவுடலுடன் செல்கின்றான்.

ஒன்றுமறியாத தங்கை, தந்தையோடு சிறைச்சாலை பஸ்ஸில் ஏறுகிறாள். இதயத்தைக் கசக்கி பிழிந்து, கண்களை குளமாக்கிய அந்த புகைப்படங்களை நீங்கள் பார்த்தீர்களா? ஜனாதிபதியவர்களே! ஒரு தந்தையாய் தனது பிள்ளையின் தலையினைக்கூட வருட முடியாத கையறு நிலையில் நீங்கள் இருந்ததுண்டா கௌரவ ஜனாதிபதி அவர்களே?

அந்த சிறுமியைப் போல எனக்கும் ஒரு மகள் இருக்கிறாள். காலையிலும், மாலையிலும், இரவிலும், பகலிலும் என்னைச்சுற்றிச் சுற்றியே அவள் வருவாள்.

அவளின் முத்தங்கள் இந்த உலகிலுள்ள எல்லா சுகங்களை விடவும் இனிமையானது. அனாதையாக்கப்பட்ட அந்த சிறுமிக்கும் தனது தந்தை தொடர்பில் அவ்வாறான எண்ணங்கள் உதிக்காமலா போகும்?

கௌரவ ஜனாதிபதி அவர்களே!
எத்தைனையோ குற்றவாளிகள் இன்று சர்வ சாதாரணமாக, எவ்வித கெடுபிடிகளும் இல்லாமல் இந்த நாட்டில் சுதந்திரமாக நடமாடுகின்ற போது, அப்பாவியான ஆனந்த சுதாகர் போன்றோரை அடைத்து வைத்திருப்பதனால் நம் நாட்டுக்கு என்ன இலாபம் கிடைத்து விடப்போகின்றது?

அவர்களும் சதையும் இரத்தமும் கொண்ட மனிதர்கள், அவர்களுக்கும் சுக துக்கங்கள் உள்ளன, அவர்களுக்கும் இதயமும் அதில் ஈரமும் உள்ளது. அவர்களுக்கு வாழ்வதற்கான ஒரு சந்தர்ப்பத்தை வழங்குங்கள். அது உங்களுக்கு புண்ணியத்தைக் கொண்டு தரும். அவர்களின் விம்மலையும், அழுகையையும் கொஞ்சம் காது தாழ்த்திக் கேளுங்கள்.

கருணையும், இரக்கமும் கொண்ட இந்த நாட்டின் தலைவரே, அந்த அப்பாவியான சின்ன சிட்டுக்குருவிகளின் வாழ்க்கையை அரத்தமுள்ளதாக்குங்கள். அது உங்களின் பொற்கரங்களில் தான் இருக்கிறது. ஆனந்த சுதாகரை விடுதலை செய்வதன் மூலம் நீங்கள் உண்மையிலேயே கருணையின் உருவம் தான் என்பதனை நிரூபியுங்கள். செய்வீர்களா? கௌரவ ஜனாதிபதி அவர்களே?

கண்ணீருடன்.
நாச்சியாதீவு பர்வீன்.
233/ A/3,Pansala Road.
Malwana.
0767877876.
armfarveen@gmail.com